தனிமையில் ஓர் இரவு
“ஆதி… ஆதி…” என்று சமையலறையிலிருந்து கத்திக் கொண்டிருந்தார் கௌசல்யா.
அவரின் சத்தம் கேட்டு அங்கு எட்டிப் பார்த்தார் அந்த வீட்டின் தலைவர் பார்த்தசாரதி. “கௌசி, இப்போ எதுக்கு கத்திட்டு இருக்க..?” என்றார்.
“என்னது கத்துறேனா..! ஏன் சொல்ல மாட்டீங்க..? உங்களுக்கும் உங்க பிள்ளைக்கும் எல்லா வேலையும் செய்றேன்ல… என்ன சொல்லணும்… உங்க பிள்ள காலேஜ் முடிச்சு ஆறு மாசமாச்சு. இன்னும் வேலைக்கு போக வழிய காணோம்… வேலைக்கு தான் போகல, கல்யாணமாச்சும் பண்ணலாம்னா, அதுக்கும் சம்மதிக்கிற வழிய காணோம்… இதோ மணி ஒன்பதாச்சு… இன்னும் இழுத்து பொத்திட்டு தூங்குது… இதெல்லாம் எங்க உருப்படப் போகுது…” என்று வீட்டின் தலைவரை பேசவே விடாமல் புலம்பிக் கொண்டிருந்தார், அவரின் தலைவி.
“இருங்க போய் எழுப்பிட்டு வரேன்… ஏய் ஆதி…” என்று பிள்ளையின் அறை நோக்கி சென்றார் அந்த அன்னை.
சாரதியோ, “ஜஸ்ட் மிஸ்… இன்னும் கொஞ்ச நேரம் இங்க இருந்தா, நம்ம பக்கம் திரும்பிடுவா. அதுக்குள்ள எஸ்கேப் ஆகிடுடா பார்த்தா…” என்றவாறே வெளியே சென்று விட்டார்.
இதையெல்லாம் அறியாத ஆதி, சுகமான நித்திரையில் மூழ்கியிருந்த வேளையில், தூக்கத்தில் காதருகே கேட்கும் கொசுவின் சத்தத்தைப் போல, நீண்ட நேரமாக மெல்லிய ஒலி (கௌசியின் குரல் தான்) கேட்க, அதை அலட்சியப்படுத்தியவள், அருகிலிருந்த டெடி பியரை இன்னும் இறுக்க கட்டிக்கொண்டு தன் தூக்கத்தை தொடர்ந்தாள்.
அறையினுள் நுழைந்த கௌசி கண்டது, ஆதியின் பாதி உயரத்திற்கு இருந்த டெடியின் கழுத்தில் கையையும், அதன்மீது காலையும் போட்டு, அதை நசுக்கிக் கொண்டு படுத்திருந்த அவரின் அருமை புதல்வியையே.
அவளின் நிலை கண்டு தலையிலடித்துக் கொண்டவர், தன் வருங்கால மாப்பிள்ளைக்காக மனதிற்குள் வருந்தினார்! இப்படி கத்திக் கொண்டிருந்தால், அவள் எழும்ப மாட்டாள் என்று மகளைப் பற்றி நன்கறிந்த தாயாய், அருகிலிருந்த குவளை நீரை மொத்தமாக அவளின் முகத்தில் ஊற்றினார்.
அதில் பதறி எழுந்தவள், “அச்சோ, மழை பெய்யுது. என் ட்ரெஸ் நனையுதே…” என்று இன்னும் கண்களை மூடிக்கொண்டு புலம்பினாள்.
“அடியேய் கண்ண முழிச்சு பாரு டி…” எண்டு கௌசி அவளின் தோளைத் தட்ட, அப்போது தான் மெல்ல கண்களை சுருக்கி திறந்தாள்.
எதிரில் கோபமாக இருந்த அன்னையையும் அவரின் கையிலிருந்த காலி குவளையையும் கண்டவள், மழைக்கான காரணத்தை புரிந்து கொண்டவளாக, தாயைப் பார்த்து இளித்தாள்.
“இந்த இளிக்குற வேலையெல்லாம் என்கிட்ட வேணாம்… ஒழுங்கா பல்ல விலக்கிட்டு, ஈரமான பெட் ஷீட்ட மொட்டை மாடில காயப் போடு…” என்று முறைத்துக் கொண்டே கூறினார் கௌசல்யா.
அவரை கட்டிக்கொண்டவள், “ம்மா, கனவுல மட்டும் சிரிச்ச முகமா எழுப்புற… நேர்ல மட்டும் ஏன் திட்டிட்டே இருக்க…” என்று செல்லம் கொஞ்சியவளாக அவரின் கன்னத்தில் முத்தம் பதித்தாள்.
“ச்சீ எரும… எத்தன தடவ சொல்லிருக்கேன், பல்லு விலக்காம, கிஸ் பண்ணாதன்னு…” எண்டு அதற்கும் திட்டிவிட்டு, அவளை குளியறைக்குள் தள்ளிவிட்டே வெளியே வந்தார் கௌசல்யா.
