(மனித)மிருக வேட்டை
அவளின் பார்வை அந்த கல்லறையையே வெறித்திருந்தது. மனதை கல்லாக்கி வைத்திருந்தாலும், அதில் எழுதியிருந்ததைக் கண்டவளின் கண்களிலிருந்து கசிந்தது அந்த ஒரு துளி கண்ணீர்.
அதில் எழுதியிருந்தது இதுவே…
பெயர் : அபர்ணா
தோற்றம் : 07.03.2011
மறைவு : 17.10.2019
ஆம் தாயின் கருவறையிலிருந்து வெளிவந்த எட்டாம் வருடத்திலேயே கல்லறையை அடைந்திருந்தாள் அந்த சிறுமி. அந்த பிஞ்சு முகம் தன்னைக் கண்டதும் மலர்ந்து சிரிக்கும் அந்த சிரிப்பும், குறும்பு தவழும் முகமும், ‘கவிக்கா கவிக்கா. ‘ என்று தன் பின்னாலேயே சுற்றித் திரியும் அவளை நினைத்த மாத்திரத்தில் கண்களில் ஆறாய் பெருகும் நீரைக் கஷ்டப்பட்டு கட்டுப்படுத்தி வைத்திருந்தாள், அபர்னாவிற்கு செய்து கொடுத்த சத்தியத்திற்காக…
“கவி…” – தன்னருகே ஒலித்த குரலில் சுயம் அடைந்தாள்.
“க்கும்… எல்லாம் ரெடியா..?”
“ம்ம்ம் ரெடி தான்… நாங்களே பார்த்துக்குறோமே…” என்று அவன் தயங்கியவாறே கூற…
“விச்சு…” என்றாள். அவளின் குரலில் இருந்தது கோபமா, ஆதங்கமா, சோர்வா என்று பிரித்தறிய முடியவில்லை.
அவளால் ‘விச்சு’ என்றழைக்கப் பட்டவனோ, ஒரு பெருமூச்சை விட்டு, “வா கவி…” என்று அவளை அழைத்துச் சென்றான்.
பழைய குடவுன் போன்ற இடம் அது. அங்கு ஒரு ஓரத்தில் ஒருவன் உடை கிழிந்து, அங்கங்கு இரத்தம் வழிந்தபடி கட்டிப்போடப் பட்டிருந்தான். அடித்த அடியிலோ, அல்லது கொடுக்கப்பட்ட மயக்க மருந்தின் வீரியத்திலோ இன்னும் மயங்கியே கிடந்தான்.
அவள் கேள்வியாக விச்சுவை பார்க்க, மயக்கமாக இருந்தவனிற்கு காவலுக்காக இருந்த இருவரில் ஒருவன், “எப்பவும் குடுக்குற டோஸ் தான் குடுத்தோம்… அவன் ஏற்கனவே ட்ரக்ஸ் எடுத்துருப்பான் போல… ஸோ ரெண்டும் சேர்ந்ததுல இன்னும் மயக்கமா இருக்கான்… எவ்ளோ அடிச்சாலும் கான்சியஸுக்கு வர மாட்டிங்குறான்…” என்றான்.
அவள் யோசிக்க, விச்சுவோ, “ரொம்ப நேரம் வெயிட் பண்றது சேஃப் இல்ல கவி… ஏற்கனவே அஞ்சு பேரு… இப்போ போலீஸ் இந்த கேஸ்ல தீவிரமா இருக்காங்க… ஸோ எதா இருந்தாலும் சீக்கிரம் முடிச்சுட்டு கிளம்பிடலாம்…”
“அவனால இப்போ வலிய உணர முடியுமா…?” என்று அவள் கேட்க, அந்த இருவரில் மற்றொருவனோ வேகமாக சென்று அவனை உதைத்தான்.
“ஹ்ஆ…” என்ற முனகல் சத்தம் அவனிடத்தில்.
ஏதோ முடிவெடுத்தவளாக அவள் பேசத் துவங்கினாள்.
“அவன் கை கால் விரல்ல இருக்க நகத்த பிச்சு எடுங்க… அப்போ அவன் நினைவு திரும்பும்… அவனுக்கு முழுசா நினைவு திரும்பியதும், எப்பவும் போல, எது இருக்கறதால ‘ஆண்’ங்கிற திமிருல இப்படி தப்பு மேல தப்பு செஞ்சானோ அத வெட்டி அவன் கண்ணு முன்னாடி எரிச்சுடுங்க…” – அவள் கண்களில் தெரிந்த தீவிரத்தில் அவர்களே ஒரு நொடி மிரண்டு தான் போனார்கள்.
