காட்சிப்பிழை 3
சிறிது நேரத்திற்குப் பிறகு அந்த சங்கொலி கேட்க, “ஓகே நம்ம இப்போ கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சு.” என்று ரிஷப் பேச ஆரம்பித்தான்.
“எல்லாரும் தயாரா இருங்க. நான் வெளிய போய் சூழ்நிலை எப்படி இருக்குன்னு பார்த்துட்டு வந்துடுறேன். அப்பறம் எல்லாரும் சேர்ந்து போகலாம்.” என்று சொல்லிக் கொண்டே வெளியே சென்றான் ரிஷப்.
மற்ற அனைவரும் தயாராக இருந்தனர். நந்து நவியிடம் ஏதோ சொல்ல வந்து பின் தயக்கம் கொள்வதாக இருந்தான். நவியே இதைக் கவனித்து அவனிடம் வினவ, “நாம எல்லாரும் தப்பிச்சுடலாம்ல?” என்று வினவினான்.
“நந்து, நேத்தே உன்கிட்ட என்ன சொன்னேன்? காலைல எழும்போது பயத்தையெல்லாம் தூக்கிப்போட்டுடனும்னு சொன்னேன்ல.” என்று நவி சற்று கண்டிப்புடனே வினவ, “ப்ச், இது பயம் இல்ல. ஜஸ்ட் கேட்க தான செஞ்சேன்.” என்று முனகினான் நந்து. நவி பதில் கூறுவதற்கு முன்பே ரிஷப் அவ்விடம் வந்துவிட்டான்.
“கைஸ், வீ கேன் மூவ். வெளிய போறதுக்கு முன்னாடி திரும்பவும் சொல்றேன். ரொம்ப ரொம்ப கேர்ஃபுல்லா இருக்கணும். நாம ஒருத்தர் கேர்லெஸா ஏதாவது தப்பு செஞ்சாலும், எல்லாருமே மாட்டிடுவோம். சோ போனோமா, வேலையை முடிச்சோமான்னு வந்துடனும். தேவையில்லாம நாம ஒருத்தருகொருத்தர் சண்டை போட்டுட்டு இருந்தா இங்கேயே இருக்க வேண்டியது தான்.” என்று அவர்களை எச்சரித்தவன் நோலன் மற்றும் ஜாஷாவிடம் சிறு தலையசைப்புடன் கிளம்பினான்.
அந்த அறைக்குள் இருந்து வெளியே வந்ததும், “ரெண்டு குரூப்பும் இன்னும் கொஞ்ச தூரத்துக்கு ஒரே வழில தான் போகப் போறோம். அதுக்கு அப்பறம் தான் பாதை ரெண்டா பிரியும். ரியான், உன் டீமை பார்த்துக்குற பொறுப்பு உன்னோடது. இந்த காமன் பேசேஜ் முடிஞ்சதும் உங்களுக்கான வழியை சொல்றேன்.” என்றபடி மெதுவாக பேசிக் கொண்டே முன்னேறினான் ரிஷப். அவனைப் பின்பற்றி மற்றவர்களும் சென்றனர்.
அந்த தாழ்வாரம் முடியுமிடத்தில் இரண்டு வழிகளாக பிரிந்தது. வலதுபுறம் உள்ள வழியை சுட்டிக்காட்டிய ரிஷப், “ரியான், இந்த வழில தான் நீங்க போகணும். நேரா போயிட்டே இருந்தீங்கன்னா பாதி வழியில பெரிய கிச்சன் இருக்கும். அதை ஒட்டியே ஸ்டோர் ரூமும் இருக்கும். இன்னும் எத்தனை நாட்கள் இந்த இடத்துல இருக்கப்போறோம்னு நமக்கு தெரியாது. கிட்டத்தட்ட ஒரு வாரத்துக்கு தாங்குற அளவுக்கு உணவு பொருட்களை சேகரிங்க. முக்கியமா தண்ணீர் பாட்டில்களை எடுத்துக்கோங்க. பீ சேஃப்.” என்றவன் “நம்ம டைம் ஃபிக்ஸ் பண்ணி வச்சுக்கலாம். இன்னும் ஒரு மணி நேரத்துல இந்த இடத்துக்கு நீங்க திரும்ப வந்துருக்கணும். சப்போஸ் நாங்க வரதுக்கு லேட் ஆகிட்டாலோ, இல்ல அந்த ட்ரோன்ஸ் சத்தம் கேட்டாலோ, நீங்க நம்ம சேஃப் பிளேஸுக்கு போயிடுங்க.” என்று கூறி அவர்களை வழியனுப்பி வைத்தான்.