ஆதி புத்துணர்வு பெற்று வருவதற்குள், அவளைப் பற்றி பார்த்து விடலாம். அவளின் முழு பெயர் ஜி. ஆதிரா பார்த்தசாரதி. யாராவது அவளின் பெயரைக் கேட்டால் இப்படி தான் சொல்வாள். தாயின் பெயரை முதலெழுத்தாகவும், தந்தையின் பெயரை பின்பாதியிலும் சேர்த்து சொல்வதில் அவளிற்கு அவ்வளவு பிடிக்கும்.
யாராவது அவளின் பெயர் காரணம் கேட்டால், “உலகத்துலயே பெரிய வலி பிரசவ வலி தான். அதையும் பொறுத்துகிட்டு, என்ன இந்த பூமிக்கு கொண்டு வந்தாங்களே என் அம்மா, அவங்க பேரோட முதல் எழுத்து எப்பவும் என் பேருக்கு முன்னாடி இருக்கணும். இந்த உலகத்துல எனக்கு என்ன பிரச்சனை வந்தாலும், அத நான் தைரியமா எதிர்கொள்ள, என் அப்பா எனக்கு பின்னாடி கண்டிப்பா இருப்பாங்க ஒரு சப்போர்ட்டா. அதனால தான் என் பேருக்கு பின்னாடி அவர் பேரு இருக்கணும்…” என்பாள்.
இப்படி பல சமயங்களில் முதிர்ச்சியாக யோசிக்கும் இவள், சில சமயங்களில் அதற்கு அப்படியே நேர்மாறாக சாக்லேட்டிற்காகவும், ஐஸ்-க்ரீமிற்காகவும் சண்டை போடும் குழந்தை குணமும் உள்ளவள்.
அடுத்த கால் மணி நேரத்தில் அன்னை சொன்ன வேலைகளை முடித்துக் கொண்டு சாப்பாட்டு மேஜையில் அமர்ந்தாள் ஆதி.
அவளின் தாய் பரிமாறிய உணவை உண்டு கொண்டிருந்த ஆதியைக் கண்ட கௌசல்யா, “ஆதி, நேத்து பிளான் பண்ண மாதிரியே, இன்னைக்கு மதியம், நீ அக்கா வீட்டுல போய் இருந்துக்கோ. நானும் அப்பாவும் ஊருல இருந்து வந்ததுக்கு அப்பறம் உன்ன கூட்டிட்டு வரோம்…” என்றார்.
அப்போது தான் ஆதிக்கு முதல் நாள் அவளின் அக்காவுடன் நடந்த அலைபேசி உரையாடல் நினைவிற்கு வந்தது.
“ஹலோ மிஸஸ். சௌந்தர் ..?”
“மிஸஸ். சௌந்தர்லாம் இங்க இல்ல… நான் கீர்த்தி பேசுறேன்… நீங்க கேட்ட மிஸஸ். சௌந்தர், நைட் ஏழு மணிக்கு மேல தான் அவைலபிலா இருப்பாங்க..”
“அடிப்பாவி. இப்படி என் அத்தான கழட்டி விட்டுட்டியே. இரு அம்மா கிட்ட சொல்றேன்…”
இப்படி கலாட்டாவாக ஆரம்பித்தது அந்த உரையாடல். அவர்களின் அன்னையின் குறுக்கீட்டால், ‘சௌந்தர்’ என்ற அப்பாவி ஜீவனிலிருந்து, அவர்களின் டாபிக் வேறு பக்கம் மாறியது.
“கீர்த்தி, நாளைக்கு மதியம் போல, அப்பாவும் நானும் நம்ம சொந்த ஊருக்கு போறோம். ஆதி உங்க வீட்டுல இருக்கட்டும்…” என்றார்.
கீர்த்தி பதில் கூறும் முன்பே, “ம்மா, இதை ஏன் என்கிட்ட சொல்லல..?” என்று வினவினாள்.
“நீ இன்னும் சின்ன பிள்ளல… அதான் உன்கிட்ட சொல்லல…” என்று கீர்த்தி கேலி செய்தாள்.
“ஓய் யார பாத்து சின்ன பிள்ளன்னு சொல்ற… நான் வோட் போடுற வயசத் தாண்டி வந்து நாலு வருஷமாச்சு…” என்று பதிலுக்கு ஆதியும் களத்தில் இறங்கினாள்.
“ஓ அப்போ எதுக்கு மேடம், நைட்டானா எல்லா லைட்டையும் போட்டு வச்சுக்குறீங்க… நைட்ல பேய்க்கு பயந்து கத்த வேண்டியது. கேட்டா பெரிய பொண்ணு தான்னு சொல்ல வேண்டியது.” என்று ஆதியின் பலவீனத்தைக் கூற, அதில் மூக்கு விடைத்த ஆதியோ, “என்னையவே ஓட்டுறியா… போடி உன் வீட்டுக்கெல்லாம் வரமாட்டேன்… இந்த தடவ இங்கயே இருந்து, எனக்கு பயமில்லன்னு ப்ரூவ் பண்ணி காட்டுறேன்…” என்று சபதம் போட, இவர்களின் அன்னையோ, “எக்கேடோ கெட்டு போங்க…” என்று அழைப்பைத் துண்டித்தார்.