ஒரு தலையசைப்புடன் அவனின் வாயை துணி கொண்டு அடைக்கச் சென்றவனைத் தடுத்தவள், “அவன் கத்துற சத்தம் என் காதுல கேக்கணும்…” என்றாள்.
அதன்பின் அங்கு அவனிற்காக தண்டனை நிறைவேற்றப்பட்டுக் கொண்டிருந்தது. ஆம் தண்டனையே… எத்தனையோ பெண்களை, தன் இச்சைக்காக, அவர்கள் கதற கதற வன்புணர்வு செய்து, அவர்களின் எதிர்காலத்தையே கேள்விக்குறியாக்கி, அதற்காக சிறிதும் வருத்தப்படாமல் பெருமை பேசித் திரிந்து கொண்டிருக்கும் கயவர்கூட்டத்தில் ஒருவனிற்கான தண்டனையே அவனிற்கு வழங்கப்பட்டுக் கொண்டிருந்தது.
அவனின் ஒவ்வொரு அலறலும் அவனால் பாதிக்கப்பட்ட பெண்களின் கண்ணீருக்கு விடையாக இருந்தது.
அவள் இப்படி ஒருவரின் துன்பத்தில் இன்பம் காணுவாள் என்று ஒரு வருடத்திற்கு முன் சொல்லியிருந்தால், அவள் நம்பியிருக்க மாட்டாள். குறைந்தது அப்படி சொன்னவர்களை திட்டவாவது செய்திருப்பாள்.
ஆனால் இன்றோ, அவளின் கண்முன் ஒருவன் துடித்துக் கொண்டிருக்க, அதை ரசித்திருந்தாள் அவள். கண்கள் கனலைக் கக்க, தானே சென்று அவனின் உடலில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் கூறு போடும் அளவிற்கு ஆத்திரம் வர, அவள் அருகில் நின்றிருந்த விச்சு, அவளின் மனநிலையை யூகித்தவனாய் அவளை அங்கிருந்து வெளியே அழைத்துச் சென்றான்.
“ப்ச் இப்போ எதுக்கு என்ன வெளிய கூட்டிட்டு வந்த, விச்சு…?”
“நீ நீயா இல்ல கவி… இது என் கவி இல்ல…” என்றான் ஆதங்கமாக…
அவளின் கண்ணோரத்தில் கண்ணீர்த் துளிகள் எட்டிப் பார்க்க, “உன்னோட கவி செத்துட்டா விச்சு… அப்பு இறந்தப்போவே அவளும் இறந்துட்டா… இப்போ இருக்குறது சங்கவி… இந்த மாதிரி உலகத்துக்கு பாரமா இருக்க மனுஷ மிருகங்கள அழிக்குறதே குறிக்கோளா வச்சு வாழ்ந்துட்டு இருக்க சங்கவி நான்…” என்றாள்.
அவள் கண்களில் கண்ணீர்த் துளிகளை மீறி தெரிந்த உறுதியில், விச்சுவே கலங்கித் தான் போனான்.
“ரிலாக்ஸ் கவி…”
“எப்படி ரிலாக்ஸா இருக்க சொல்ற விச்சு… ஒவ்வொரு நாளும் யாருக்கிட்டயும் மாட்டிடக்கூடாதுன்னு பயத்தோட வாழ்ந்துட்டு இருக்க பொண்ணுங்க, ஆறு வயசோ அறுபது வயசோ… வயசு வித்தியாசமே பார்க்காம, தங்களோட இச்சைக்காக பயன்படுத்திக்கும் இந்த ஜந்துக்கள் வாழுற உலகத்துல எப்படி நிம்மதியா இருக்க முடியும்… இந்த உலகம் எங்க போயிட்டு இருக்குனே தெரியல… இன்னும் கொஞ்ச நாள்ல ஒரு பொண்ணு வேலைக்கு போயிட்டு பத்திரமா வீடு வந்து சேருறதே பெரிய அச்சீவ்மெண்ட்டா இருக்கும் போல…” என்று அவள் காட்டமாக கூறிக் கொண்டிருந்தாள்.
“உனக்கு தெரியுமா விச்சு… நார்த்ல ஒரு குக்கிராமத்தில, ஓடிப் போய் கல்யாணம் பண்ணிக்கிட்டதுக்காக, அந்த பொண்ண நிர்வாணமா கம்பத்துல கட்டி வச்சு…”அதற்கு மேல் சொல்ல முடியாமல் கண்களை மூடிக் கொண்டாள்.
