தீதும் நன்றும்
நேரம் காலை எட்டு மணி...
மந்தமான வானிலைக்கேற்ப அந்த
காவல் நிலையமும் சோம்பி தான் இருந்தது.
அப்போது
மத்திய வயதுடைய ஒருவர் அழுது கொண்டே வந்து,
எஸ்.ஐ கதிர்வேலனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார்.
அந்நபர்
அழுது கொண்டே பேச, அது புரியாததால், “அழுகையை நிறுத்திட்டு என்ன நடந்துச்சுன்னு
சொல்லுங்க.” என்று கதிர்வேலன் கூற, அந்த
சத்தத்தில் கவனம் கலைந்த இன்ஸ்பெக்டர் அபிஜித்தும் அங்கு சென்றான்.
கரைபுரண்டு
ஓடும் கண்ணீரை அடக்கியவராக,
“சார்... என் குடும்பத்தை காணோம் சார்!”
என்றார் அவர்.
“முதல்ல,
நீங்க யாரு, எங்க இருந்து வரீங்கன்னு தெளிவா சொல்லுங்க.”
என்று அபிஜித் கேட்க, “சார், என் பேரு உலகநாதன். எனக்கு வேலை துபாய்ல. அதனால என் மனைவி வசந்தியையும், என் மகன் தேவாவையும்,
என் அண்ணன் பூமிநாதன் வீட்டுல தங்க வச்சுட்டு துபாய் போயிட்டேன்.
மாலப்பட்டில தான் வீடு.
என் அண்ணன், அண்ணி, அம்மா, வசந்தி, தேவான்னு அஞ்சு
பேரும் அந்த வீட்டுல தான் இருந்தாங்க. ஆனா... இப்போ அவங்க யாரையுமே அங்க காணோம். எனக்கு பயமா இருக்கு
சார். எப்படியாவது என் குடும்பத்தை கண்டுபிடிச்சு குடுங்க சார்.”
என்று கையெடுத்து கும்பிட்டார் உலகநாதன்.
“ரிலாக்ஸ்
மிஸ்டர். உலகநாதன். நீங்க எப்போ துபாய்ல
இருந்து வந்தீங்க? கடைசியா எப்போ உங்க குடும்பத்தினரோட பேசுனீங்க?”
என்று அபிஜித் கேட்க, “நான் நேத்து நைட்டு தான்
சார் இந்தியா வந்தேன்.” என்று முதல் கேள்விக்கு பதிலளித்த உலகநாதனோ,
“எங்களுக்குள்ள ஒரு சின்ன சண்டை சார். அதனால...
இந்த மூணு மாசமாவே நான் யாரு கூடவும் பேசல.” என்று
மென்குரலில் குற்றவுணர்வு மேலோங்க பதில் கூறினார் உலகநாதன்.
அப்போதே
உலகநாதன் மீது சந்தேகம் ஏற்பட,
அதை பார்வையிலும் வெளிப்படுத்திய அபிஜித்தை கண்ட உலகநாதனோ, “சார், நான் மூணு மாசத்துக்கு முன்னாடி இந்தியா வந்தப்போ,
என்னை துபாய் வேலையை விட்டு இங்க வந்து வேலை பாருன்னு என் அண்ணனும்,
மனைவியும் ரொம்ப டார்ச்சர் பண்ணாங்க. இன்னும் ரெண்டு
வருஷம் தான் துபாய் கான்டிராக்ட். அதை முழுசா முடிச்சுட்டு வந்தா,
இங்க இருக்க அதே கம்பெனில சம்பள உயர்வோட வேலை கிடைக்கும்னு நான் எவ்ளோவோ
சொல்லியும் அவங்க கேட்கல. அதான் சண்டை போட்டுட்டு துபாய் போயிட்டேன்.”
என்றார் விளக்கமாக.
“துபாய்
போன இந்த மூணு மாசத்துல, யாரோடவும் பேசவே தோணலையா? இது தான் சந்தேகமா இருக்கு.” என்று அபிஜித் கேட்க,
“சார்... தப்பு பண்ணா, இப்படி
நானே உங்க கிட்ட வந்து கம்ப்லைன்ட் குடுப்பேனா?” என்ற உலகநாதனோ,
“என் கோபம் எல்லாம் ரெண்டு மாசம் தான். அதுக்கு
அப்பறம் எத்தனையோ முறை நான் கால் பண்ணாலும், கால் போகவே இல்ல.