ஆதி யோசனையில் மூழ்க, அவளின் தோளைத் தட்டி அவளின் சிந்தனையைக் கலைத்தார் கௌசல்யா.
முதல் நாள் போட்ட சபதத்தின் காரணமாக, “ம்மா, உன் பொண்ணு வீட்டுக்கெல்லாம் போக முடியாது. நான் இங்க காண இருப்பேன்.” என்றாள் தீர்மானமாக.
“நல்லா யோசிச்சுக்கோ டி. அப்பறம் நட்டநடு ராத்திரில போன் பண்ணி பயமா இருக்குனு அழுத, என்ன பண்ணுவேன்னு எனக்கே தெரியாது.” என்று மகளை அறிந்தவராக கூறினார்.
‘ச்சே என் மானத்த வாங்குறதே இவங்களுக்கெல்லாம் பொழப்பா போச்சு…’ என்று மனத்திற்குள் அலுத்துக் கொண்டவள், “ப்ச்… நான் எதுக்கு பயப்படப் போறேன். என்ன பாத்து தான் எல்லாரும் பயப்படனும்.” என்று கூறினாள் ஆதி.
“அது சரி.” என்று முணுமுணுத்தவாறே கிளம்பினார் கௌசல்யா.
மதியம் கிளம்பும்போதும் ஆயிரத்தெட்டு பத்திரங்கள் சொல்லிவிட்டே கிளம்பினார் கௌசல்யா.
சாரதியோ மகளிடம், “பாப்பா எதுனாலும் உடனே போன் பண்ணு…” என்று பாசமிகு தந்தையாய் கூற, அவர்கள் அருகில் நின்றிருந்த கௌசல்யா ஆதியின் முகத்தைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரிக்க, “ப்பா, அதெல்லாம் நான் பாத்துக்குறேன்… நீங்க கிளம்புங்க…” என்று கடுப்புடன் கூறினாள்.
காலையில் மனைவியின் புலம்பல்களை கேட்டு சலித்திருந்த மனிதருக்கு இப்போது மகளின் கடுப்பிற்கான காரணம் தெரியவில்லை. அதனை யோசித்தவாறே பயணத்தை துவங்கினார்.
தாய் தந்தையை அனுப்பிவிட்டு வந்தவள், சோஃபாவில் படுத்து, அலைபேசியை நோண்டிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்திலேயே கண்கள் சொக்க, அப்படியே தூங்கிப் போனாள். மாலையில் எழுந்தவள், மீண்டும் புலனத்தில் நுழைந்து தன் வெட்டி அரட்டையைத் தொடர்ந்தாள்.
இடையில் அவளை இரவுணவிற்காக வீட்டிற்கு அழைத்தாள், கீர்த்தி. ஆதியோ வீம்பாக தானே பார்த்துக் கொள்வதாகக் கூறியவள், ஆன்லைனில் உணவை ஆர்டர் செய்துவிட்டு, அது வருவதற்காக காத்திருந்தாள்.
சிக்கன் நூடுல்ஸை டொமேடோ சாஸுடன் சாப்பிட்டவள், அது செரிக்க நடந்து கொண்டே தோழிகளிடம் பேசிக் கொண்டிருந்தாள். அதுவரையிலும் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது.
அப்போது எதேச்சையாக மணியைப் பார்க்க, அது ஒன்பது எனக் காட்டியது. “என்னது ஒன்பது மணி ஆச்சா..!” என்று ஆதி சத்தமாகவே கூற, அவளின் தோழிகளும் அப்போது தான் மணியை பார்த்திருப்பர் போல, அடுத்த ஐந்து நிமிடங்களில் அனைவரும் ‘டாட்டா’ சொல்லிவிட்டு அழைப்பைத் துண்டித்தனர்.
இப்போது தான் ஆதிக்கு லேசாக பயம் ஏற்பட்டது.
‘இப்படி பயந்து நடுங்கிட்டு இருக்குறதுக்கு நீ உங்க அக்கா வீட்டுக்கே போயிருக்கலாம்.’ என்று ஆதியின் மனச்சாட்சி கூற, ‘ச்சேச்சே யாருக்கு பயம்… எனக்கெல்லாம் பயம் இல்லையே…’ என்று நினைப்பதற்கும் வெளியில் நாய் குரைக்கும் சத்தம் கேட்பதற்கும் சரியாக இருந்தது.
அதில் பயந்தவளைக் கண்டு அவளின் மனச்சாட்சி ‘கெக்கேபிக்கே’ என்று சிரிக்க, ‘அது… லேசான பயம் தான்… இதெல்லாம் எல்லாருக்கும் உள்ளுக்குள்ள இருக்கும், யாரும் வெளிய காட்டிக்க மாட்டாங்க… நீ எதுக்கு இப்படி சிரிச்சிட்டு இருக்க…’ என்று மனச்சாட்சியை திட்டியவாறே, சோஃபாவில் அமர்ந்தாள்.
அமைதியாக இருந்த இடம் அவளின் பயத்தை கூட்ட, தொலைக்காட்சியை உயிர்ப்பித்து சத்தமாக பாட்டை ஓட விட்டாள். அப்படியும் அவள் பயம் குறைந்த பாடில்லை. தொலைக்காட்சி ஒருபுறம் “அழகிய அசுரா” என்று பாடிக் கொண்டிருக்க, ஆதியோ பக்திப் பாடல்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தாள்.