ரியானின் குழுவினர் வலதுபுறம் சென்றதும், ரிஷபின் குழுவினர் இடதுபுறம் செல்ல ஆரம்பித்தனர்.
முன்னே ரிஷப் செல்ல, அவனின் பின்னே நவி மற்றும் நந்து சேர்ந்து சென்றனர். மற்ற இருவருக்கும் இவர்களுடன் வருவது, முக்கியமாக ரிஷபிற்கு பின் செல்வது பிடிக்கவில்லை என்றாலும் சூழ்நிலை கருதி பின்தொடர்ந்தனர்.
சிறிது நேரத்திலேயே, இரும்பு கதவைக் கண்டனர். அந்த கதவினருகே அணுகல் அட்டை படிப்பானையும் (access card reader) கண்டனர். அதைக் கண்டதும், கதவை எப்படி திறக்க முடியும் என்று மற்றவர்கள் யோசித்துக் கொண்டிருக்க, ரிஷப் அவனின் கால்சராய் பையிலிருந்து அட்டை ஒன்றை எடுத்தவன், அதை வைத்து அந்த கதவைத் திறந்தான்.
நவியோ ஆச்சரியமாக, “இது எப்படி உங்களுக்கு கிடைச்சது?” என்று வினவ, “போன முறை இங்க வந்தப்போ கிடைச்சது. அதுவுமில்லாம இந்த கார்ட் இந்த கதவுக்கு வெளியவே இருந்தது.” என்று கூறிக் கொண்டே உள்ளே சென்றான்.
அவன் உள்ளே சென்றதும் அங்கிருந்த விளக்குகள் அனைத்தும் எரிந்து அந்த அறையை வெளிச்சமாக்கின. அதையெல்லாம் கவனித்தாலும் நவிக்கு கண்ணெல்லாம் அந்த அணுகல் அட்டையிலேயே இருந்தது. ரிஷபிடமிருந்து அந்த அட்டையை வாங்கியவள் அதிலிருந்த எழுத்துக்களை பார்த்தாள்.
அந்த அட்டையில் “AN Software Solutions” என்று பெயரிடப்பட்டிருந்தது.
“சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸா!” என்று நவி கேட்க, “முதல் தடவை அந்த கார்டை பார்த்ததும், இங்க ஏற்கனவே வந்தவங்களோட கார்டுன்னு தான் நினைச்சோம். ஆனா, இந்த கதவைத் திறக்க வழியே இல்லன்னு சும்மா இதை வச்சு ட்ரை பண்ணி பார்த்தப்போ தான் நாங்க எதிர்பார்க்காத விதமா கதவு திறந்துச்சு. ஆனா, அதுல ஏன்
‘சாஃப்ட்வேர் சொல்யூஷன்ஸ்’னு போட்டிருக்குன்னு எங்களுக்கும் குழப்பம் தான்.” என்றான் ரிஷப்.
“ஒருவேளை, நம்மள கடத்தியிருக்குறவங்க இந்த சாஃப்ட்வெர் கம்பெனிக்காரவங்களா இருப்பாங்களோ?” என்று நந்து தன் பயத்தை சிறிது தள்ளிவைத்துவிட்டு வினவ, “கண்டிப்பா இல்ல. இவ்ளோ பக்காவா பிளான் பண்ணியிருக்குறவங்க இப்படியெல்லாம் லூப்ஹோல்ஸ் விடமாட்டாங்க. என்னோட ஒபினியன், அப்படி ஒரு கம்பெனியே இருக்காது.” என்றான் ரிஷப்.