என் ஃபிரெண்டு ஒருத்தர் கிட்ட சொல்லி, வீட்டுக்கு
வந்த பார்க்க சொன்னேன். அவர், வீடு பூட்டியிருக்குன்னு
சொல்லிட்டாரு. அதுக்கப்பறம் தான் வேகவேகமா கிளம்பி வந்தேன்.
டிக்கெட் கிடைக்கவே ஒரு வாரம் ஆகிடுச்சு. வந்து
பார்த்தா, வீட்டுல யாருமே இல்ல. எங்க போனாங்கன்னும்
தகவல் இல்ல.” என்றார்.
அபிஜித்
தன்னுடன் கதிர்வேலனையும், இன்னும் இரு காவலர்களையும் அழைத்துக் கொண்டு உலகநாதனின் வீட்டை நோக்கி கிளம்பினான்.
*****
கட்டி குறைந்தது
ஐந்து வருடங்கள் தான் இருக்கும் என்பதை பறைசாற்றியபடி நின்று கொண்டிருந்தது அந்த இரண்டு
அடுக்கு தனி வீடு. சுற்றிலும், தரிசு நிலங்களாக காட்சியளிக்க, சற்று தொலைவில் தான் மற்ற வீடுகள் இருந்தன.
அதை குறித்துக்
கொண்ட அபிஜித்தோ, இரு காவலர்களை சற்று தூரத்தில் தெரிந்த வீடுகளுக்கு சென்று விசாரிக்க கூறியவன்,
உலகநாதனை பின்தொடர்ந்து அந்த வீட்டிற்குள் சென்றான்.
வீட்டின்
கதவுகளை பார்த்தவன், ‘நோ ஃபோர்ஸ்ட் என்ட்ரி’ என்று மனதிற்குள் குறித்துக் கொண்டான்.
வீட்டிற்குள்
நுழைந்ததும், ஒருவித
வாடை நாசியை தாக்க, அது பல நாட்களாக ஆட்கள் புழங்காமல் பூட்டி
வைத்த வீடு என்பதை மட்டுமல்லாமல் வேறு எதையோ உணர்த்தவும் செய்தது.
வீட்டின்
ஒவ்வொரு பகுதியையும் தீவிரமாக பார்வையிட்ட அபிஜித்தோ, “மிஸ்டர். உலகநாதன், உங்க அண்ணனுக்கு பசங்க இல்லையா?” என்று கேட்டபடி சுவற்றில் மாட்டியிருந்த குடும்ப புகைப்படத்தை பார்த்தான்.
அதில், உலகநாதன் மற்றும் அவர் கூறிய
ஐவருடன், மற்றொருவனும் இருந்தான்.
அவன் பார்வை
சென்ற இடத்தை கவனித்த உலகநாதன்,
“சார், அண்ணனுக்கு ஒரே பையன், பேரு வாசு. வேலை விஷயத்துல அண்ணனுக்கும் அவனுக்கும் சண்டை
வந்து, சென்னை போனவன் தான். அதுக்கப்பறம்
இங்க வரல.” என்றார்.
வாசுவின்
முகத்தையே உற்று பார்த்த அபிஜித்,
“இங்க வரலன்னு உங்களுக்கு உறுதியா தெரியுமா?” என்றபடி
அங்கிருந்து நகர, உலகநாதனுக்கு உள்ளும் புறமும் பயமும் பதற்றமும்
பரவியது, அவன் சொல்லிய தோரணையில்!
அப்போது
சமையலறையை சோதனையிட்டுக் கொண்டிருந்த கதிர்வேலன், “சார், இதை பாருங்க.”
என்று கத்தி அழைக்க, மற்ற இருவரும் சத்தம் வந்த
திசை நோக்கி விரைந்தனர்.
கதிர்வேலன்
காட்டிய இடத்தில், குருதி படிந்த இரும்பு தடி இருக்க, அதைக் கண்ட அபிஜித்தோ,
“கதிர், ஃபாரான்சிக் டீமை உடனே வர சொல்லுங்க.
இன்னும் கொஞ்சம் போலீஸ் ஃபோர்ஸ் தேவை.” என்று அடுத்தடுத்த
கட்டளைகளை பிறப்பிக்க, உலகநாதனோ இரத்தம் காய்ந்திருந்த அந்த இரும்பு
தடியை பார்த்து கதறியபடி கீழே விழுந்தார்.