திடீரென்று சமையலறையில் ஏதோ சத்தம் கேட்க, தொலைக்காட்சியை அணைத்தவள் மெல்ல சமையலறையை நோக்கி நடந்தாள் படபடக்கும் இதயத்தோடு…
இப்போது எந்த சத்தமும் இன்றி அமைதியாக இருக்க, சற்று தைரியத்துடன் முன்னே சென்று சமையலறையின் விளக்கை ஒளிர விட்டாள். திடீரென்று ஒளிர்ந்த வெளிச்சத்தால், அதுவரை தன் உணவை தேடிக் கொண்டிருந்த எலி, அவளின் காலுக்குள் புகுந்து, தன் மறைவிடம் நோக்கி ஓடியது.
என்னவோ ஏதோ என்று பயந்து “அம்மா” என்று கத்தியவள், எலியைக் கண்டதும், “ச்சீ… இந்த அப்பா தான் இவ்வளவு பெரிய்ய்ய்ய வீட்ட கட்டி பயமுறுத்துறாருன்னு பாத்தா, இந்த அம்மா எலிக்கெல்லாம் சாப்பாடு போட்டு வளக்குறாங்க…” என்று அன்னையையும் தந்தையையும் திட்டியவள், “இதுக்கு மேல இங்க இருக்க வேணாம். ரூமுக்கு போயிடுவோம்.” என்று அவளின் அறைக்குச் சென்றாள்.
நடுகூடத்தில் விளக்கை எரியவிட்டு, கைப்பேசியிலும் ‘டார்ச்’சை உயிர்ப்பித்ததன் பின்னே தான், அறைக்குச் சென்றாள். அப்போது தான் அவளின் போர்வையை மொட்டைமாடியில் காயப் போட்ட நியாபகம் வந்தது.
‘அய்யயோ… இப்போ என்ன பண்ணுவேன்…’ என்று அவள் மனதிற்குள் அலறும்போதே அவளின் மனச்சாட்சி, ‘இப்பவும் ஒன்னும் கெட்டு போயிடல… மானம் ரோஷம் பாக்காம, ஒரு கால் பண்ணேனா போதும், அத்தான் வந்து கூட்டிட்டு போவாரு.’ என்று யோசனை கொடுக்க, ‘ஹ்ம்ம் அதுக்கு குளிரில ஜன்னி வந்தாலும் பரவால்ல, அவ வீட்டுக்கு மட்டும் போக மாட்டேன்…’ என்று வீம்பாக மனச்சாட்சியுடன் சண்டை போட்டுக் கொண்டிருந்தாள், ஆதி.
‘எவ்ளோ நேரத்துக்குன்னு பாக்க தான போறேன்.’ என்று ஒதுங்கிக் கொண்டது அவளின் நியாயமான மனச்சாட்சி.
ஏதோ ஒரு உந்துதலில், மொட்டை மாடி செல்லும் படிகளில் ஏறினாள், ஆதி.
“மிஸ்டர். பார்த்து, வீட்ட இவ்ளோ பெருசா கட்டிருக்கிங்களே, அதுக்கு லைட் போடணும்னு தோணுச்சா…” என்று அவளின் பயத்தை போக்க, ஏதேதோ நினைத்தபடியே மாடி ஏறினாள்.
‘ஹ்ம்ம் அப்போ சீரியல் செட் தான் வாங்கி போடணும்.’ என்று சம்மன் இல்லாமல் ஆஜரான மனசாட்சியை தலையில் தட்டி உள்ளே அனுப்பினாள்.
அப்படி இருந்தும் அவளைப் போலவே அடங்க மறுத்த அவளின் மனச்சாட்சி, ‘ஆமா ஆதி, நம்ம போன வாரம் ஒரு படம் பார்த்தோமே, உனக்கு நியாபகம் இருக்கா… லைட் ஆஃப் பண்ணா பேய் இருக்கும், ஆன் பண்ணா பேய் போயிடும்…’ என்க, ‘அடிபாதகத்தி மனசாட்சி! எந்த நேரத்துல எத நியாபகப் படுத்துற..?’ என்று நினைத்தவாறே எதேச்சையாக திரும்ப, அவர்களின் வீட்டிற்கு அருகிலிருந்த காலி இடம், விளக்கின் உதவியில்லாமல் இருளில் மூழ்கியிருக்க, அங்கு யாரோ இருப்பது போலவே ஆதிக்கு தெரிந்தது.
வாய் கந்த சஷ்டி கவசத்தை முணுமுணுக்க, அப்பக்கம் திரும்பாமல், வேகவேகமாக சென்று போர்வையை உருவிக் கொண்டு, வீட்டிற்குள் வந்து சேர்ந்தாள்.