ஆனால் நவியோ இதை இதற்கு முன்னரே எங்கோ பார்த்தது போல உணர்ந்தாள். எங்கே என்று அவள் யோசிக்கும்போதே மற்ற இருவரில் ஒருவன், “நீ எங்களை ஏமாத்த பார்க்குற. இந்த கார்டு பத்தியெல்லாம் நீ முன்னாடியே சொல்லவே இல்ல. உண்மையை சொல்லு, நீ தான எங்களை கடத்தி வச்சுருக்குறது.” என்று ரிஷபை நோக்கி கத்தினான்.
அவனின் கூற்றையே மற்றவனும் ஆமோதிக்க ரிஷபோ சிறிது கடுப்பானான்.
“லுக், உங்களை கடத்தி எனக்கென்ன லாபம்? நீங்க யாருன்னு கூட எனக்கு தெரியாது. கொஞ்சமாச்சும் உங்க மூளையை யூஸ் பண்ணுங்க. நேத்துலயிருந்து பார்த்துட்டு இருக்கேன், என்கூட சண்டை போடணும்னே ஏதாவது பேசிட்டு இருக்கீங்களா?” என்று எரிச்சலாக வினவினான் ரிஷப்.
“ஹலோ, என்ன நீ சொல்றதெல்லாம் நாங்க ‘ஏன்’, ‘எதுக்கு’ன்னு கேக்காம செய்யணுமா?” என்று ஜான் வினவ, “நான் எப்போ அப்படி சொன்னேன். சொல்லப்போனா உங்க எல்லா கேள்விகளுக்கும் நான் பொறுமையா, ரொம்ப பொறுமையா பதில் சொல்லிட்டு தான் இருக்கேன். ஆனா, தேவையில்லாம நீங்க தான் விதாண்டாவாதம் பண்றீங்க.” என்றான் ரிஷப்.
நவிக்கும் கூட ‘என்னடா இது’ என்பது போன்ற மனநிலை தான்.
மீண்டும் ஜானும் டேவிடும் ஏதோ கூறப்போக, அவர்களைத் தடுத்த நவி, “ப்ளீஸ் உங்க சண்டையை அப்பறம் வச்சுக்கலாம். இங்கயிருந்து தப்பிக்கிறது தான் நம்ம ப்ரையாரிட்டியா இருக்கணும். இப்போ நாம வந்த வேலையைப் பார்க்கலாம்.” என்று சமாதானத்தில் இறங்கினாள்.
அவ்விருவரும் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே ஒரு ஓரத்தில் இருந்த துப்பாக்கிகளையும் மற்ற ஆயுதங்களையும் அங்கிருந்த பைகளிலேயே அடுக்கிக் கொண்டிருந்தனர்.
அவர்கள் சென்றதும் பெருமூச்சுவிட்டவனைக் கண்ட நவி, “கூல்! இப்போ நாம எதையெல்லாம் எடுக்கணும்?” என்று வினவ, “பெரிய வெப்பன்ஸ் எல்லாம் அவங்க எடுக்குறாங்க. சோ நமக்கு தேவைப்படுற கயிறு, சின்ன கத்தி, ஃபர்ஸ்ட் எயிட் பாக்ஸ் இது மாதிரி எடுங்க. பிளஸ் முக்கியமா தேவைன்னு உங்களுக்கு தோணுறதும் எடுத்து வச்சுக்கோங்க.” என்று கூற, நவி மற்றும் நந்து தலையசைத்துவிட்டு சென்றனர்.
அடுத்தடுத்த நிமிடங்கள் தேடுதலிலும் சேமிப்பதிலும் சென்றது. நவி, அவளின் கைகளில் சிக்கிய பொருட்களை ஒருமுறைக்கு இருமுறை யோசித்த பின்னரே தன் பைக்குள் அடுக்கி வைத்தாள். எதேச்சையாக அவள் ரிஷபின் புறம் திரும்ப, அவனோ அங்கிருந்த கணிப்பலகையை (Tablet PC) ஒத்த சாதனத்தை கைகளில் ஏந்தியிருந்தான்.
ஒளிபுகும் (transparent) தன்மையைக் கொண்ட கணிப்பலகை என்பதால், அவன் பார்த்துக் கொண்டிருப்பது என்னவென்று நவியும் கூர்ந்து கவனித்தாள்.