*****
அடுத்த இரண்டு
மணி நேரத்தில், மோப்ப நாய்களின் உதவியுடன், அந்த வீட்டிற்கு பின்புறம்
புதைக்கப்பட்டிருந்த ஐவரின் உடல்களையும் வெளியே எடுத்தனர் காவலர்கள்.
தடயவியலாளர்கள்
அந்த வீட்டையும், உடல்களையும் முதற்கட்ட ஆய்வுக்கு உட்படுத்தினர்.
அபிஜித்தோ, சற்று முன்னர் அருகிலிருந்த
வீடுகளில் விசாரிக்க சென்ற காவலர்கள் கூறியதை எண்ணிப் பார்த்தான்.
“சார்,
அந்த வீடுகளுக்கு போய் விசாரிச்சதுல, இந்த வீட்டுல
இருந்தவங்களுக்கும் அவங்களுக்கும் பெருசா பழக்கமில்லன்னும், அப்பப்போ
வெளிய போகும்போது, சிரிக்கிறது தான்னும் சொல்றாங்க. அதோட, இந்த வீட்டுக்கும் அங்க இருக்க வீடுகளுக்கும் தூரம்
அதிகமா இருக்குறதால, இங்க என்ன நடந்துச்சுன்னு சரியா தெரியலையாம்.
ஆனா, கொஞ்ச நாளாவே இந்த வீட்டுல ஆட்கள் புழங்கி
பார்க்கவே இல்லன்னு சொல்றாங்க. சரியா, எப்போலயிருந்துன்னு
தெரியல.” என்று அந்த காவலர்கள் கூறினர்.
உடனே கதிர்வேலனிடம், “பக்கத்துல சிசிடிவி இருக்கான்னு
விசாரிச்சு, ஏதாவது சந்தேகப்படும்படி இருந்தா பார்த்து வைங்க.”
என்று அனுப்பிய அபிஜித், உலகநாதனிடம் பேச சென்றான்.
குடும்பம்
மொத்தத்தையும் சடலமாக பார்த்த அதிர்ச்சியில் அழுகை கூட மறந்து, திக்பிரம்மை பிடித்ததை போல
ஓரமாக அமர்ந்திருந்தவரை சமீபித்த அபிஜித், “மிஸ்டர். உலகநாதன்” என்று அழைக்க, விரக்தியான
பார்வை ஒன்றை அவனுக்கு பதிலாக அளித்தார் அவர்.
அவரின் சூழ்நிலை
புரிந்தாலும், வழக்கின் தீவிரத்தை உணர்ந்து, “உங்களுக்கு யாரு மேலயாவது
சந்தேகம் இருக்கா?” என்று அபிஜித் வினவ, ‘இல்லை’ என்று தலையசைத்தார் உலகநாதன்.
“உங்க
அண்ணன் மகன் ஃபோன் நம்பர் குடுங்க. அவருக்கும் தகவல் சொல்லணும்ல.”
என்று அபிஜித் கேட்க, மறு பேச்சில்லாமல் அவன் கேட்டதை
கொடுத்துவிட்டு, உயிரில்லா உடல்களில் பார்வையை பதித்தார் உலகநாதன்.
*****
அதே நாள்
இரவு...
“கதிர்,
அட்டாப்சி என்னாச்சு?” என்று அபிஜித் வினவ,
“சார், பாடிஸ் எல்லாம் டீக்கம்போஸிங்கோட ஃபைனல்
ஸ்டேஜ்ல இருக்காம். சோ, ஃபுல் ரிப்போர்ட்ஸ்
கிடைக்க நாளைக்கு ஈவினிங் ஆகிடும்னு டாக்டர் சொல்றாரு.” என்றான்
கதிர்வேலன்.