மூச்சு வாங்க கட்டிலில் அமர்ந்தவள், ‘யப்பா சாமி, இன்னிக்கு இதுவே போதும். மிச்சத்த நாளைக்கு பாத்துக்கலாம்.’ என்று உடனடி வேண்டுதலை கடவுளிடம் செலுத்திவிட்டு படுக்கையில் சுருண்டு கொண்டாள், அவளின் வேண்டுதல் அவரிடம் சென்று சேர்ந்ததா என்று அறியாமலேயே…
சிறிது நேரம் கழித்து, நன்றாக தூங்கிக் கொண்டிருந்தவளின் தூக்கம் ஏதோவொரு காரணத்தினால் தடைப்பட, மெல்ல கண்களை சுருக்கி விழித்தாள். முதலில் அவளின் கண்களுக்கு இருட்டைத் தவிர வேறெதுவும் தெரியவில்லை.
இருட்டைக் கண்டு துணுக்குற்றவள், ‘படுக்கும்போது லைட்ட போட்டுட்டு தான படுத்தேன்…’ என்று யோசிக்க, அப்போது தான் அவள் படுத்திருப்பது பஞ்சு மெத்தையில் அல்ல, ஏதோ கரடுமுரடான இடத்தில் என்பதை உணர்ந்தாள்.
அதில் சற்று பயந்தவள், கண்களை இருட்டிற்கு பழக்கப்படுத்திவிட்டு அந்த இடத்தை கூர்மையாக பார்த்தாள். இதுவரை இப்படி ஒரு இடத்தை அவள் பார்த்ததே இல்லை. ஆங்காங்கே பெரிய பெரிய குழாய்கள் போன்று வடிவில் இருந்தன. மேலும் யோசித்தவாறே எழ முற்பட, அவள் கீழே ஊன்றியிருந்த கைகளில் பிசுபிசுவென ஏதோ பட, ஒருவித அருவருப்புடன் கைகளை அதிலிருந்து விலக்க முற்பட்டாள்.
அப்போது அவள் தலையில் ஏதோ விழ, பயத்துடன் மேலே பார்த்தாள். இதுவரை இருளில் மூழ்கியிருந்த இடத்தில், சிறு கீற்றாய் வெளிச்சத்தின் சாயல். அவ்வெளிச்சத்தின் மூலம் கண்ணிற்கு புலப்பட்ட காட்சியில், வாய் விட்டு கத்தக்கூட முடியாமல் அதிர்ந்து நின்றாள்.
அவளின் உயரத்தைக் காட்டிலும் இரு மடங்கு உயரத்தில், பிரம்மாண்டமாக நின்றிருந்தது அந்த கரப்பான் பூச்சி. அவள் கண்ட காட்சியை நம்ப முடியாமல், கண்களை அழுத்தி தேய்த்து விட்டு, மீண்டும் ஒருமுறை பார்த்தாள்.
அந்த கரப்பான் பூச்சியின் முன்பக்கம் நீண்டிருக்கும் ஆன்டென்னா (!!!) அவளின் தலைக்கு இருபுறமும் இருக்க, அதன் முகம் அவளின் முகத்தருகே இருந்தது. அருவருப்பும் பயமும் சேர்ந்து எழ, அந்த நொடிகளைக் கடக்க பெரிதும் தடுமாறினாள், ஆதி.
பேச்சே எழாமல் இருந்தவளை நிகழ்விற்கு அழைத்து வந்தது, “என்ன முழிச்சுட்டீயா..?” என்ற கரகரப்பான குரல்.
ஏற்கனவே அதிர்ச்சியில் மூளை குழம்பி போயிருந்தவளிற்கு அந்த குரல் மேலும் அதிர்ச்சியளிக்க, யார் பேசியது என்று சுற்றிலும் பார்த்தாள். அவள் கண்ணிற்கு அகப்பட்டது வரை, அவளையும் அவளின் முன் நின்றிருந்த கரப்பான் பூச்சியையும் தவிர வேறு யாரும் (எதுவும்!!!) இல்லை.
அப்போது அதே குரல் அவளின் அருகே கேட்க, நிமிர்ந்து பார்த்தவளிற்கு சற்று முன் பேசியது அந்த கரப்பான் பூச்சி என்று தெரிந்ததும், மயங்கி விழும் அளவிற்கு அதிர்ந்தாள்.
அவளின் அதிர்ச்சியை பார்த்த கரப்பான் பூச்சி, “இந்தா பாப்பா, திரும்ப மயங்கிடாத…” என்று கூற, ஆதியின் பயம் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
‘என்ன நடக்குது இங்க..? நான் எங்க இருக்கேன்..? இது… இந்த கரப்பான் பூச்சி இவ்ளோ பெருசா இருக்கு. என்கிட்ட பேச வேற செய்யுது! ஐயோ! இப்போ என்ன பண்ணுவேன்…’ என்று ஒரு நொடியில் பல யோசனைகள் அவள் மனதில் தோன்றியது.
அவளின் அமைதியைக் கண்ட அந்த கரப்பான் பூச்சி, தன் ஆன்டென்னாவைக் கொண்டு அவள் முகத்தில் குத்தி, “ஏய் பொண்ணு என்ன கண்ண முழிச்சுட்டே தூங்குறியா..?” என்று கேட்க, அதில் லேசாக கோபம் வர, “என்ன எதுக்கு இங்க வரவச்சுருக்கிங்க..?” என்று புதிதாக தோன்றிய தைரியத்தில் கேட்டு விட்டாள்.
