Banff Springs Hotel, Canada
கனடாவில், 1888ஆம் ஆண்டு, பல ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட விடுதி தான் இந்த பான்ஃப் ஸ்பிரிங்ஸ் விடுதி. இங்கிலாந்து மகாராணி முதல் மர்லின் மன்ரோ வரை பல பிரபலங்களின் கால்தடம் பதிந்த இந்த விடுதி, மற்றொரு விஷயத்திற்கும் பிரபலமானது. அது தான் ‘மிஸ்ஸிங் ரூம் 873’
இதைப் பற்றி பல தகவல்கள், பலரின் நேரடி காணொளிகளை இணையத்தில் பார்க்கலாம். அப்படி என்னவானது அந்த 873 அறைக்கு… வாங்க பார்க்கலாம்.
பல வருடங்களுக்கு முன்பு, அந்த அறை எண் 873இல் ஒரு குடும்பம் இறந்ததாக கூறப்படுகிறது. அதுவும் அந்த குடும்பத்து ஆண் மற்ற இருவரையும் கொடூரமாக கொன்று விட்டு தானும் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
அதற்கு பின்னர், அந்த அறையை புதுப்பித்து மீண்டும் விருந்தினர்களை அங்கு தங்க வைக்கும்போது, அவர்கள் அந்த அறையில் பல அமானுஷ்ய நிகழ்வுகள் நடந்ததாகக் கூறுகின்றனர்.
பல கோர அலறல்கள் கேட்பதாகவும், விளக்குகள் திடீரென்று அணைக்கப்படுவதாகவும் அங்கிருந்தவர்கள் தெரிவிக்க, விடுதி நிர்வாகம் அந்த அறையை நிரந்தரமாக மூடிவிட்டனர் என்றும் கூறுகின்றனர்.
அந்த குடும்பத்தின் ஆவி மட்டுமில்லாமல் இன்னும் சில ஆவிகள் இங்கு உலவுவதாகவும் கூறுகின்றனர்.
உதாரணத்திற்கு, திருமண கனவோடு அந்த விடுதியில் தயாராகிக் கொண்டிருந்த மணப்பெண் அவளின் திருமணம் நின்றுவிட்ட செய்தி கேட்டு அதிர்ச்சியில் ஓட, படிகளில் தவறி விழுந்ததால் கழுத்து எலும்புகள் நொறுங்கி இறந்துவிட்டார். அவரின் ஆவி, அவர் இறந்த படிகளில் ஏறும் சிலரை தள்ளிவிடுவதாகவும் கூறுகின்றனர் சிலர்.
இன்னொரு உதாரணம்… இங்கு பணிபுரிந்த பணியாளர் ஒருவரின் விசுவாசத்தை பற்றியது. அவர் இறக்கும் போது, இந்த விடுதியை விட்டு செல்ல மாட்டேன் என்று கூறியே இறந்திருக்கிறார். அதே போல, அவரின் ஆவி அங்கு சுற்றுவதாகவும் கூறுகின்றனர். விருந்தினர்களின் பயணப்பொதிகளை அவர்களின் அறை வரையிலும் எடுத்து வந்த பணியாளருக்கு பணம் தர திரும்பிப் பார்க்கும்போது அவர்களின் கண்கள் முன்னே அந்த உருவம் மறைவதை கண்டு இருக்கின்றனர் சிலர். அது அவர் தான் என்றும் கூறுகின்றனர்.
இது போல பல கதைகள் இந்த விடுதியோடு சம்பந்தப்படுத்தி பலர் கூறினாலும், அந்த விடுதி நிர்வாகமோ அதைப் பற்றி வாயைத் திறக்க மறுக்கிறது. முக்கியமாக அந்த அறை எண் 873யை அடைத்தற்கான காரணத்தை வினவ, அப்படி ஒரு அறையே இல்லை என்பது போல நடந்து கொண்டது நிர்வாகம். அதன் பின்னர் தான் இந்த ‘மிஸ்ஸிங் ரூம் நம்பர் 873’ பலரின் கவனத்திற்கு சென்றது.
பலரும் அதைப் பற்றி ஆராய அங்கு சென்றனர். அவர்களின் ‘ஆராய்ச்சி’யில் கண்டுபிடிக்கப்பட்டவை:
அந்த விடுதியில் இருக்கும் மற்ற தளங்களில் ‘73’ என்று முடியும் வகையில் அறைகள் இருக்க, எட்டாம் தளத்தில் மட்டும் 873 என்ற அறை இல்லை.
மற்ற அறைகளின் முகப்பில் மேற்கூரையில் சிறு மின்விளக்கு இருக்கிறது. அதே போல, அந்த 873 அறை இருந்தற்கான இடத்திலும் மேற்கூரையில் ஒரு மின்விளக்கு இருக்கிறது.
மற்ற இடங்களில் இருக்கும் சுவரில் காதுகளை வைத்துக் கேட்டால் கேட்கும் சத்தமும், அந்த அறை இருந்த இடத்திலிருந்து வரும் சத்தமும் வித்தியாசமாக இருந்தது.
இதே போல பலவற்றைக் கூறி அங்கு அறை இருந்ததற்கான சாத்தியக்கூறுகளை விளக்கினர் அந்த ‘ஆராய்ச்சி’யாளர்கள்.
தற்போது அங்கு பணியாற்றிய ஒருவர், 872 மற்றும் 874 ஆகிய அறைகளை விரிவுபடுத்துவதற்காகவே அந்த ‘873 அறை’ அடைக்கப்பட்டது என்ற செய்தியைக் கூறியுள்ளார். ஆனால், இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்..? அந்த அறை என்ன காரணத்திற்காக அடைக்கப்பட்டிருக்கும்…
Comments
Post a Comment
Please share your thoughts...