(நாம் இப்போது வைத்திருக்கும் கணிப்பலகை எல்லாம் 2037இல் பழைய மாதிரிகள். மேலே கூறியிருந்த ட்ரான்ஸ்பரெண்ட் டேப்லெட்டே சிறிது பழைய மாடல் தான். ஆனால், கடத்தி வைத்திருக்கும் இடத்தில் நவீன சாதனங்களையா எதிர்பார்க்க முடியும்!)
அவள் நிற்கும் தொலைவிலிருந்து பார்ப்பதற்கு அது ஏதோ வரைபடம் போல தெரிந்தது. அதை அறிந்து கொள்வதற்காக அவனருகே சென்றவள், “என்ன இது?” என்றாள்.
சட்டென்று கேட்ட அவளின் குரலில், முதலில் தடுமாறியவன், பின் சுதாரித்துக் கொண்டு, “இந்த இடத்துல இருந்து தப்பிக்கிறதுக்கான மேப் இது.” என்றான்.
அது நம் ‘கூகிள் மேப்’பின் ‘அட்வான்ஸ்ட் வெர்சன்’ போல இருந்தது.
“அப்போ இது ‘டேப்’ இல்லையா?’ என்று வினவ, “கடத்துனவங்க இங்க டேப் வைக்கிற அளவுக்கு முட்டாளுங்களா என்ன?” என்று சிறிது கேலியாகவே வினவியவன், “இது டேப் தான். ஆனா மேப் மாதிரி மட்டும் தான் இதை யூஸ் பண்ண முடியும். போன தடவை இங்க வந்தப்போவே நாங்க நிறையா எடுத்துக்கிட்டோம்.” என்றவன் சிறு இடைவெளிவிட்டு, “இது நமக்கு யூஸ்ஃபுல்லா இருக்கும்.” என்றவாறே அதிலிருந்து இரண்டை எடுத்து வைத்துக் கொண்டான்.
“ஏன் ரெண்டு மட்டும் எடுக்குறீங்க?” என்று நவி வினவியதும், ஒரு பெருமூச்சுடன், “லாஸ்ட் டைம் எங்களால தப்பிக்க முடியாததுக்கு காரணம், அந்த ட்ரோன்ஸ் எங்களை பின்தொடர்ந்து வந்தது தான். அது இந்த இடத்துல இருக்க ட்ரோன்ஸா, இல்ல வெளிய இருக்க ட்ரோன்ஸான்னு தெரியல. ஆனா, எனக்குள்ள ஒரு ஃபீலிங், இந்த டேப்பை நாங்க எடுத்துட்டு போனதுனால தான் ட்ரோன்ஸ் எங்களை கண்டுபிடிச்சுதோன்னு. ஏன்னா, இதைத் தவிர வேற எந்த எலெக்ட்ரானிக் டிவைசஸும் எங்ககிட்ட இல்ல. இந்த டேப் இல்லாமலும் போக முடியாது. அதான் எதுக்கும் ஒரு சேஃப்டிக்கு ரெண்டு மட்டுமே எடுத்துப்போம்.” என்று கூறி முடித்தான்.
அப்போது அவர்களுக்கு அதே சங்கொலி சத்தம் கேட்க, அனைவரும் பரபரப்பாகினர். ‘அதுக்குள்ள நேரமாகிடுச்சா’ என்று ஒருவரின் முகத்தை மற்றவர் பார்த்துக் கொண்டிருந்தது என்னவோ ஒரு நொடி தான். மறுநொடியே சேகரித்த அனைத்தையும் தூக்கிக்கொண்டு அங்கிருந்து விரைந்தனர்.
ஆனால், அவர்கள் வெளியே செல்லும் நேரம் அந்த ட்ரோன் அவர்களிருந்த அறையின் தாழ்வாரத்தை அடைந்துவிட்டது என்பது அதன் ரீங்கார சத்தத்திலிருந்தே தெரிந்தது. முதலில் சென்ற ரிஷப் தலையை மட்டும் வெளியே நீட்டி எட்டிப்பார்க்க, அந்த ட்ரோன் அவர்களின் வருகைக்காக எதிர்பார்த்துக் கொண்டிருப்பதைப் போல ஒரே இடத்தில் சுற்றிக் கொண்டிருந்தது.