“என்ன கொலை பண்ண உன்ன பழிவாங்க…” என்று அந்த கரப்பான் பூச்சி கூற, ‘எதே பழி வாங்கவா!!! நம்ம எதுவும் ஹிந்தி சீரியலுகுள்ள வந்துட்டோமோ..?’ என்று அவளின் மனம் தீவிரமாக சிந்தித்தது.
மனதின் நினைவுகள் வேறெங்கோ செல்ல, அதை இழுத்துப் பிடித்தவள், அவளின் முன்னே தெரிந்த அதன் முகத்தில் என்ன கண்டாளோ, “நான் எப்போ உங்கள கொன்னேன், மிஸ்டர். கரப்பான் பூச்சி..?” என்று பயத்துடன் வினவினாள்.
“போன வாரம் சனிக்கிழமை நைட்டு பத்து மணிக்கு, கிச்சன்ல நீங்க யாரும் இல்லன்னு பார்த்துட்டு, என் வீட்ட விட்டு வெளிய வந்தேன். அப்போ திடீர்னு வந்த நீ, லைட்ட போட்டதுமில்லாம, என்ன பார்த்து கத்திக்கிட்டே மேல இருந்த பொருட்கள தட்டி விட, அது என்மேல பட்டு நான் நசுங்கி இறந்துட்டேன்..” என்று அது தன் சோகக் கதையைக் கூற, ஆதியோ, அந்த சனிக்கிழமை இரவு நடந்ததை நினைத்துப் பார்த்தாள்.
பத்து மணி வரை, கட்டிலில் ஒய்யாரமாக படுத்துக்கொண்டே கொரியன் சீரியலை ‘ஆ’வென்று பார்த்துக் கொண்டிருந்தவளிற்கு பசியெடுத்தது. ஆனாலும் சமையலறை சென்று ஏதாவது இருக்கிறதா என்று பார்ப்பதற்கு சோம்பேறித்தனமாக இருந்தது. இப்படி வெளியே கூறிக் கொண்டாலும், அவளின் ஆழ்மனதிற்கு தெரியும், பயத்தினாலேயே அவள் செல்ல யோசிக்கிறாள் என்று…
இறுதியில் அவளின் பயத்தை பசி வெல்ல, அலைபேசியில் ‘டார்ச்’சை ஆன் செய்து கொண்டு, மெல்ல எட்டுக்களை எடுத்து வைத்து சமையலறை நோக்கி சென்றாள். (இவளின் திருட்டுத்தனம் மற்றவர்களுக்கு தெரியக் கூடாதல்லவா..!)
முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டே சமையலறையை அடைந்தவள், விளக்கின் சொடுக்கியை போட, அவ்வொளி சமையலறையின் மூலை முடுக்குகளிலெல்லாம் பரவ, அவளின் முன்னே இரண்டு அடி தூரத்தில் இருந்த கரப்பான் பூச்சியின் மேலும் பட்டது.
இவ்வளவு நேரம் இருந்த பசி போய், பயம் அவளை ஆட்கொள்ள, வாயைத் திறந்து கத்தியிருந்தாள். அதில் பயந்து போன கரப்பான் பூச்சி, செல்லும் இடம் தெரியாமல் அங்கும் இங்கும் ஓட, இவள் அதைக் கண்டு குதிக்க, அவளின் கைபட்டு சமையலறை மேடையின் மேலிருந்த சாமான்கள் கீழே விழ என்று அடுத்த இரு நொடிகளில் களேபரமாகி இருந்தது அந்த இடம்.
அவளின் கத்தலில், தூங்கிக் கொண்டிருந்த அவளின் வீட்டினர் பரபரப்புடன் எழுந்து வந்தனர். முதலில் வந்த கௌசல்யா, அவள் செய்திருந்ததைக் கண்டு திட்ட ஆரம்பிக்க, சாரதி தான் மகளின் உதவிக்கென்று வந்தார்.
அப்போது இவர்களின் வீட்டிலிருந்த கீர்த்தியும், “என்ன டி ஆதி, கரப்பான் பூச்சிய கொன்னுட்ட..?” என்று கிண்டலடிக்க, அங்கு நிற்கவே அருவருப்பாக இருந்தது ஆதிக்கு.
அந்த நிகழ்வுகளில் மூழ்கியிருந்தவளை வெளியே கொண்டு வந்தது அதே குரல். “உங்கள மாதிரி தான எங்களுக்கும் குடும்பம், குட்டி எல்லாம் இருக்கும்..? மனுஷனோட உயிர் மட்டும் என்ன பெருசு… உங்கள மாதிரி தான் எங்களுக்கும் இந்த பூமில வாழ்றதுக்கான உரிமை இருக்கு..?” என்றது.
ஆதியோ, “சாரி… எனக்கு உங்கள கொல்லனுங்கிற எண்ணமெல்லாம் இல்ல. உங்கள பார்த்த பயத்துல ஏதோ பண்ணி, அது எப்படியோ உங்கள பாதிச்சுடுச்சு…” என்று மெல்லிய குரலில் கூறியவள், “நாங்க வாழுற இடத்தில நீங்க இருக்குறதால தான இப்படி நடக்குது…” என்று கூறியிருந்தாள்.