“இது அவங்க பஞ்சாயத்து தீர்ப்பாம்… ச்சே என்ன ஒரு அரக்கத்தனம்… கள்ளிப்பால் குடுத்து பிஞ்சுக் குழந்தைய கொல்றதுல இருந்து, இதோ இந்த மாதிரி தீர்ப்புங்கிற பேருல அவங்கள கொஞ்சம் கொஞ்சமா சித்தரவதை பண்ணி கொல்றது வரை, இந்த சமுதாயத்துல பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் தினமும் நடந்துகிட்டு தான் இருக்கு.
அன்னைக்கு பாஞ்சாலில ஆரம்பிச்சு இன்னைக்கு எத்தனையோ பெண்கள் அவங்க மானத்திற்காகவும் வாழ்கைக்காகவும் உரிமைக்காகவும் போராடிட்டே தான் இருக்காங்க… பாஞ்சாலிய காப்பாத்த கிருஷ்ணர் இருந்தாரு… ஆனா இன்னைக்கு நிர்பயாக்களையும், ஆசிஃபாக்களையும் காப்பாத்த யாரு இருக்காங்க…”
“அதான் கோர்ட்…”
“ஒரு கேஸுக்கு ஏழு வருஷமாச்சே தீர்ப்பு வர… சரி அது பரவால… இன்னும் எத்தனையோ கேஸ் வெளியுலகத்துக்கு தெரியாமையே இருக்கே… இங்க மட்டும் தான் பாதிக்கப்பட்டவங்க தலை குனிஞ்சு, கூனிக் குறுகி இருக்காங்க, தப்பு செஞ்சவங்க தலை நிமிர்த்தி திமிரா அலையுறாங்க…” என்றாள்.
அப்போது உள்ளே கேட்ட அவனின் உச்சபட்ச சத்தத்தில் வேலை முடிந்தது என்பதை உணர்ந்து கொண்டனர்.
வெளியே வந்த அந்த இருவரும் இவர்களைப் பார்த்து தலையசைத்தனர்.
“என்ன முடிஞ்சிடுச்சா… எப்பவும் போல காட்டுல தூக்கி போட்டுடுங்க… ஏதாவது மிருகம் அதோட பசிய தீர்த்துக்கட்டும்…” என்றவள் கண்களை மூடினாள்.
‘உனக்காக தான் அப்பு…’ என்று மனதிற்குள் சொல்லிக் கொண்டாள்.
ஆம்… அவளின் அப்புவிற்காக, அப்புவினால் தானே இந்த வேட்டை…
ஒரு வருடத்திற்கு முன்…
தன் நண்பர்களுடன் வழக்கம் போல் பார்ட்டியில் இருந்தவளின் அலைபேசி ஒலிக்க, அந்த இரைச்சலில் பேச முடியாது என்பதனால் வெளியே சென்று பேசினாள்.
வெளியே சென்றதிலிருந்து அவளைக் கவனித்துக் கொண்டிருந்த விச்சுவிற்கு ஏதோ தவறாகத் தோன்றியது, அவளின் திகைத்த பாவனையில். அவளின் அருகில் வந்தவன், அவளை உலுக்காத குறையாக அழைத்த பின்பே சுயத்திற்கு வந்தவளின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது.
அதைக் கண்டு பதட்டமானவன், “ஹே கவி என்னாச்சு..? போன்ல யாரு…?” என்று வினவினான்.
“விச்சு… அ.. அப்பு…” மேற்கொண்டு சொல்ல முடியாமல் தவித்தவளின் கையிலிருந்த அலைபேசியை பறித்து பேசியவனிற்கும் அதிர்ச்சியே… முதற்கட்ட அதிர்ச்சி விலக, சுதாரித்தவன் உடனே கிளம்பினான் அவளுடன்.
அவர்களின் வாழ்நாளில் அமைதியாக கழிந்த முதல் மகிழுந்து பயணம் அதுவே ஆகும்… அப்பு (எ) அபர்ணா… சங்கவி தன் பிறந்த நாளிற்காகவும், மற்ற குடும்ப விஷேசங்களுக்கும் நன்கொடை அளிக்கச் செல்லும் அநாதை ஆசிரமத்தில் வேலை பார்க்கும் ஒருவரின் மகள். அப்புவிற்கும் கவிக்கும் இடையே உள்ள உறவு அழகானது… ஆத்மார்த்தமானது.
