2 - புவியே காட்சிப்பிழையாய் Skip to main content
Please do read and support * கதைகளைப் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எனது கதைகள் : தடம் மாறிய தடயம், வெள்ளையாடை தேவதை, (மனித)மிருக வேட்டை, தனிமையில் ஓர் இரவு, கருவறை தா(ண்டி)ங்கிய சுமை, குற்றங்கடிதல், உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே, மிரட்டும் அமானுஷ்யம், என்னில் இணைய உன்னை அடைய, புதிராய் நீயெனக்கு, நீயாக நான் நானாக நீ, வழி மாறிய பயணம் Ongoing : என் வாழ்வின் வானவில் நீதானே, துஷ்யந்தனின் காதலி, இதயத்தின் நிறம் பார்த்ததால், நிழலாய் ஒரு நினைவு   Future works : வினோதனின் வினோதையே, நெஞ்செங்கும் நுண்பூகம்பம், சீரியல் கில்லி

Recent posts

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)

2 - புவியே காட்சிப்பிழையாய்

 



காட்சிப்பிழை 2

 

ரிஷப் அந்த ரகசிய அறையைத் திறந்ததும், உள்ளே என்ன இருக்கிறது என்ற ஆவலுடன் அந்த அறையைக் கண்டாள் நவி. அப்போது நந்து மீண்டும் அவனின் பயபுராணத்தை ஆரம்பிக்க, அதில் அவளின் ஆவல் கலைந்து வெளியே வந்தாள் நவி.

 

அவர்கள் இருவரையும் உள்ளே அழைத்த ரிஷப், கைகளை விரித்து, “வெல்கம் டு மிஸ்டிரியோ!” என்றான்.

 

அதில் குழப்ப ரேகைகளுடன் உள்ளே சென்றவள் கண்டது, எட்டு ஜோடி கண்களும் இவர்களை வெறித்திருந்த காட்சியை தான். அக்கண்களுக்கு சொந்தக்காரர்கள் வெவ்வேறு நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தது நவியை மேலும் குழப்பத்தில் ஆழ்த்தியது.

 

ஒவ்வொருவரையும் ஆராய்ச்சி பார்வையுடன் நோக்கினாள். முதலில் அமர்ந்திருந்தவர்கள் கணவன்மனைவி போலும். பயத்தில் கைகளை பிணைத்தபடி அமர்ந்திருந்தனர். மனைவி அழுது கொண்டிருக்க, கணவன் அவளிற்கு மெல்லிய குரலில் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தான். இருவரும் சீனாவை சேர்ந்தவர்கள் போல இருந்தனர்.

 

அடுத்து அமர்ந்திருந்தவன் ஆசியாவை சேர்ந்தவன் போலிருந்தான். குறிப்பிட்டு சொல்ல வேண்டுமென்றால், வட இந்தியாவின் சாயல் தெரிந்தது அவன் முகத்தில். அவன் முகம் பயத்தில் இருந்தாலும், அங்கிருந்த ஒவ்வொன்றையும் கூர்மையாக ஆராய்ந்து கொண்டிருந்தான்.

 

அடுத்து இருந்தது ஒரு கர்ப்பிணிப் பெண். அந்த கறுப்பினப் பெண்ணின் முகத்தில் கவலையும், மசக்கையால் உண்டான சோர்வும் தெரிந்தது. அவரின் அருகில் ஆங்கிலேயே மருத்துவர் போலிருந்தவர், அவரை பரிசோதித்துக் கொண்டிருந்தார். இக்காட்சியைக் கண்டதும் நவியின் மனதில் மனிதம் இன்னமும் ஏதோவொரு மூலையில் இருந்து கொண்டு தான் இருக்கிறதுஎன்ற எண்ணம் தோன்றியது.

 

அவர்களுக்கு எதிர்த்த மேசையில், ‘இங்கு நடப்பதற்கும் தனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்பதைப் போன்று அமர்ந்திருந்தனர் அவர்கள். அதில் ஒரு பெண் தன்னைத் தானே மேலிருந்து கீழ், கீழிருந்து மேல் பரிசோதித்துக் கொண்டிருந்தாள். எத்தனை முறை இதை செய்திருப்பாளோ..!

 

அவளருகே இருந்த மற்ற இருவரும் சற்றே பெரிய உருவத்துடன்,  இறுகிய பார்வையுடனும் நெருங்குவதற்கே பயமான தோற்றத்துடன் இருந்தனர்.

 

ஆக மொத்தத்தில், அங்கிருந்த அனைவரும் வெவ்வேறு நாட்டை மட்டுமல்ல, வெவ்வேறு குணத்தையுடையவர்கள் என்றும் அறிந்து கொண்டாள் நவி.

 

இப்படி எல்லாரையும் ஒரே இடத்தில கொண்டு வந்துருக்காங்கன்னா அவங்கநோக்கம் என்னவா இருக்கும்..?’ என்ற தீவிர சிந்தனையில் இருந்தாள் நவி.

 

ஆனால் யோசித்து யோசித்து தலைவலி வந்தது தான் மிச்சம். அவளால் என்ன காரணமாக இருக்கும் என்று கணிக்கவே முடியவில்லை. அவள் என்ன பிரபலமாகோடீஸ்வரியாஅவளைக் கடத்தி வைத்து மிரட்டினால், துடித்து போய் ஓடி வருவதற்கு கூட ஆளில்லை. அப்படி இருக்கும்போது அவள் கடத்தப்பட்டதற்கான காரணம் என்னவென்று யோசிப்பாள்.