“இனிஷியல்
கமெண்ட்ஸ் எதுவும் இல்லையா?” என்று அபிஜித் வினவ, “சார், பாடிஸோட நிலையை வச்சு பார்த்தா, அவங்க இறந்து கிட்டத்தட்ட ரெண்டு மாசம் இருக்கலாம்னு சொல்றாங்க. எக்சாக்ட் டேட் அண்ட் டைம் நாளைக்கு தான் தெரியும். விக்டிம்ஸ்
வசந்தி, தேவகி அண்ட் வைஷாலி மூணு பேரையும் கழுத்தை நெறிச்சு தான்
கொலை பண்ணியிருக்காங்க. பூமிநாதன் அண்ட் தேவா ரெண்டு பேரோட தலைல
அடிச்சு கொலை செஞ்சுருக்காங்க. கிச்சன்ல கிடைச்ச ஐயன் ராட் தான்
மர்டர் வெப்பன். அதே மாதிரி, ஒரு பெட்ரூம்
கட்டிலுக்கு கீழ கிடந்த கயிறை ஃபாரான்சிக் டீம் அனலைஸ் பண்ணிட்டு இருக்காங்க.”
என்றான் கதிர்வேலன்.
“அந்த
ஐயன் ராட்ல எதாவது ஃபிங்கர்பிரின்ட்ஸ் இருக்கா?” என்று அபிஜித்
வினவ, “ரெண்டு ஃபிங்கர்பிரின்ட்ஸ் ஐடென்டிஃபை பண்ணியிருக்காங்க
சார். அது விக்டிம்ஸ் யாரோடவும் மேட்ச் ஆகலை.” என்றான் கதிர்வேலன்.
அப்போது
அவர்களருகே வந்த ஏட்டு தணிகாசலம்,
“சார், விக்டிம் பூமிநாதனோட மகன் வாசு வந்துட்டாரு.”
என்று கூற, வந்தவனை விசாரிக்க சென்றான் அபிஜித்.
பயணத்தினால்
ஏற்பட்ட களைப்பும், விஷயம் தெரிந்ததால் உண்டான கவலையும் முகத்தில் ஏந்தியபடி நின்றிருந்தான் இருபத்தியெட்டு
வயதான வாசு.
அவனிடம்
அறிமுகப்படுத்திக் கொண்ட அபிஜித்,
“வாசு, உங்க குடும்பத்தோட சண்டைன்னு கேள்விப்பட்டேன்.”
என்று அபிஜித் கூற, “ஆமா சார், படிப்பு வேலைன்னு எல்லா விஷயத்திலயும் அப்பா அவரோட முடிவை என்மேல ஃபோர்ஸ் பண்ணாரு.
அதான் கோபப்பட்டு சென்னைக்கு போயிட்டேன்.” என்றான்
தயக்கத்துடன்.
“ஓஹ்,
அதுக்கப்பறம் உங்க வீட்டுக்கு போகவே இல்லையா? ஃபோன்
கான்டேக்ட்ஸ் இருந்ததா?” என்று அபிஜித் வினவ, “இல்ல சார், வீட்டுக்கு வரல. ஆனா,
அப்பப்போ அம்மா, சித்தி பேசிட்டு தான் இருப்பாங்க.
ரொம்ப ஃப்ரீக்குவண்ட்டா இல்ல.” என்றான் வாசு.
அவன் சொல்வதை
தீவிரமாக கேட்டுக் கொண்டவனின் கவனத்தை அலைபேசி அழைப்பு அதன் பக்கம் திருப்ப, “டூ மினிட்ஸ் வாசு.”
என்று சற்று தள்ளி வந்து அழைப்பை ஏற்றான்.
“சார்,
மூணு மாசத்துக்கு முன்னாடி, கார்ல யாரோ வந்ததா,
பக்கத்து வீட்டுக்காரங்க சொன்னாங்க. சிசிடிவில
அதை செக் பண்ணப்போ, அந்த கார் வாசுவோடதுன்னு தெரிய வந்துருக்கு.
அதே கார், அடுத்த ஒரு மாசத்துக்கு அப்பறமும் அங்க
வந்துருக்கு. வாசுவோட இன்னொரு பொண்ணும் அந்த கார்ல இருந்துருக்காங்க
சார். முதல் நாள், ஒரு மணி நேரத்துல அங்க
இருந்து கிளம்பிட்டாங்க. ஆனா, அடுத்த நாள்,
முழுசாவே அங்க இருந்துட்டு, மூணாவது நாள் தான்
கிளம்பியிருக்காங்க.” என்று மறுமுனையில் கூறப்பட, அழைப்பை துண்டித்த அபிஜித், கதிர்வேலனிடம், “மேட்ச் ஹிஸ் ஃபிங்கர்பிரின்ட்ஸ்.” என்று கூறிவிட்டு வாசு
இருந்த இடத்திற்கு வந்தான்.