சங்கவி, தமிழ்நாட்டில் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒருவரான மகேந்திரனின் ஒரே மகள். சிறு வயதிலிருந்தே செல்லமாக வளர்ந்ததினால், எந்த விஷயத்திலும் அலட்சியமாகவே இருப்பாள். அநாதை ஆசிரமத்திற்கு நன்கொடை அளிப்பது கூட, தன் நண்பர்களிடம் பெருமை பேசுவதற்காக மட்டுமே… அப்படி இருந்தவள் மாறுவதற்கு காரணம் அப்பு என்றால், அது மிகையாகாது…
அவளின் கடந்த காலத்தை நினைத்துக் கொண்டிருந்தவளை நிகழ்விற்கு அழைத்து வந்தான் விச்சு.
அது அநாதை ஆசிரமத்திற்கு அருகே இருக்கும் ஒரு பூங்கா… வாசலில் அந்த வாட்ச்மேனோ கைகளை பிசைந்து கொண்டிருந்தான்.
விச்சு அவனிடம் சென்று ஏதோ கேட்க, அவனும் ஒரு புதரைக் காட்டினான். அவளிற்கு எதுவும் மூளையில் பதியவில்லை. மெதுவாக அவன் கைகாட்டிய இடத்திற்கு சென்று பார்த்தாள்.
அங்கு அரை மயக்க நிலையில் இருந்தாள் அப்பு. அங்கு கிழிந்த ஆடையை அவள் மீது போர்த்தியிருக்க, வெளியே தெரிந்த பாகங்களில் கீறல்களிலிருந்து ரத்தம் கசிந்துக் கொண்டிருந்தது. மெல்லிய முனகல் அவளிடம்.
“ப்ளீஸ்… வேணா…ம் அங்…கிள்… வலிக்குது…”
இதைக் கேட்டவள் இதயத்தை கசக்கி எறிவது போன்ற வலியை உணர்ந்தாள்.
வேகமாக அவளைக் கைகளில் அள்ளியவள், விச்சுவிற்கு சைகை செய்ய, அவனும் அதிவேகமாக வண்டியை செலுத்திக் கொண்டிருந்தான்.
அப்புவின் வலியைக் கண்டவள், “ஒண்ணுமில்ல அப்பு… இதோ இப்போ ஹாஸ்பிடல் போயிடலாம்… எல்லாம் சரியாகிடும்…” என்று ஆறுதல் கூறினாள். அப்புவிற்கு கூறினாளா இல்லை தனக்கே கூறிக் கொண்டாளா, அவளிற்கு மட்டுமே தெரிந்த விஷயம்.
ஒரு வழியாக மருத்துவமனையில் அப்புவை சேர்த்து விட்டு, வெளியில் போடப்பட்டிருந்த நாற்காலியில் கண்களை மூடி அமர்ந்து விட்டாள்.
ஆசிரமத்திலிருப்பவர்களிடம், அப்புவிற்கு விபத்து என்று கூறி சமாளித்திருந்தான் விச்சு. அவர்களை வர சொல்லிவிட்டு அவனும் கவிக்கு அருகில் அமர்ந்தான்.
அவனின் அருகாமையை உணர்ந்தவளாய், “எப்படி டா மனசு வந்துச்சு… எட்டு வயசு பொண்ணுகிட்ட இப்படி நடந்துக்க எப்படி மனசு வந்துச்சு…” என்று அவன் தோள் சாய்ந்து கதறினாள்.
“உனக்கு தெரியும்ல விச்சு… அவ பொறந்தபோ அவள முதல கைல வாங்குனது நான் தான்… இப்போ அதே கைல அவள இந்த நிலைமைல தூக்கிட்டு வர மாதிரி ஆகிடுச்சே டா…” என்று விம்மினாள்.
கவியின் 18வது பிறந்த நாளன்று ஆசிரமத்திற்கு வந்த போது, நிறைமாதமாக இருந்த அப்புவின் அம்மாவிற்கு வலியெடுக்க, இவளும் அவர்களுடன் மருத்துவமனைக்கு சென்றிருந்தாள். அங்கு அப்புவை முதலில் கைகளில் வாங்கியவளும் அவளே.
தன் பிறந்த நாளன்று பிறந்ததாலோ, பிறந்தவுடன் வீறிட்டு அழுதவள், இவள் கைகளில் வாங்கியபோது அழுகையை நிறுத்தி லேசாக சிரித்ததாலோ, ஏதோ ஒன்று அந்த பூக்குவியலின் மீது பாசம் வைக்க காரணமானது.