 

இத்தனை நபர்களை இங்கே பார்த்ததும், ஒன்று மட்டும் அவளுக்கு புரிந்தது. அவள் மிகப்பெரிய ஆபத்தில் சிக்கியிருக்க அதிக வாய்ப்பிருக்கிறது என்பதை நன்கு உணர்ந்தாள் நவி.

 

புருவ சுழிப்புடன் அவள் யோசித்துக் கொண்டிருப்பதைக் கண்டவன், அவளை அங்கிருந்த முக்காலியில் அமரச் சொல்லி, பேசத் துவங்கினான்.

 

ஹலோ கைஸ்! என் பேரு உங்க எல்லாருக்கும் ஏற்கனவே தெரியும்…” என்று ஆரம்பித்தான்.

 

அவன் முதல் வரியில் ஆங்கிலத்தில் பேசப் போகிறான் என்று நினைத்த நவி, அதன்பிறகு அவன் தமிழில் உரையாடியதையும், அதற்கு மற்றவர்கள் புரிந்ததைப் போன்று எதிர்வினையாற்றியதையும் கண்டு முழித்தாள். நவி மட்டுமல்ல, நந்துவும் தான்!

 

பேசும்போது அங்கிருப்பவர்களின் முகபாவங்களை கணக்கெடுத்துக் கொண்டிருந்த ரிஷப் இவர்கள் முழிப்பதைக் கண்டதும், அதற்கான காரணத்தை அறிந்தவனாக, “இந்த இடத்துல, நாம பேசுற மொழி  கேட்பவங்களோட மொழிக்கு ஆட்டோமேட்டிக்கா மாற்றம் செய்யப்படுது. ரொம்ப அட்வான்ஸ்ட் . (ஆர்ட்டிஃபிசியல் இண்டலிஜென்ஸ் செயற்கை நுண்ணறிவு) உபயோகப் படுத்திருக்காங்க என்றான்.

 

அவன் இப்போது பேசியதும் மற்றவர்களின் மொழியில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டதால், அனைவரும் அவன் கூறியதைக் கேட்டதும் அவர்களுக்குள் சலசலத்தனர்.

 

அவர்களைக் கண்டவன், “நீங்க எல்லாரும் குழப்பத்துல இருப்பீங்கன்னு நல்லாவே தெரியுது. நீங்க உங்க கேள்விகளை கேட்குறதுக்கு முன்னாடி நானே சில விஷயங்களை சொல்லிடுறேன். நாம எல்லாரும் இங்க மாட்டிட்டு இருக்கோம். இது என்ன இடம்னோ, எதுக்காக நம்ம எல்லாரையும் இங்க கொண்டு வந்தாங்கன்னோ யாருக்குமே தெரியாது. அப்படி கொண்டு வந்தவங்களோட நோக்கமும் தெரியாது.” என்று பேசிக் கொண்டிருந்தவனை அங்கிருந்தவர்கள் எல்லாரும் ஒவ்வொரு விதமாகப் பார்த்தனர்.

 

எதுவுமே தெரியாதுன்னு சொல்றதுக்கு தான், முன்னாடி நின்னு பேசிட்டு இருக்கானா?என்று நவி உள்ளுக்குள் புலம்ப, அவளின் புலம்பல் அவனுக்கு கேட்டது போல, ”என்ன இது எதுவுமே தெரியாதுன்னு சொல்றான்னு நீங்க நினைக்கிறீங்கன்னு புரியுது. ஆனா ஒன்னு மட்டும் ரொம்ப நல்லாவே தெரியும், இங்கயிருந்து தப்பிச்சு போறதுக்கான வழி இருக்கு!” என்று அவன் கூறியதும் மற்றவர்கள் சிறிது ஆசுவாசமடைய, நவியோ, ‘இன்னும் ஏதோ சொல்ல பாக்கி வச்சுருக்கானோ! அடுத்து என்ன குண்டு போடப் போறானோ?என்று அவனையே தீவிரமாக பார்த்துக் கொண்டிருந்தாள்.

 

ஆமா, வழி இருக்கு. ஆனா இதுவரை அந்த வழியில போனவங்க யாரும் உயிரோட தப்பிச்சதில்லை!” என்று ரிஷப் கூற, மீண்டும் அங்கு சலசலப்பு சத்தம் கேட்டது.

 

நவி மட்டும் ஏதோ யோசித்தவளாக, “இவ்வளவு சொல்றீங்க, நீங்க யாரு? இதெல்லாம் உங்களுக்கு எப்படி தெரியும்?” என்று அவனை கூர்மையாக பார்த்தபடி வினவினாள்.

 

அவளை மெச்சுதலாக  பார்த்தவன், “நல்ல கேள்வி! அதோட எனக்கு எப்படி இங்கயிருந்து வெளிய போறதுக்கான வழி இருக்குன்னு தெரியும்?இதையும் சேர்த்துக்கலாம்.” என்றவன் ஒரு பெருமூச்சுடன் மீண்டும் பேச ஆரம்பித்தான்.

 

இந்த இடம் உங்களுக்கு தான் புதுசு. அதாவது உங்களை மாதிரி ஆளுங்க இந்த இடத்துக்கு புதுசு கிடையாது. உங்களுக்கு முன்னாடி எத்தனையோ பேரு இங்க வந்துருக்காங்க. அதில் நானும் ஒருவன்.” என்றான்.