“அப்பறம்
வாசு, சென்னை போனதுக்கு அப்பறம் ஊருக்கு வரலன்னு சொன்னீங்க தான?
அப்போ மூணு மாசத்துக்கு முன்னாடி உங்க கார் மட்டும் ஊருக்கு வந்துச்சோ?”
என்று கேலி விரவிய குரலில் கேட்க, அதைக் கேட்ட
வாசுவுக்கு தூக்கிவாரிப் போட்டது.
பதற்றத்தில்
வியர்த்து வழிய, அதை துடைக்க கூட தோன்றாமல், என்ன சொல்வதென்று தெரியாமல்
விழிக்க, அப்போது உலகநாதனை அழைத்துக் கொண்டு வந்தாள் கதிர்வேலன்.
“மிஸ்டர்.
உலகநாதன், உங்களுக்கு அம்னீஷியா எதுவும் இல்லையே!
ஏன்னா, நீங்க ஊருக்கு வந்தப்போ உங்க அண்ணன் மகனும்
வீட்டுக்கு வந்துருக்காரு. ஆனா, அதைப் பத்தி
எதுவும் சொல்லவே இல்ல.” என்று அபிஜித் கேட்க, இப்போது உலகநாதனும் வாசுவை பார்த்துவிட்டு என்ன சொல்வது என்று தெரியாமல் திகைத்தார்.
“அப்போ
வீட்டுல நடந்த சண்டை உங்களால இல்ல, ரைட்?” என்ற அபிஜித்தின் கேள்விக்கு மௌனமே பதிலாக கிடைக்க, “இன்னமும் பேசாம இருந்தீங்கன்னா, ரெண்டு பேரும் சேர்ந்து
தான் இந்த கொலைகளை செஞ்சீங்கன்னு கேஸை க்ளோஸ் பண்ணிட்டு போயிடுவேன்.” என்று மிரட்டினான் அபிஜித்.
அதில் பதறிய
உலகநாதனோ, “சார்
சார்... நான் எப்படி என் குடும்பத்தை... எல்லாத்தையும் சொல்லிடுறேன் சார். இவனால தான் அன்னைக்கு
சண்டை.” என்று வாசுவை கோபத்துடன் பார்த்தவாறே கூற ஆரம்பித்தார்
உலகநாதன்.
*****
“அப்பா,
ஃபைனலா கேட்குறேன், என் காதலை அக்செப்ட் பண்ணுவீங்களா மாட்டீங்களா?” என்று
வாசு வினவ, “இது காதலே இல்லன்னு சொல்லிட்டு இருக்கேன்.
இதுல, வீராப்பா கேள்வி வேற கேட்குறியா?”
என்று மகனை அடிக்க சென்றார் பூமிநாதன்.
அவரின் கரம்
பற்றி தடுத்த வாசுவோ, “என்னை அடிக்க உங்களுக்கு என்ன உரிமை இருக்கு?” என்று
கத்த, பூமிநாதன் ஆடிப்போய் பின்னே நகர்ந்து விட, அவனின் தாய் தேவகியோ, அவனை அடித்து, “யாரை பார்த்து என்ன கேள்வி கேட்குற?” என்றார் அழுதபடி.
“ப்ச்,
நான் இப்போ என்ன தப்பா கேட்டுட்டேன்? அவரு என்ன என்னோட பையாலஜிக்கல் அப்பாவா? இதுல, அவரோட இறந்து போன முதல் மனைவியோட மகளை நான் லவ் பண்றதுல என்ன தப்பு?”
என்று வாதிட்டான் வாசு.
அவன் கேட்ட
கேள்விக்கு பதிலாக அந்த வீடே மௌனத்தில் மூழ்கி போக, “இனி, அவனை யாரும் கேள்வி கேட்க வேண்டாம். அவன் வாழ்க்கை அவனோட முடிவு.” என்று குடும்பத்தினரிடம் சொன்ன பூமிநாதனோ, வாசுவிடம் திரும்பி,
“இனி, இந்த வீட்டுக்கு நீ வர தேவையில்ல.”
என்று கூறிவிட்டு சென்று விட, அவனும் கோபத்துடன்
வீட்டை விட்டு சென்றான்.