அன்றிலிருந்து கவியின் பழக்கவழக்கங்களிலும் சிறு சிறு மாற்றங்கள். எப்போதாவது எட்டிப்பார்க்கும் ஆசிரமத்திற்கு அடிக்கடி வர ஆரம்பித்தாள். அப்பிஞ்சின் சிரிப்பில் தன்னை மறந்து அவளுடன் நேரம் செலவிட ஆரம்பிக்க, அப்புவும் இவள் பின்னே சுற்றிக் கொண்டிருந்தாள்.
சொல்லால் வடிக்க இயலாத இத்தகைய அற்புத உறவு கொண்டவர்கள், அவர்களின் இந்த உறவின் காலம் எட்டே வருடங்கள் என்பதை அறிந்திருந்தால்….
ஐ.சி.யூவிலிருந்து வெளிவந்த மருத்துவரிடம் விரைந்தவள், “டாக்டர்… அப்புக்கு இப்போ எப்படி இருக்கு…?” என்று வினவினாள்.
கண்களில் ஒரு வித அலைப்புறுதலுடன், அவர் சொல்லப்போகும் சொல்லிற்காக காத்திருந்தவள், அந்த மருத்துவரின் பாவனையிலேயே, அவர் கூறப்போகும் செய்தியை யூகித்திருந்தாலும், ஒரு வேலை அவரின் வாய் மொழி வேறாக இருக்கும்… இருக்க வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டாள்.
அந்த கடவுளும் அவள் வேண்டுதலிற்கு செவி சாய்க்கவில்லை போலும்…
“சாரி டு சே திஸ்… ஷி இஸ் கவுன்டிங் ஹெர் டைம் நவ்…” (“இதை சொல்றதுக்கு மன்னிச்சுக்கோங்க... அவ வாழ்நாளோட கடைசி நிமிஷங்கள எண்ணிட்டு இருக்கா…”) என்றார் அந்த மருத்துவர், அவளின் எதிர்ப்பார்ப்பை பொய்யாக்கியபடி…
அங்கேயே மடங்கி அழுதாள் கவி. அவள் வாழ்நாளில் இப்படி ஒரு துன்பத்தை அவள் அனுபவித்ததே இல்லை… பிறக்கும் போதே செல்வ சீமாட்டியாக பிறந்தவள் அல்லவா…
விச்சு தான் அவளை எழுப்பி, சமாதானம் செய்து கொண்டிருந்தான். அப்போது அங்கு வந்த செவிலி, “அந்த பொண்ணுக்கு முழிப்பு வந்துடுச்சு… உங்கள பார்க்கணும்னு சொல்றாங்க…” என்றாள்.
“நா… நா போக மாட்டேன் விச்சு…” என்று அழுதவளை சமாளித்து உள்ளே அனுப்பினான் விச்சு.
அவளைக் கண்டதும், எப்போதும் போல, “கவிக்கா…” என்றழைத்தவளின் குரலில் விம்மல் வெடிக்க, அழுதவாறே அவளருகே சென்றாள்.
மெதுவான குரலில் பேசினாள் அப்பு. “கவிக்கா… நம்ம பிரேவ் கேர்ள்ஸ் தான… நம்ம அழுகலாமா…” – என்றோ ஒரு நாள் அப்பு அடிப்பட்டு அழுது கொண்டிருந்தபோது கூறியதை இப்போது கூறினாள்.
கவி எதுவும் பேசவில்லை. அப்புவையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
“கவிக்கா… இன்னும் கொஞ்ச நேரத்துல நான் சாமிக்கிட்ட போயிடுவேன்ல…” – அப்புவின் குரலில் பிசிரில்லை. அணைய போகும் விளக்கினைப் போல பிரகாசமாக இருந்தாள் அப்பு.
“அந்த மூர்த்தி அங்கிள் இருக்காருல அவரு தான், நான் அழுக அழுக ஏதோ செஞ்சாரு… நான் வேணாம் வலிக்குதுன்னு சொன்னேன்… ஆனா அவரு கேக்கவே இல்ல…” என்று அவள் சொன்னதும் அவளை அணைத்து கதறினாள்.