 

ஹ், அப்போ அவங்க எல்லாம் இந்த இடத்தை விட்டு போயிட்டங்களா? நீங்க மட்டும் மாட்டிக்கிட்டீங்களா?” என்றாள் அந்த எட்டு பேரிலிருந்த ஒரு பெண்.

 

விரக்தியாக புன்னகைத்தவன், “அவங்க இந்த இடத்தை விட்டு மட்டுமில்ல, இந்த உலகத்தை விட்டே போயிட்டாங்க. நான் மட்டும் தான் அதில் மிச்சம் இருக்குறவன்.” என்று ரிஷப் கூற, அங்கிருந்த அனைவரின் முகமும் கலக்கத்தை பிரதிபலித்தது.

 

ரிஷப் கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்தவர்கள், சில நொடிகளுக்கு பின்பே சுயத்திற்கு திரும்பினர். ஒவ்வொருவரின் முகத்தையும் பார்த்தவன், இறுதியில் நவியின் முகத்தை நோக்கினான். கலக்கத்தையும் மீறிய தைரியத்தை அவளிடம் கண்டவன் சில வினாடிகளேனும் பிரமிப்பில் ஆழ்ந்தான்.

 

ம்ம்ம் இன்ட்ரெஸ்டிங்!என்று மனதிற்குள் முணுமுணுத்தான்.

 

உங்களை மாதிரியே பத்து பத்து பேரா தான் இங்க கொண்டு வருவாங்க. அப்படி உங்களுக்கு முன்னாடி வந்தவங்களில் நானும் ஒருவன். இதே இடத்துல தான் எனக்கு விழிப்பு வந்துச்சு. அப்போ என் பக்கத்துல உடல் முழுவதும் காயத்தோட ஒருத்தர் இருந்தாரு. அவரு எங்களுக்கு முன்னாடி வந்தவங்கள்ல உயிரோட இருக்குறவர்னு சொன்னாரு. அவரு தான் இங்கயிருந்து தப்பிச்சு போறதுக்கான பாதையை அவருக்கு தெரிஞ்ச வரைக்கும் சொன்னாரு. என்னை மாதிரியே இங்க கொண்டு வரப்பட்ட ஒன்பது நபர்களை கண்டுபிடிச்சு அவங்களோட ஒரு குழுவா இங்கயிருந்து தப்பிச்சு போகணும்னும் அப்படி போற வழில ஏற்படுற ஆபத்துகளை பத்தியும் சொன்னாரு.” என்று கூறியபடி நிறுத்தினான்.

 

அவருக்கு என்னாச்சு?” என்று பயந்தபடியே நந்து வினவ, “அவரோட கடைசி நிமிஷங்கள்ல தான் என்கிட்ட பேசவே ஆரம்பிச்சாரு. இதை சொல்றதுக்காகவே காத்திட்டு இருந்த மாதிரி, சொன்னவுடனே அவரு உயிர் போயிடுச்சு.” என்று சோகமாகக் கூறினான் ரிஷப்.

 

இறந்தவருக்கு மௌன அஞ்சலி செலுத்துவது போல், மீண்டும் ஒருமுறை அந்த அறை நிஷப்தமானது.

 

உங்களோட இருந்த மீதி ஒன்பது பேரு எப்படி இறந்தாங்க?” என்று பயத்துடன் கேட்டார் அங்கிருந்த கர்ப்பிணி பெண்.

 

இங்கயிருந்து தப்பிச்சு போறதுக்கான வழி அவ்வளவு சுலபமில்ல. எத்தனையோ ஆபத்துகள், எத்தனையோ தடைகள்! இந்த இடம் முழுசும் நம்மள இங்க கொண்டு வந்தவங்களோட கட்டுப்பாட்டில் இருக்கு. இங்கயிருக்க காலநிலை, நேரம் எதையுமே நம்மால கணிக்க முடியாது. அதே மாதிரி சில நேரங்கள்ல, நம்மளோட மூளையைக் கூட அவங்க கட்டுப்படுத்துறாங்களோங்கிற சந்தேகம் கூட எனக்கு இருக்கு. ஏன்னா, என்கூட வந்தவங்கள்ல பாதி பேரு இறந்ததுக்கு காரணம், தேவையில்லாம ஏற்பட்ட சண்டைகள் தான். அதனால இப்போவே சொல்றேன், உங்களுக்கு முன்னாடி இங்க வந்தவன், இந்த இடத்துல கொஞ்சம் அனுபவம் இருக்குறவங்கிற முறைல சொல்றேன், நாம எல்லாரும் ஒற்றுமையா, நான் சொல்ற மாதிரி இருந்தா எல்லாருமே உயிரோட இந்த இடத்தை விட்டு தப்பிக்கலாம்.” என்றான்.

 

அதுவரையிலும் அமைதியாக இருந்த அந்த பயங்கர தோற்றம் கொண்ட இருவரில் ஒருவன், “ஹலோ, இங்க என்ன நீ பாஸா? நீ சொல்றதை தான் எல்லாரும் கேக்கனுமா? இப்படி ஆர்டர் போடுற வேலையெல்லாம், அதோ அங்க இருக்குறவங்க கிட்ட வச்சுக்கோ.” என்று எதிரிலிருந்தவர்களை சுட்டிக்காட்டினான்.