“உஃப், ட்ரோன் வெளிய தான் இருக்கு.” என்று முணுமுணுத்தான் மற்றவர்களிடத்தில்.
அனைவருக்கும் பதட்டம் உண்டாக, நவி தான், “இப்போ என்ன பண்றது?” என்று வினவினாள்.
சிறிது யோசித்தவன், “நேத்து பண்ணதை தான் திரும்பவும் பண்ண போறோம். நான் அந்த ட்ரோன்னை திசை திருப்ப முயற்சிக்கிறேன். அந்த கேப்ல நீ இந்த வெடிகுண்டை நாம போறதுக்கு எதிர்திசையில எவ்ளோ தூரமா தூக்கிப் போட முடியுமோ தூக்கிப் போடு. அந்த குண்டு வெடிச்சதும், அந்த ட்ரோன் அதை நோக்கி போகும். அப்போ நாம இங்கயிருந்து மறுபக்கம் ஓடி தப்பிக்கணும்.” என்று தன் திட்டத்தை விளக்கினான்.
“அந்த ட்ரோன் அந்த பாம் பக்கம் போகலைனா?” என்று நந்து சிறிது பயத்துடன் வினவ, “ஹ்ம்ம், அப்போவும் அதே பிளான் தான். அந்த ட்ரோன்னை நான் வேற பக்கம் திசை திருப்ப முயற்சி பண்றேன். அந்த கேப்ல நீங்க நம்ம ஹைட்டவுட் நோக்கி ஓடுங்க.” என்றான்.
நவிக்குமே ரிஷபின் திட்டம் சிறிது பயத்தைக் கொடுத்திருந்தது, “லெட் அஸ் ப்ரே தேட் லக் ஃபேவர்ஸ் அஸ்!” என்று அவள் கூறிக் கொண்டிருக்கும்போதே துப்பாக்கி சத்தம் கேட்க, மூவரும் திடுக்கிட்டு பார்த்தனர்.
அங்கு ஜான், அந்த ட்ரோன்னை நோக்கி துப்பாக்கியால் சுட்டுக் கொண்டிருந்தான். அவனிற்கு உதவ டேவிடும் தயாராகிக் கொண்டிருந்தான்.
ரிஷபோ டேவிடிடம் சென்று, “ஆர் யூ மேட்?” என்று கத்தினான்.
அவர்களோ அவன் கூறுவதை மதிக்காமல் அதனை சுட்டு வீழ்த்திக் கொண்டிருந்தனர். அந்த ட்ரோன்னும் எதிர் தாக்குதல் புரிய அந்த இடமே குண்டுகளால் நிரம்பிக் கொண்டிருந்தது. சற்று பொறுத்த பார்த்த ஜான், சற்று முன்னர் ரிஷப் காட்டிய வெடிகுண்டை அந்த ட்ரோன்னை நோக்கி வீச, அது அந்த இடத்திலேயே வெடித்து சிதறியது.
இருவரும் துப்பாக்கிகளை கையாள்வதைக் கண்ட ரிஷபிற்கும் நவிக்கும், துப்பாக்கிகள் அவர்களுக்கு புதிதல்ல என்பது நன்கு விளங்கியது. மூவரையும் மிதப்பான பார்வை பார்த்தபடி வந்த இருவரும், “அவ்ளோ தான், இதுக்கு போய் திசை திருப்பணும், ஓடணும்னு திட்டம் தீட்டிட்டு இருக்கீங்க!” என்று கிண்டலாக கூறினர்.
ரிஷபோ ஒரு பெருமூச்சுடன், “இங்க இருக்க துப்பாக்கி, வெடிகுண்டு வச்சு அதை அழிக்க எனக்கு தெரியாதா? ஆனாலும், அதை செய்யாம வேற பிளான் போடுறேன்னா, அதுக்கு ஏதாவது காரணம் இருக்குன்னு கூடவா தெரியாது? அட்லீஸ்ட் இப்படி சுடப்போறோம்னு சொல்லிட்டாவது செய்யக்கூடாதா!” என்று அவர்களை நோக்கி கத்தியவன், “இந்த ட்ரோன் அழியுறதுக்கு முன்னாடி இந்த ஸ்பாட்டை மத்த ட்ரோன்ஸுக்கும் அனுப்பியிருக்கும்!” என்று தலையில் கைவைத்து கொண்டான்.