*****
உலகநாதன்
தயக்கத்துடன் கூறி முடிக்க, அருகிலிருந்த வாசுவை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “உங்க
அண்ணனோட முதல் மனைவி?” என்றான் அபிஜித்.
“அவங்க
பிரசவத்தப்போவே இறந்துட்டாங்க சார். அதுக்கு எங்க அண்ணன் தான்
காரணம்னு அவங்க வீட்டுல சண்டை போட்டு, பிறந்த குழந்தையையும் அவங்க
கஸ்டடிக்கு மாத்தி வாங்கிட்டாங்க. அதுக்கப்பறம் அவங்க குடும்பத்தை
நாங்க பார்க்கவே இல்ல.” என்றார் உலகநாதன்.
“இப்போ
நீங்க வாயை திறக்குறீங்களா வாசு? உங்க அப்பா... சாரி உங்க அம்மாவோட ரெண்டாவது கணவர்... அவரு தான் உங்க
வாழ்க்கைல தலையிடலைல, அப்பறம் ஏன் உங்க குடும்பம் மொத்தத்தையும்
கொலை செஞ்சீங்க?” என்று அபிஜித் வினவ, பதறிய
வாசுவோ, “சார், என்ன சார் இது அநியாயமா
இருக்கு! நான் எதுக்கு அவங்களை கொலை செய்யணும்?” என்றான்.
“அதையே
தான் நாங்களும் கேட்குறோம், எதுக்கு கொலை செஞ்சீங்க?”
என்ற அபிஜித், “சரி, வேற
விதமா கேள்வி கேட்குறேன். அன்னைக்கு சண்டை போட்டு போன நீங்க,
எதுக்கு ஒரு வாரத்துல திரும்ப வீட்டுக்கு வந்தீங்க? அதுவும், அந்த பொண்ணோட?” என்றான்
அபிஜித்.
அதில் திகைத்த
வாசு என்ன சொல்வதென்று தெரியாமல் வாய் குழற,
“இந்த எவிடன்ஸ் பத்தாதா?” என்று சிசிடிவியில் பதிவாகி
இருந்த அவனின் வாகனத்தின் புகைப்படத்தை அவனிடம் காட்டியவன், “அப்போ சரி, இந்த எவிடன்ஸையும் பாருங்க. உங்க வீட்டுல கிடைச்ச மர்டர் வெப்பன்ல இருக்க ஃபிங்கர்பிரின்ட்ஸ், உங்களோடதோட பெர்ஃபெக்ட்டா மேட்ச் ஆகியிருக்கு. இன்னொரு
ஃபிங்கர்பிரின்ட் அநேகமா அந்த பொண்ணோடதா தான் இருக்கும்.” என்று
சாதாரணமாக கூறினான் அபிஜித்.
அவளைப் பற்றி
கூறியதும், இனி
தப்பிக்க முடியாது என்று எண்ணினானோ என்னவோ, “சார், அவளை இதுல இழுக்க வேண்டாம். எல்லா தப்பும் நான் தான்
பண்ணேன்.” என்றான் வாசு.
“அது
எப்படி வாசு? சேர்ந்து கொலை செய்வீங்க. ஆனா, தண்டனை உங்களுக்கு மட்டுமா? சரி, அதை அப்பறம் பார்ப்போம். இப்போ
நடந்ததை சொல்லுங்க. எதுக்கு கொலை செஞ்சீங்க? அதுவும், பெத்த அம்மா, வயசான பாட்டி,
ஸ்கூல் படிக்கிற தம்பி... இவங்களோட சேர்த்து,
எதுக்குன்னே தெரியாம மாட்டிகிட்ட சித்தி, உங்களை
கோபப்படுத்தின அப்பா! ஏன்?” என்றான் அபிஜித்.
அதுவரை பயமும், பதற்றமும் மட்டுமே வெளிப்படுத்திய
வாசுவுக்கு முதல் முறையாக குற்றவுணர்வு உண்டாக, கதறி அழுதான்.
அவனருகே
அமர்ந்திருந்த உலகநாதனோ, அவனை திட்டி, அடித்து, அழ,
எதற்கும் எதிர்வினை இல்லை அவனிடம்!
சிறிது நேரம்
அவனை அழ விட்ட அபிஜித், மீண்டும் கேள்வி கேட்க, இம்முறை பதிலை கொடுத்தான் வாசு.