 

அவனின் பேச்சில் அனைவருக்கும், சற்று எரிச்சல் வந்ததென்னவோ உண்மை தான்.

 

ப்ச், நான் சொல்றதை பொறுமையா கேளுங்க. இங்க என்னென்ன ஆபத்துகள் வரும்னு உங்களை விட எனக்கு நல்லா தெரியும். அந்த ஒரு காரணத்துக்காக தான் அப்படி சொன்னேனே தவிர, எனக்கு யாருக்கும் பாஸா இருக்க விருப்பமில்ல.” என்று எரிச்சலுடன் கூறினான் ரிஷப்.

 

அங்கு சண்டை உண்டாகும் சூழல் ஏற்பட, அதற்கு மேல் பொறுமையாக இருக்க முடியாமல், “ஷ், இதை தான் அவரு கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி சொன்னாரு. இப்படி தேவையே இல்லாம சண்டை போட்டு தான் இங்க நிறைய பேரு உயிரை விட்டுருக்காங்க. சோ ப்ளீஸ், இங்க என்னென்ன ஆபத்து இருக்குன்னு தெரிஞ்சுகிட்டு இங்கயிருந்து எப்படி வெளிய போறதுன்னு யோசிக்கலாமா?” என்று சத்தமாக வினவினாள் நவி.

 

மற்றவர்களும் நவியின் பேச்சை ஆதரிக்க, அந்த முரட்டு மனிதனோ, எதையோ முணுமுணுத்தவாறே அடங்கிப் போனான்.

 

இப்போது மீண்டும் பேச ஆரம்பித்தான் ரிஷப். “ஓகே இப்போ எல்லாரும் கவனமா நான் சொல்றதை கேளுங்க. இந்த இடத்துல ட்ரோன்ஸோட நடமாட்டத்தை நீங்க கவனிச்சுருப்பீங்கஎத்தன ட்ரோன்ஸ் இங்க உலவிட்டு இருக்குன்னு தெரியாதுஆனா காலைல ஒரு குறிப்பிட்ட நேரத்துக்கு ட்ரோன்ஸ் நடமாட்டம் இருக்காது. நம்மளோட முதல் வேலை, அந்த நேரத்தை சரியா கவனிச்சு, இந்த பில்டிங்கை விட்டு வெளிய போகணும். அதுக்கு முன்னாடி, நமக்கு தேவையான உணவுகளையும் ஆயுதங்களையும் எடுத்துக்கணும்.என்று வேகவேகமாக திட்டங்களை வகுத்தான்.

 

இப்போ நாம இரண்டு அணியா பிரிய போறோம். ஒரு அணி, உணவு பொருட்களை சேகரிக்கணும். இன்னொரு அணி ஆயுதங்களை சேகரிக்கணும்.” என்றவன் அணியை பிரிக்க ஆரம்பிக்க, அதற்கும் ஏகப்பட்ட எதிர்ப்புகளுக்குப் பின் இரு அணிகள் முடிவாகின.

 

உணவுப் பொருட்களை சேகரிக்க, கணவன்மனைவி (வாங் வெய்ஷாங் மின்), யாரைப் பற்றியும் கவலைப்படாத அந்த பெண் (டோவினா) மற்றும் சூழ்நிலைகளை தீவிரமாக கணித்து கொண்டிருந்தவன் (ரியான்) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

 

ஆயுதங்களை சேகரிக்க, முரட்டு மனிதர்கள் இருவர் (டேவிட், ஜான்), நவி, நந்து மற்றும் ரிஷப் ஆகியோர் செல்வதாக முடிவெடுக்கப்பட்டது. இதில் கர்ப்பிணி பெண்ணைக் (ஜாஷா) கருத்தில் கொண்டு, அவருக்குத் துணையாக மருத்துவரையும் (நோலன்) இதே இடத்தில் இருக்குமாறு கூறிய ரிஷப், அவர்கள் அனைத்தையும் சேகரித்த பின்னர் இதே இடத்திற்கு வந்ததும், இரவு இங்கிருந்தே அனைவரும் வெளியே செல்லலாம் என்று திட்டம் தீட்டினான்.

 

திட்டம் தீட்டிய பின்னர் சிறிது நேரம் ஓய்வெடுக்க அனைவரும் இருந்த இடத்திலேயே தங்கள் வசதிக்கேற்ப சற்று சாய்ந்து அமர்ந்து கண்மூடினர். நவியும் நந்துவும் அருகருகே அமர்ந்து சுவரில் சாய்ந்தனர்.

 

அப்போது நந்து நவியை சுரண்டி, “காலைல இங்கயிருந்து தப்பிச்சுடலாம்ல?” என்று எதிர்பார்ப்புடன் வினவ, நவியோ இடவலமாக தலையாட்டி, “ரிஷப் சொன்னதைக் கவனிக்கலையா? இது முதல் படி தான். இன்னும் ஏகப்பட்ட ஆபத்துகள் இருக்கு.” என்று அவள் சொன்னதும், நந்துவின் கண்கள் பயத்தில் விரிய, இப்போது அவனின் பயத்தில் எரிச்சலாக வந்தது நவிக்கு.