“எது நீங்க வாழுற இடமா..? இந்த பூமில வாழ்றதுக்கு உங்களுக்கு எவ்ளோ உரிமை இருக்கோ, அதே அளவு உரிமை எங்களுக்கும் இருக்கு… காட்டையெல்லாம் அழிச்சுட்டு வீடு கட்டி வாழ்ந்துட்டு இருக்கீங்களே… அப்போ நாங்க எங்க வாழ்றதாம்..? ஒன்னு சொல்றேன், நாங்க இல்லனா நீங்களும் இல்ல..!” என்று ஆவேசமாக பேசிய கரப்பான் பூச்சியை தடுத்தது மற்றொரு குரல்.
தனக்கு பின்னிருந்து கேட்ட குரலில் திடுக்கிட்டு திரும்பியவள், பெரிய உருவில் இருந்த எலியைக் கண்டு, ‘ஒரே நாள்ல இன்னும் எத்தன ஷாக் டா குடுப்பீங்க...!’ என்று மனதிற்குள் புலம்பினாள்.
“இன்னும் எவ்ளோ நேரம் பேசிட்டே இருப்ப… சீக்கிரம் அவ கதைய முடி…” என்று அந்த எலி கூற, தனக்கிட்ட பணியை நிறைவேற்ற அந்த கரப்பான் பூச்சியும் அவளின் அருகே வந்தது.
அதைக் கண்டவள், பயத்தில் கண்களை மூடி அலறினாள். அடுத்த இரு நொடிகளில் அவளின் மீது ஏதோ விழ, “என்ன விட்டுடு…” என்று புலம்பினாள்.
“அடி லூசே, நீ தான்டி என் கைய பிடிச்சுருக்க…” என்று கீர்த்தியின் குரல் செவியைத் தீண்ட, பட்டென்று கண்களைத் திறந்து பார்த்தாள்.
அவளிருந்த அறையை சுற்றிப் பார்க்க, அது கீர்த்தியின் வீட்டிலிருக்கும் அறைகளில் ஒன்று என்பது புரிந்தது.
“நான் எப்போ இங்க வந்தேன்..?” என்று குழப்பத்துடன் ஆதி கேட்க, “ஹான் சாப்பிட வாடின்னு கூப்பிட்டதுக்கு வீம்பு பிடிச்சவ, அடுத்த அரை மணி நேரத்துலயே பயமா இருக்குன்னு போன் பண்ணி அழுத. அப்பறம் உன் அத்தான் தான் கூட்டிட்டு வந்தாரு…” என்று கீர்த்தி கூறவுமே அந்த சம்பவம் நினைவிற்கு வந்தது.
மொட்டை மாடியில் துணி எடுக்கப் போகும்போது பயந்தவள், உடனே கீர்த்திக்கு அழைத்து அழ ஆரம்பிக்க, அதற்கு தயாராக (!!!) இருந்த சௌந்தரும் ஆதியை அழைத்து வந்திருந்தான்.
அதன்பின் அவர்களிடம் அரட்டை அடித்துவிட்டு அக்காவின் மகனுடன் விளையாடிக் கொண்டே தூங்கி விட்டாள். ‘ச்சே அப்போ அது கனவு தானா…’ என்று மனதிற்குள் நினைத்தாள் ஆதி.
“ஏய் என்ன திரும்பவும் ட்ரீம்ஸ்ஸா..? எரும எதுக்கு டி இப்படி கத்துன..? நீ கத்துனதுல இவன் வேற எழுந்துட்டான்… இப்போ தான் கஷ்டப்பட்டு தூங்க வச்சேன், இனி எப்போ தூங்குவானோ…” என்று கவலையுடன் அவளருகில் நின்றிருந்த கணவனின் கையிலிருந்த மகனைப் பார்த்தாள் கீர்த்தி.
ஆதி, அப்போது தான், தூக்கம் சொக்கும் விழிகளுடன் நின்றிருந்த சௌந்தரையும், அவன் கைகளில் சிணுங்கிக் கொண்டிருந்த அவர்களின் மகனையும் கண்டாள். பின் இருவரையும் பார்த்து இளித்தவள், “ஹிஹி… ஒரு கெட்ட கனவு அதான் கத்திட்டேன்.” என்றாள்.
“ஹ்ம்ம் என்ன கனவோ…” என்று முணுமுணுத்த கீர்த்தி, அவளின் காலருகே சென்ற கரப்பான் பூச்சியைக் கண்டு, “ப்ச், வீடு முழுக்க கரப்பான் பூச்சியா இருக்கு… இது தொல்ல தாங்க முடியல…” என்றவள் அதை அடிக்க முயல, அவளின் கைப்பற்றி தடுத்த ஆதி, “ஹே கீர்த்தி உனக்கு இரக்கமே இல்லயா… அதுபாட்டிக்கு சும்மா போயிட்டு இருக்கு. அத போய் கொல்ல பாக்குற. பூமி எப்படி நமக்கு சொந்தமோ, அதே மாதிரி தான் அதுக்கும் சொந்தம்…” என்று ஏதேதோ பேசிக் கொண்டிருக்க, கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
சௌந்தர் கீர்த்தியின் காதில், “உன் தங்கச்சிக்கு பைத்தியம் பிடிச்சுருச்சோ..?” என்று மெல்லிய குரலில் கேட்க, “ஹ்ம்ம் நான் வேணா, நீங்க கேட்டீங்கன்னு அவகிட்ட கேட்டு சொல்லவா..?” என்றாள் கீர்த்தி.