“அப்போ,
எங்க கல்யாணம் நடந்தா போதும்னு தான் இருந்துச்சு. பிரபாக்கு முன்னாடி, யாருமே பெருசா தெரியல. அதான், சண்டை போட்டு வந்ததும், இனி அந்த குடும்பமே வேண்டாம்னு முடிவு பண்ணி, எங்க வாழ்க்கையை
ஆரம்பிச்சோம். கொஞ்ச நாளுக்கு அப்பறம் தான், அப்பா எல்லா சொத்தையும் தேவா பேர்ல எழுதி வைக்கப் போறதா, அப்பாவோட ஆடிட்டர் கிட்டயிருந்து தகவல் வந்துச்சு. முதல்ல,
எனக்கு அதுல எந்த எதிர்பார்ப்பும் இல்ல. ஆனா,
இதை கேள்விப்பட்ட பிரபா தான் கோபப்பட்டா. நியாயமா,
அந்த சொத்து அவளுக்கும் எனக்கும் தான் வர வேண்டியதுன்னு சொன்னா.
நாள் போக போக, சொத்து வந்தா தான் கல்யாணம்னு உறுதியா
இருந்தா.” என்று அவன் சொல்லும்போதே குரல் கமற, உலகநாதன் அவன்மீது பாய்ந்து விட்டார்.
“ச்சே,
சொத்துக்காவா டா மொத்த குடும்பத்தையும் கொன்ன?” என்று ஆத்திரத்துடன் அவர் அடிக்க, அவரை தடுத்த கதிர்வேலன்,
அவருடன் தள்ளி நின்று கொண்டான்.
வாசுவோ பெரும்
குற்றவுணர்வுடனும் தயக்கத்துடனும்,
“அதான் ஒரு மாசத்துல திரும்ப வந்தோம். ஆனா,
நாங்க என்னதான் சொன்னாலும், எங்களுக்கு சொத்து
இல்லன்னு உறுதியா சொன்னாரு அப்பா. அதான் கோபத்துல...”
என்று சொல்ல முடியாமல் அமைதியானான்.
“சோ,
அந்த பொண்ணு கோபத்துல பிளான் போட்டு குடுக்க, ரெண்டு
பேரும் கொலை செஞ்சுட்டீங்க!” என்று முடித்தான் அபிஜித்.
*****
மறுநாள்... பிரபா அபிஜித் முன்னே அமர்ந்திருந்தாள்.
“வாசு
அவரோட வாக்குமூலத்தை குடுத்துட்டாரு. நீங்களும் உங்க காரணத்தை
சொன்னா, வேலை சீக்கிரம் முடிஞ்சுடும்.” என்றான் அபிஜித்.
அதில், அவளின் முகம் வெறுப்பில் கசங்க,
“எனக்கு அவங்க யாரையும் பிடிக்கல. அதான் காரணம்.”
என்றாள் சாதாரணமாக.
“ஓஹ்...”
என்று அபிஜித் கூற, “ஆமா சார். நான் என்ன தப்பு செஞ்சேன்? என்னை எப்படியோ போகட்டும்னு
விட்டுட்டு, அவரு அவருக்கான குடும்பத்தை அமைச்சுக்கிட்டு சந்தோஷமா
வாழ்ந்தாரு. அவருக்கு என்னை பத்தின கவலையே இல்ல. அதான், அவரோட சந்தோஷம் மொத்தமா அழியனும்னு நினைச்சேன்.”
என்றாள் பிரபா.
“அதுக்காக
தான் வாசுவை காதலிச்சீங்களா?” என்று அபிஜித் வினவ, இப்போது அவளிடம் முன்னில்லாத பொறுமை வந்திருந்தது.
“வாசுவை
நான் உண்மையா தான் காதலிச்சேன். அவன் யாருன்னு தெரிஞ்சதுக்கு
அப்பறம், அவனை வச்சு அந்த குடும்பத்தை ஆட்டிப் படைக்கலாம்னு நான்
நினைச்சது உண்மை தான். ஒரு கட்டத்துல, இதெல்லாம்
தேவையான்னு எனக்கே தோண ஆரம்பிச்சது, எங்க காதலால தான்.