 

ப்ச் நந்து, எப்பவும் பயந்துட்டே இருக்காத. அந்த பிரெக்னன்ட் லேடியைப் பாரு, அவங்களால முடியலைனாலும் அவங்க குழந்தையைக் காப்பாத்துறதுக்காக போராடிக்கிட்டு இருக்காங்க. அவங்களுக்கு பயம் இல்லன்னு நினைக்குறீயா? மனசுக்குள்ள பயமிருந்தாலும், அதை வெளிய காட்டிக்காம, வலியோட போராடுறாங்க. அவங்களை கம்பேர் பண்றப்போ, உனக்கென்ன? பயத்தை ஓரமா ஒதுக்கி வச்சுட்டு, இங்கயிருந்து எப்படி தப்பிக்குறதுன்னு யோசி! நாளைக்கு காலைல இதே பயப்படுற நந்துவை நான் பார்க்கக் கூடாது.” என்று அழுத்தத்துடன் கூறி அவனை கண்ணயர சொன்னாள்.

 

அவள் கூறியது மற்றவர்களுக்கு கேட்கவில்லை என்றாலும் அவர்களிடமிருந்து சிறிது தொலைவில் அமர்ந்திருந்த ரிஷபிற்கு கேட்டது. இவ்வளவு நேரம் அவனின் திட்டம் குறித்து மனதில் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்ததால் இறுகிப் போன அவனின் இதழ்கள், அவளின் குரலைக் கேட்டு மெல்லிய புன்னகையை வீசின.

 

அடுத்த அரை மணி நேரம் அப்படியே கழிய, தன்னை அறியாமலேயே கண்ணயர்ந்திருந்த நவி, ஏதோ சத்தம் கேட்டு விழித்தாள். நடந்ததெல்லாம் கனவாக இருக்குமோ என்று ஒரு நொடி அவளின் மனம் நினைக்க, அவளிருந்த இடம் உண்மையை பறைசாற்றியது.

 

மனதினுள் மெல்லிய ஏமாற்றம் படர, சுற்றிலும் கண்களைச் சுழற்றினாள். அனைவரும் சயனித்திருக்க, ரிஷப் அமர்ந்திருந்த இடம் காலியாக இருந்தது. அவன் எங்கே சென்றான் என்று தேட ஆரம்பித்தாள் நவி.

 

தன் கைகளுக்குள் கை கோர்த்து உறங்கிக் கொண்டிருந்த நந்துவின் தூக்கம் கலையாமல், அங்கிருந்து எழுந்தவள், மெல்ல அடிமேல் அடி வைத்து அங்கிருந்து நகர்ந்தாள்.

 

அவளை வெகு நேரம் தேட வைக்காமல், அந்த அறையின் மற்றொரு  மூலையில் இருந்த ஜன்னலருகே நின்றிருந்தவன், வெளியே இருட்டை வெறித்துக் கொண்டிருந்தான்.

 

அவளின் காலடி ஓசை மற்றவர்களுக்கு கேட்காதவாறு, மெல்ல அடியெடுத்து வைத்தவள், அவனை நெருங்கும் சமயம், “நவி, இன்னும் தூங்கலையா..?” என்று திரும்பிப் பார்க்காமலேயே வினவினான்.

 

நவியோ சிறிது அதிர்ச்சியுடன், “நான் தான்னு எப்படி தெரியும்..?” என்றாள்.

 

அவளின் கேள்வியில் ஒரு நொடி அவளைத் திரும்பிப் பார்த்தவன், உதட்டோரம் புன்னகை பூக்க, “அதை சொன்னா நீ கோபப்படுவ.” என்றான்.

 

நான் கோபப்படுற அளவுக்கு என்ன சொல்லப் போறான்?என்ற சிந்தனையுடனேயே அவனை நோக்க, “ஹ்ம்ம் சொல்லாம விட மாட்ட போலயிருக்கு. உன் பெர்ஃயூம் ஸ்மெல் வச்சு தான் கண்டுபிடிச்சேன்.” என்றான்.

 

ரிஷப் கூறியதைக் கேட்டு நவியின் முகம் கோபத்தில் சுருங்க, “ப்ச், இதுக்கு தன சொல்ல மாட்டேன்னு சொன்னேன். இங்க பாரு, இந்த இடத்துக்கு நான் வந்து எவ்ளோ நாளாச்சுன்னு எல்லாம் எனக்கு தெரியல. ஆனா வந்ததுலயிருந்து இப்போ ஆபத்து வருமோ, அப்போ ஆபத்து வருமோன்னு எப்பவும் ஜாக்கிரதையா இருந்தே பழகிடுச்சு. காத்துல ஏதாவது புதுசா வாசனை வந்தாலே, ‘இது என்ன வாசனை? எங்கயிருந்து வருது?ன்னு மனசு ஆட்டோமேட்டிக்கா அலச ஆரம்பிச்சுடுது. அப்படி என் மூளை ரிஜிஸ்டர் பண்ணி வச்சது தான் உன் பெர்ஃபியும் ஸ்மெல் கூட!” என்று நீண்ட விளக்கம் அளித்தான்.

 

அவளின் விளக்கத்தைக் கேட்டவளிற்கு, அவன் கூறுவதும் உண்மை என்று பட்டதால் கோபத்தை கைவிட்டாள். ‘ஹ்ம்ம் இந்த இடத்துக்கு வந்து கொஞ்ச நேரம் தான் ஆச்சு. நமக்கே இப்படி இருக்குன்னா, எத்தனை நாளா இங்க அடைஞ்சுருக்கான்?என்று மனதில் அவன்பால் இரக்கமும் சுரந்தது. இரக்கம் காதலாக மாறுமோ!