இந்த தகவல் அங்கிருக்கும் அனைவருக்குமே புதியது தானே! எல்லாரும் திகைத்து நிற்க, “கொஞ்சம் சுத்தி பாருங்க, ஒரு ட்ரோன்னை அழிக்க நீங்க எவ்ளோ குண்டுகளை யூஸ் பண்ணியிருக்கீங்கன்னு. இப்போ ஏகப்பட்ட ட்ரோன்ஸ் வரப்போகுது. என்ன பண்ணுவீங்க? நம்ம இங்க இருக்குறது தெரியக்கூடாதுன்னு பார்த்து பார்த்து வேலை செஞ்சா, இந்த ஒரு செயலால எல்லாமே வீணாகிடுச்சு!” என்று கோபத்தில் பேசிக் கொண்டிருந்தவனை நெருங்கிய நவி,
“இப்போ ஒருத்தரை ஒருத்தர் குறை சொல்றது பயனில்லை ரிஷப். அந்த ட்ரோன்ஸ் வரதுக்குள்ள இந்த இடத்தை விட்டு போகணும்.” என்று நிதர்சனத்தை கூறினாள்.
ரிஷபும் அதை ஆமோதித்தவனாக, சில நொடிகளில் கையில் அகப்பட்ட அனைத்து ஆயதங்களையும் எடுத்துக் கொண்டு வெளியே சென்றான். அவனை மற்றவர்கள் பின்தொடர்ந்தனர்.
வெளியே அந்த ட்ரோனின் பாகங்கள் சிதறிக் கிடக்க, அதைத் தாண்டி சென்றனர் அனைவரும். முதலில் ரிஷப் செல்ல, அவனைத் தொடர்ந்து நவி,
நந்து, ஜான், டேவிட் ஆகியோர் முறையே சென்றனர்.
சற்று தூரம் மெதுவாக சிறு சிறு சத்தங்களையும் கூர்ந்து கவனித்துக் கொண்டே சென்றனர். ஆனால், திடீரென்று அவர்களின் மேல் மெல்லிய நீல நிற ஒளிக்கற்றைகள் விழுந்தன.
“ட்ரோன்ஸ்!” என்று ரிஷப் கூறவும், திரும்பிக் கூட பார்க்காமல் வேகமாக ஓடினர். அவர்களுக்கு பின்னால் கேட்ட மெல்லிய ரீங்கார சத்தமே அந்த ட்ரோன்னும் பின்தொடர்வதை உணர்த்தியது.
வேகமாக ஓடியவர்கள் எதிரே உணவுப்பொருட்களை சேகரிக்க சென்றவர்களைக் கண்டனர். அவர்களும் ட்ரோனின் சத்தம் கேட்டு பயத்தில் தான் இருந்தனர்.
ரியான் ரிஷபிடம் ஏதோ கேட்க முயல, “இப்போ எதுவும் கேட்காத. சீக்ரெட் ரூம் போய் பேசிக்கலாம்.” என்று அவர்களையும் அழைத்துக் கொண்டு மீண்டும் ஓடினான்.
அனைவரும் வேகமாக முன்னேறி செல்ல, டோவினா மட்டும் பின்தங்கினாள். அவள் குதிகால் காலணி அணிந்திருந்ததால், அவளால் மற்றவர்களின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
ஒரு சூழலில், அவர்கள் இவளை விட்டு வெகு தூரம் சென்றிருக்க, அவர்களை அழைப்பதற்கும் டோவினாவின் ‘ஈகோ’ இடம் தரவில்லை. எரிச்சலில் குனிந்து தன் காலணிகளை அகற்றிவிட்டு எழ, அவளின் பக்கவாட்டில் நீல நிறம் ஒளிர்ந்தது. அவள் பயத்துடன் திரும்பிப் பார்க்க, அங்கு அவளை சுடுவதற்கு தயாராக இருந்தது அந்த ட்ரோன்.