‘உன் வாய வச்சுக்கிட்டு சும்மா இருக்க மாட்டீயா..!’ என்று தன்னையே நொந்து கொண்டு சௌந்தர் வெளியேற, அவனைப் பின் தொடர்ந்து கீர்த்தியும் சென்றாள்.
இங்கு அறைக்குள் இன்னமும் அந்த கரப்பான் பூச்சியைக் கண்டு பயந்து கொண்டிருந்தாள் ஆதிரா…
******
இப்படி ஒரு கதை ஏன் எழுதுனேன்... செத்துப்போன மனுஷங்க ஆவியா வர மாதிரி நெறையா கதைகள், படங்கள் பார்த்துருக்கோம்... அதே மாதிரி ஒரு உயிர் தான அந்த கரப்பான் பூச்சியும்... இந்த மாதிரி விலங்குகளும், தாவரங்களும் இறந்து, அதுக்கு காரணமானவங்கள பழி வாங்க கிளம்புனா எப்படி இருக்கும்னு என் மூளைல திடீர்னு உருவான கேள்விய வச்சு தன இந்த கதை எழுதுனேன்... இது சும்மா ஜஸ்ட் லைக் தாட் எழுதுன கதைனாலும், இதுல சொல்லியிருக்க, "நாங்க இல்லனா, நீங்க இல்ல..."ங்கிறது சத்தியமான உண்மை. இந்த உலகம் மனுஷங்களுக்கு மட்டுமில்லங்கிறதை நாம உணரனும்... மற்ற உயிரினங்களோட இயைந்து வாழ முடியலைனா, மனிதனால வெகு காலத்துக்கு இந்த பூமில வாழ முடியாது... இன்னைக்கு நாம இருக்க சூழ்நிலையும் நாம செஞ்ச ஏதோ ஒரு செயல் (பல செயல்கள்) இயற்கையோட சமநிலைய பாதிச்சதால தான். இனிமேலாவது, செயற்கை விஞ்ஞானத்தை மட்டும் பார்க்காம, இயற்கையையும் பாதுகாத்து வாழ்வோம்!!!
உண்மை sis, இந்த பூமியில் இருக்கும் எல்லா உயிரினங்களுக்குமே சம உரிமை இருக்கு, அது கரப்பான்பூச்சியா இருந்தாலும் சரி மனுஷனா இருந்தாலும் சரி😊 ரொம்ப funnyஆன கதை sis. ப்பா!கரப்பான்பூச்சி என்னப்பா தெலுங்கு வில்லன் ரேஞ்சுக்கு பேசுது ,ஒருவேள அதுவும் இந்த ஆதி பொண்ணோட படம் பாத்துருக்குமோ?😉😄 but போங்க பா, கடைசியில் என்ன இருந்தாலும் நீங்க அந்த பச்ச புள்ளைய அந்த வில்லன் கரப்பான்(??) கூட கோத்துவிட்டுட்டு வந்துருக்ககூடாது, இப்போ ஆதியோட நிலைமை( நினசாலெ கண்ணகட்டுதே) truly relatable sis, எனக்கெல்லாம் எலிய கூட சமாலிச்சரலாம், but கரப்பான்,பல்லியெல்லாம் பாத்தாலே Olympicல ஓட்ர மாதிரி ஓடிடுவோம்( ஆனா வெலில மட்டும் பயமா? எனக்கா? ன்னு dialogue விட வேண்டியது?) உங்க humour sense கதையை இன்னும் interestingஅ மாத்துது sis, அதுவும் mindvoice என்னமோ நாம என்ன நினைக்குரோமொ அதுவே வருது? Awesome story sis,இன்னும் நிறைய கதைகள் எழுத வாழ்துக்கள் sis😃😌👏💐
ReplyDeleteTq so much sis😍😍😍 Idhu chuma manasula thonunadha eludhunadhu sis... Adhu ungaluku pidichadhula magizhchi😁😁😁 Telugu pada villain na😂😂😂 Irukumo😜😜😜 Aama miga brammandamana karappan poochila😂😂😂 so apdi dhn irukum... Aadhi pilla romba settai panuchu so adhu kooda korthu vitachu sis😂😂😂 Hehe nanum bayandhangoli dhn🙌🙌🙌 veliya getha kamichukuven😂😂😂 Mindvoice ennoda dhu dhn sis😁😁😁 Last ah sonna serious point ellarukum reach aanadhula happy sis...❤️❤️❤️ Thanks again sis😍😍😍 Keep supporting 😍😍😍
ReplyDeleteஅருமை சகி.....
ReplyDeleteசிரிப்பாக இருந்ததாலும்
சிந்திக்க வேண்டும்.....
சிறு உயிர்களும் வாழ வேண்டும்
சிறப்பு.... 👏👏👏👏👍🤩🤩🤩💐💐💐
மிக்க நன்றி சகி 😍😍😍
Delete