 

ஆமா, என்னைக் கேட்டீங்களே, நீங்க தூங்கலையா?” என்று வினவியவள், அவனின் அருகில் சென்று நின்று கொண்டவள், தானும் இருட்டை வெறிக்க ஆரம்பித்தாள்.

 

லேசாக சிரித்தவன், “நான் நல்லா தூங்கி ரொம்ப நாளாச்சு. எது பகல், எது இரவுன்னு கூட தெரியாத வாழ்க்கை! எப்போ எது நடக்கும்னு சொல்ல முடியாத அசாதாரண சூழல்! இப்படி இங்க சிக்கிருக்குறப்போ தூக்கம் வரது அபூர்வம் தான்.” என்றவன், அங்கே உறங்கிக் கொண்டிருந்தவர்களை சுட்டிக்காட்டி, “இவங்களோட தூக்கம் கூட ரெண்டோ மூணோ நாள் தான். அப்பறம் இங்கயிருந்து போவோமா இல்லையான்னு மனசு தவிக்க ஆரம்பிக்குறப்போ, இவங்களோட தூக்கமும் இவங்களை விட்டு போயிடும்.” என்றான் விரக்தியுடன்.

 

அதைக் கேட்ட நவிக்கும் மனதில் பயம் ஏற்பட்டது. இருந்தும் தன்னை மீட்டுக் கொண்டவள், “அப்போ பேசுனப்போ ரொம்ப பாசிடிவ்வா பேசுனீங்க. இப்போ மட்டும் ஏன் இப்படி பேசுறீங்க?” என்றாள்.

 

ஹ்ம்ம், அப்போவே இப்படி புலம்பியிருந்தா இவங்க இப்போ நிம்மதியா தூங்கியிருக்க மாட்டாங்க. அண்ட் நாளைக்கு ரொம்ப வேலையிருக்கும். இதே மூட்ல வந்தாங்கன்னா, நிச்சயமா பாதி தூரம் கூட தாண்ட மாட்டோம்.” என்றான்.

 

அவனின் பேச்சிலும் திட்டமிடலிலும் சற்று வியந்து தான் போனாள் பாவையவள்.

 

நீங்க என்ன பண்றீங்க?” என்று நவி கேட்டதும், புருவம் சுருக்கி அவளைக் கண்டான் ரிஷப்.

 

மீன், என்ன ஒர்க் பண்றீங்க?” என்று இப்போது தெளிவாகக் கேட்டாள்.

 

டாக்டர்…” என்றவன், ஏதோ கூற வரும்போது, கண்களைக் கசக்கிக் கொண்டு நந்து வந்தான்.

 

நவி, நீ தூங்கலையா?” என்று நந்து கேட்டதும், “நீங்க போய் ரெஸ்ட் எடுங்க. அப்போ தான் காலைல சுறுசுறுப்பா இருக்க முடியும்.” என்று கூறினான் ரிஷப்.

 

உங்களுக்கும் தான் ரெஸ்ட் தேவை. நீங்களும் கொஞ்ச நேரம் கண்ணை மூடி ரெஸ்ட் எடுங்க.” என்றாள் நவி.

 

இந்த களேபரங்களுக்கும் மத்தியில், இருவருக்குமிடையே ஏதோ ஒன்று, மிக மெல்லிய உணர்வாய் உருவானது.

 

காலை வேளையில், அனைவரும் சோம்பலுடன் எழுந்தாலும், ரிஷபின் முயற்சியால் சற்று பரபரப்புடனே காணப்பட்டனர். அதில் நவியின் பங்கும் உண்டு. அவரவருக்கு பிரித்து கொடுத்த வேலையை மீண்டும் ஒருமுறை நினைவு படுத்தியவன், சரியான நேரத்திற்காக காத்திருந்தான்.

 

அப்போது அவனருகே வந்த நவி, “எப்படி ட்ரோன்ஸ் இல்லன்னு தெரிஞ்சுக்குவீங்க?” என்று அவளின் சந்தேகத்தை கேட்க, “எப்பவும் காலைல ஒரு சத்தம் கேட்கும். அப்போ அந்த ட்ரோன்ஸ் எல்லாம் அண்டர்கிரௌண்ட்டுக்கு போகும்.” என்றான்.

 

என்ன, அண்டர்கிரௌண்ட்டா!” என்று ஒருநொடி ஆச்சரியத்தில் மூழ்கியவள், மறுநொடி, “அது எப்படி உங்களுக்கு தெரிஞ்சது?” என்று மீண்டும் கேள்விக்கணைகளை தொடுக்க ஆரம்பித்தாள்.

 

ஹ்ம்ம், அந்த ட்ரோன்ஸ் பின்னாடி போய் தெரிஞ்சுகிட்டோம்.” என்றவன் அந்த அறையின் ஒரு மூலையைப் பார்க்க, அங்கு கருப்பு நிறத்தில் சில கோடுகள் வரையப்பட்டிருந்தன.

 

இதைக் கண்டுபிடிக்க எங்களுக்கு ஒரு வாரம் ஆச்சு. அதாவது எங்களை பொறுத்தவரைக்கும் அது ஒரு வாரம்.” என்றான். அவனின் பார்வை சென்ற இடத்தைக் கண்ட நவி, அந்த கருநிற கோடுகள் அவர்கள் கடந்து வந்த நாட்களை குறிக்கிறது என்பதை புரிந்து கொண்டாள்.