ஆனா, எப்போ இந்த சொத்து விஷயம் தெரிய வந்துச்சோ,
அப்போவே என் கோபம் பெருகிடுச்சு. சொத்தை பிரிக்கும்
போது கூட என்னை பத்தி அவரு யோசிக்கலங்கிற கோபம்!.” என்று முடித்தாள்
பிரபா.
“சரி
எப்படி கொலை செஞ்சீங்க?” என்று அபிஜித் வினவ, “முதல் நாள் சண்டை போட்டுட்டு போனதும், நான் தான் வாசு
கிட்ட பிளான் சொன்னேன். முதல்ல அவன் வேண்டாம்னு தான் சொன்னான்.
அதுவும், குடும்பத்துல இருக்க எல்லாரையும் எதுக்கு
கொலை செய்யணும்னு கேட்டான். நான் தான், நம்ம குழந்தையோட எதிர்காலத்துக்காகன்னு அவனை கன்வின்ஸ் பண்ணேன்.” என்றவள் வயிற்றை மெல்ல தடவினாள்.
மீண்டும்
அவளே, “ரெண்டாவது
நாள் மதியம் போல வீட்டுக்கு போனோம். அவங்க அம்மா தான் எங்களை
உள்ள கூப்பிட்டு பேசுனாங்க. வீட்டுல பொண்ணுங்க மட்டும் இருந்ததை
நோட் பண்ணிக்கிட்டோம். மதிய நேரம் அவங்க ஒவ்வொரு ரூம்ல இருந்தது
எங்களுக்கு ஈஸியா இருந்துச்சு. முதல்ல, தூங்கிட்டு இருந்த பாட்டியை கயிறு வச்சு கழுத்தை நெறிச்சு கொலை செஞ்சோம்.
அப்பறம் அவனோட சித்தியையும் அப்பறம் அவனோட அம்மாவையும் கொலை செஞ்சோம்.
ஈவினிங் அவனோட தம்பி வர வரைக்கும் வெயிட் பண்ணி, அவன் உள்ளே வந்ததும் தலையில ராடால அடிச்சோம். ரெண்டு
அடியில ரத்தம் வந்து இறந்துட்டான். லாஸ்ட்ல, மிஸ்டர். உலகநாதன்... அவரு அவ்ளோ
சீக்கிரம் சாகலை. பத்து முறைக்கும் அதிகமா அடிச்சதும் தான் இறந்தாரு.
நைட்டு இருட்டுனதும், வீட்டுக்கு பின்னாடியே எல்லாரையும்
புதைச்சுட்டோம். பக்கத்துல வீடு இல்லாதது எங்களுக்கு சாதகமா இருந்துச்சு.”
என்று உணர்வில்லாத குரலில் கூறி முடித்தாள் பிரபா.
அனைத்தையும்
ஆவணப்படுத்திக் கொண்ட அபிஜித் அங்கிருந்து நகர, அத்தனை நேரம் அவள் பேசியவற்றை அழுகையுடன் கேட்டுக்
கொண்டிருந்த உலகநாதனோ, அவள் அருகே வந்து, “இங்க இவ்ளோ பேசுறியே மா, இதெல்லாம் உன்னை வளர்த்த தாத்தா
பாட்டி கிட்ட கேட்டுருக்கியா? உன்னை எங்ககிட்ட இருந்து பிரிச்சு
கூட்டிட்டு போனப்போவே, உன்னை வளர்க்கணும்னு காரணம் காட்டி பணம்
வாங்கிட்டு தான் போனாங்க. இப்போ சொத்தை பிரிக்கிறப்போ கூட உனக்கு
சேர வேண்டியதை உங்க தாத்தா கிட்ட குடுத்துட்டு, மிச்சத்தை தான்
தேவா பேர்ல எழுதப் போறேன்னு சொன்னாரு. இதை எல்லாம் உன் கிட்ட
சொல்ல அவ்ளோ சங்கடப்பட்டாரு. அவரை போய்... நான் கூட வேண்டாம்னு தலைபாடா அடிச்சுக்கிட்டேன். இன்னைக்கு
மொத்தமா எல்லாரையும் காவு குடுத்துட்டு தனி மரமா நிக்குறேன்!” என்று புலம்பியவர், அவளைக் காணாமல் சென்று விட,
முதல் முறையாக பிரபாவின் விழிகள் கண்ணீரில் பளபளத்தன.
Comments
Post a Comment
Please share your thoughts...