“நீங்க ஃபீல் பண்ணாதீங்க கவிக்கா… நான் போய் சாமிக்கிட்ட சொல்றேன்… அந்த மூர்த்தி அங்கிளுக்கு பனிஷ்மெண்ட் குடுக்க அவரு உங்களுக்கு ஹெல்ப் பண்ணுவாரு… கவிக்கா என்ன மாதிரி நம்ம சுபி குட்டிக்கும் ஆகுமா… அந்த பாப்பா பாவம்ல அந்த பாப்பாக்கு இப்படியாகாம பாத்துக்குறீங்களா…”
“கண்டிப்பா அப்பு மா… நான் பாத்துக்குறேன்… நீயும் என்னோட வா டா… உன்னையும் இனிமே நல்லா பாத்துப்பேன்…”
“இல்ல கவிக்கா… நான் இப்போ உங்கக்கூட வந்துட்டா யாரு சாமிக்கிட்ட சொல்றது… நான் போய் சொல்றேன் சரியா…” என்றவள் சோர்வாய் ஒரு புன்னகை சிந்தினாள்.
பிறந்த போது அவள் சிந்திய முதல் புன்னகையை பார்த்தவளும் அவளே… இதோ அவளின் இறுதி புன்னகையை பார்ப்பவளும் அவளே…
அப்புவின் கடைசி ஆசையையே அவளின் வாழ்க்கை லட்சியமாக ஏற்றாள். அவளின் ஜர்னலிச படிப்பும் அவளிற்கு உதவி புரிந்தது. மூர்த்தி மட்டுமில்லாமல் இதோ ஆறாவதாக ஒருவனிற்கு அவனிற்கான தண்டனையை பரிசளித்திருக்கிறாள்.
இவளின் முயற்சியில் எப்போதும் போல் உறுதுணையாக இருக்கிறான் விச்சு. மற்ற இருவரையும் அவர்களின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கடத்தலில் போது சந்தித்தாள்.
அதில் ஒருவர், தன் பத்து வயது குழந்தையையும், மற்றொருவர் நிறைமாத கர்ப்பிணி மனைவியையும் இந்த மிருகங்களின் கோர பசிக்கு இழந்தவர்கள். இவளின் முயற்சிக்கு தங்களின் பங்கும் இருக்க வேண்டுமென இவளுடன் சேர்ந்து கொண்டவர்கள்.
மேலும், இம்மாதிரி சூழ்நிலைகளை சமாளிக்க பெண்களுக்கு விழிப்புணர்வு கொடுத்து வருகின்றனர். தற்காப்பு கலை பயில வேண்டிய அவசியத்தையும் பெண்களிடையே பரப்பி வருகின்றனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு தகுந்த மருத்துவ ஆலோசனைகள் வழங்க ஏற்பாடு செய்தும் கொடுக்கின்றனர்.
நிகழ்காலம்…
அதே கல்லறை… அவளின் அதே வெறித்த பார்வை… மனதில் அப்புவிடம் பேசிக் கொண்டிருந்தாள்.
“உங்கிட்ட சொன்ன மாதிரி அவங்களுக்கு பனிஷ்மெண்ட் குடுத்துட்டே இருக்கேன் அப்பு… என்னால முடிஞ்ச வரைக்கும் வேற யாரும் இப்படி பாதிக்கப்படாம பாத்துக்குறேன்… ஆனா நான் தனியாளா எவ்வளவு தான் பண்ண முடியும்… என்னையும் தாண்டி நடக்குற விஷயங்கள் என்ன ரொம்ப பாதிக்குது அப்பு…” என்று கூறிக் கொண்டிருக்க, யாரோ தன் உடையை இழுப்பது போல தோன்றியது.
கீழே குனிந்து பார்த்தால், ஒரு அழகிய சிறுமி அவளை குனியுமாறு சைகை செய்தாள்.
இவளும் குனிய, அவள் கைகளில் ஒரு காகிதத்தை திணித்து, அவள் கன்னத்தில் முத்தம் கொடுத்து ஓடிவிட்டாள்.
அந்த காகிதத்தில், ‘காட் வில் ஹெல்ப் யூ’ என்று அச்சிடப்பட்டிருந்தது. தனக்கு முத்தம் கொடுத்த அந்த சிறுமியைத் தேடினாள். ஆனால் கண்ணுக்கெட்டிய தூரம் வரை, அங்கு அவளைத் தவிர வேறு யாருமில்லை.
ஒரு மெல்லிய சிரிப்புடன், தன் அடுத்த (மனித)மிருக வேட்டைக்கு தயாரானாள், அந்த வேட்டைக்காரி.
Comments
Post a Comment
Please share your thoughts...