 

அவனின் குரலே அவனின் வேதனையைக் காட்ட, அதிலிருந்து அவனை வெளிக்கொண்டு வர, மீண்டும் எதுவோ கேட்க வர, அவளின் உதடுகளை கைக்கொண்டு அடைத்தவன், “ஷ், இதுக்கு மேல எங்கிட்ட எனர்ஜி இல்ல. எல்லா சந்தேகத்தையும் ஒன்னாவா கேக்கணும்? மெதுவா ஒவ்வொன்னா சொல்றேன்.” என்றான்.

 

ரிஷபிற்கு அந்த நொடி மனதில் எதுவும் இல்லாமல் இருந்தாலும், நவிக்கு அவன் ஸ்பரிசம் நடுக்கத்துடன் கூடிய ஆச்சரியத்தையும் கொடுத்தது. நடுக்கம், அவனின் அருகாமையில் விளைந்தது. ஆச்சரியமோ மங்கையவளின் செய்கையில் விளைந்தது.

 

இதுவரை எந்த ஆணையும் இவ்வளவு நெருங்க அனுமதிக்காதவள் நவி. அப்படி தனக்குத் தானே கட்டுப்பாடுகள் விதித்திருந்தவளின் கட்டுப்பாடுகள் அனைத்தையும் தகர்த்தெறிந்து அவளை நெருங்கியிருந்தான் ரிஷப்.

 

ரிஷப், அவளின் வாயை அடைத்ததில் அதிர்ந்து நின்றவள், இன்னமும் அப்படியே நிற்க, ரிஷபும் அவளின் அதிர்ச்சியை வித்தியாசமாக நோக்கினாலும், அவன் கையை எடுக்க அவசரம் காட்டவில்லை!

 

அவர்களின் மோனநிலையைக் கலைத்தது, பின்னிருந்து கேட்ட செருமல் சத்தம். அவ்வளவு நேரம் நேர்கோட்டிலிருந்த இருவரின் பார்வையும் விலக, கண்ணோடு சேர்ந்து அவனின் கையும் விலகியது. அங்கே சன்ன சிரிப்புடன் இவர்களை பார்த்துக் கொண்டிருந்தாள் ஜாஷா. அவளுடன் நந்துவும் நவியைப் பார்த்து நமுட்டுச் சிரிப்பு சிரித்தான்.

 

நானும் உங்களுக்கு உதவி செய்றேன். நீங்க இவ்ளோ கஷ்டப்படுறப்போ நான் மட்டும் எதுவும் செய்யாம இருந்தா மனசு உறுத்தலா இருக்கு.” என்று ஜாஷா கூற, “நாம இந்த இடத்தை விட்டு வெளிய போனா, அவங்கவங்க அவங்கவங்க உயிரை காப்பாத்திக்குற நிலைமை ஏற்படலாம். சோ அப்போ உங்களுக்கு போராட சக்தி வேணும். இப்போவே அதை வேஸ்ட் பண்ணிடாதீங்க.” என்றான் ரிஷப்.

 

நவியோ மனதில், ‘ப்பா, எப்படி எல்லாத்தையும் யோசிக்குறான்!’ என்று எண்ணிக் கொண்டிருந்தாள்.

 

அவன் சொல்வது புரிந்தாலும், ஏனோ ஜாஷாவின் முகம் தெளிவடையவில்லை. ரிஷப் கண்களால் நவியிடம் ஜாஷாவைக் காட்டி பார்த்துக் கொள்ளுமாறு கூற, அவளும் கண்சிமிட்டி ஒப்புக்கொண்டாள்.

 

ரிஷப் மற்ற வேலைகளை கவனிக்க செல்ல, நவி ஜாஷாவின் மனநிலையைத் தெரிந்து கொள்ள அவளிடம் பேச்சு கொடுத்தாள்.

 

ஜாஷா, நீங்க ஏன் இவ்ளோ ரெஸ்ட்லெஸா இருக்கீங்க? உங்களை யாராவது ஏதாவது சொன்னாங்களா?” என்று நவி வினவ, ஜாஷா வேகமாக மறுத்து தலையசைக்க, அவளின் வேகத்திலேயே அது தான் உண்மை என்று நவி புரிந்து கொண்டாள்.

 

அப்போது அங்கு வந்த நோலன், “நீங்க சொல்றது உண்மை தான் நவி. அந்த பொண்ணு தான் இவங்களை ஹர்ட் பண்ற மாதிரி பேசுது.” என்று சற்று தொலைவில் அமர்ந்திருந்த டோவினாவை சுட்டிக் காட்டினான்.

 

நாங்க ஓடியாடி வேலை செய்றப்போ இவங்க மட்டும் சும்மா அதோட பலனை அனுபவிப்பாங்களான்னு கேட்டுச்சு. இன்னும் கூட ஏதோ சொல்லுச்சு. ஆனா எனக்கு கேக்கல.” என்றான் அந்த மருத்துவன்.

 

நவியும் வந்ததிலிருந்து அப்பெண்ணைக் கவனித்துக் கொண்டு தான் இருந்தாள். ‘தான் மட்டும் தான், தனக்கு மட்டும் தான்.என்கிற மனோபாவம் தான் அப்பெண்ணிடம் மிகுதியாகவே காணப்பட்டது. மேலும் அவளின் திமிரான உடல்மொழியும், அலட்சியப் போக்கும் நவிக்கு எரிச்சலைத் தான் தந்தது.

 

நவி அவளை விசாரிக்க செல்லலாம் என்ற போது ஜாஷா தான் அவளைத் தடுத்து, “இல்ல வேணாம் நவி. ஏற்கனவே இங்க ஆபத்து அதிகம். இதுல என்னால எந்த பிரச்சனையும் வேணாம்.” என்று கூறினாள்.

 

நவியும் அதில் சற்று அடக்கினாள். அதன்பின்பு அவர்களுக்குள் நல்ல நெருக்கம் ஏற்பட்டது. நவி, ஜாஷா, நந்து மற்றும் நோலனுடன் ரியானும் சேர்ந்துக் கொள்ள, மொழிப் பிரச்சனையும் இல்லாததால் அந்த சில நிமிடங்கள் நன்றாகவே கழிந்தன.

 

அப்போது அந்த சத்தம் கேட்டது. ஒரு வகையில் சங்கொலி போன்ற முழக்கம் தான். அனைவரும் பரபரப்பாக, ரிஷப் இறுதியாக அனைவரிடமும் பேசியவன் கவனமாக இருக்க வேண்டும் என்றும் கூறினான். மேலும் சமையலறைக்கு செல்லும் வழியை அந்த குழுவிற்கு கூறியவன், ரியானிடம் பார்த்துக் கொள்ளுமாறு தனியாகவும் கூறினான்.

 

பின்பு நோலன் மற்றும் ஜாஷாவிடம் விடைபெற்று கொண்டவர்கள், அவரவர் வழியில் சென்றனர்.

Comments

Popular post

தீதும் நன்றும்

தீதும் நன்றும்   நேரம் காலை எட்டு மணி ... மந்தமான வானிலைக்கேற்ப அந்த காவல் நிலையமும் சோம்பி தான் இருந்தது .   அப்போது மத்திய வயதுடைய ஒருவர் அழுது கொண்டே வந்து , எஸ் . ஐ கதிர்வேலனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார் .   அந்நபர் அழுது கொண்டே பேச , அது புரியாததால் , “ அழுகையை நிறுத்திட்டு என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க .” என்று கதிர்வேலன் கூற , அந்த சத்தத்தில் கவனம் கலைந்த இன்ஸ்பெக்டர் அபிஜித்தும் அங்கு சென்றான் .   கரைபுரண்டு ஓடும் கண்ணீரை அடக்கியவராக , “ சார் ... என் குடும்பத்தை காணோம் சார் !” என்றார் அவர் .   “ முதல்ல , நீங்க யாரு , எங்க இருந்து வரீங்கன்னு தெளிவா சொல்லுங்க .” என்று அபிஜித் கேட்க , “ சார் , என் பேரு உலகநாதன் . எனக்கு வேலை துபாய்ல . அதனால என் மனைவி வசந்தியையும் , என் மகன் தேவாவையும் , என் அண்ணன் பூமிநாதன் வீட்டுல தங்க வச்சுட்டு துபாய் போயிட்டேன் . மாலப்பட்டில தான் வீடு .   என் அண்ணன் , அண்ணி , அம்மா , வசந்தி , தேவான்னு அஞ்சு பேரும் அந்த வீட்டுல தான் இருந்தாங்க . ஆனா ... இப்போ அவங்க யாரையுமே அங்க காணோம் . எனக்கு பயமா இருக்கு ச...

தனிமையில் ஓர் இரவு - சிறுகதை

ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 சண்டே ஸ்பெஷல் ஒரு புது சிறுகதையோட வந்துட்டேன்...😁😁😁 முக்கியமான விஷயம் இந்த கதைல லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது... தேடுனாலும் அது கிடைக்காது...😂😂😂 படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...🙏🙏🙏 தனிமையில் ஓர் இரவு “ஆதி… ஆதி…” என்று சமையலறையிலிருந்து கத்திக் கொண்டிருந்தார் கௌசல்யா.  அவரின் சத்தம் கேட்டு அங்கு எட்டிப் பார்த்தார் அந்த வீட்டின் தலைவர் பார்த்தசாரதி. “கௌசி, இப்போ எதுக்கு கத்திட்டு இருக்க..?” என்றார். “என்னது கத்துறேனா..! ஏன் சொல்ல மாட்டீங்க..? உங்களுக்கும் உங்க பிள்ளைக்கும் எல்லா வேலையும் செய்றேன்ல… என்ன சொல்லணும்… உங்க பிள்ள காலேஜ் முடிச்சு ஆறு மாசமாச்சு. இன்னும் வேலைக்கு போக வழிய காணோம்… வேலைக்கு தான் போகல, கல்யாணமாச்சும் பண்ணலாம்னா, அதுக்கும் சம்மதிக்கிற வழிய காணோம்… இதோ மணி ஒன்பதாச்சு… இன்னும் இழுத்து பொத்திட்டு தூங்குது… இதெல்லாம் எங்க உருப்படப் போகுது…” என்று வீட்டின் தலைவரை பேசவே விடாமல் புலம்பிக் கொண்டிருந்தார், அவரின் தலைவி. “இருங்க போய் எழுப்பிட்டு வரேன்… ஏய் ஆதி…” என்று பிள்ளையின் அறை நோக்கி சென்றார் அந்த அன்னை. சாரதியோ, “ஜஸ்ட் மி...

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)