அந்த காட்சியைக் கண்டவளிற்கு கண்கள் இருள, உதடுகள் வறண்டு போக, என்ன செய்ய வேண்டும் என்பதையே சிந்திக்க மறந்து நின்றிருந்தாள் டோவினா.
அதே நேரம் அவளின் பின்னே இருந்து வந்த குண்டு அந்த ட்ரோனின் மீது பாய்ந்தது. மேலும், அந்த ட்ரோன் திரும்பி தாக்க சந்தர்ப்பம் கொடுக்காதவாறு அதைத் தாக்கிக் கொண்டே இருந்தனர் ரிஷப், ஜான் மற்றும் டேவிட். டோவினாவோ காதுகளை மூடிக் கொண்டு குனிந்துவிட்டாள்.
அதனை நோக்கி சுட்டுக்கொண்டே அருகில் வந்த ரிஷப், குனிந்திருந்த டோவினாவை இழுத்துக்கொண்டு பின்னே சென்று நவியிடம் ஒப்படைத்தான். அவளோ இறுக்க மூடிய கண்களை திறக்கவே இல்லை.
மூவரின் தொடர் முயற்சி பயனளிக்க, பல்வேறு குண்டுகளை தன் இரும்பு உடலில் வாங்கிக்கொண்டு சிதறி விழுந்தது அந்த இயந்திரம்.
உடனே ரியானை அழைத்தவன், “அந்த ட்ரோன் பார்ட்ஸ்ல லோகேஷன் சென்ட் பண்ற மாதிரி ஃபேசிலிட்டி இருக்கான்னு பார்க்க முடியுமா?” என்று வினவ, ரியானும் முயற்சிப்பதாகக் கூறி, சிதறி விழுந்ததில் தேடிக் கொண்டிருந்தான்.
பின் எதையோ தேடிக் கண்டுப்பிடித்தவன், “இதோ இந்த மாட்யூல் மூலமா தான் லோகேஷன் ஷேர் பண்ணுது.” என்று ரியான் கூற, “அந்த லோகேஷன் மாத்தி அனுப்ப முடியுமா?” என்று ரிஷப் வினவினான்.
“பட் ப்ரோ ஏற்கனவே லோகேஷன் சென்ட் பண்ணிடுச்சுன்னு நினைக்குறேன்.” என்றான் ரியான்.
அதைக் கேட்ட ரிஷபோ ‘என்ன செய்வது’ என்று யோசித்துக் கொண்டிருக்க, ரியானே மீண்டும் தொடர்ந்தான். “இங்க பாருங்க ப்ரோ, இது தொடர்ந்து அதோட லோகேஷனை ஷேர் பண்ணிட்டு இருக்குன்னு நினைக்குறேன். இப்படி லோகேஷன் ஷேர் பண்றதுக்கு எந்த பவரும் தேவையில்ல. சோ அடுத்த தடவை அனுப்பும்போது வேற லோகேஷன் அனுப்பலாம். ஆனா,
அதுலயும் ஒரு சிக்கல் இருக்கு.” என்று ரியான் கூற, அவனையே கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்தான் ரிஷப்.
“இதோட லோகேஷனை நாம மேனுவலா ஓவர்ரைட் பண்ண முடியாது.” என்று கூறி முடித்தான் ரியான்.
ஒரு பெருமூச்சுடன், மற்றவர்களிடம் திரும்பிய ரிஷப், “எல்லாரும் சீக்ரெட் ரூமுக்குள்ள போய் இருங்க. நாங்க ரெண்டு பேரும் இந்த ட்ரோன்னை வேற இடத்துல போட்டுட்டு வரோம். நைட் வரைக்கும் யாரும் ரூமை விட்டு வெளிய வர வேண்டாம். சப்போஸ் நாங்க வரலைன்னா, அந்த டேப் யூஸ் பண்ணி நைட்டே எல்லாரும் இங்க இருந்து தப்பிச்சுடுங்க.” என்று கூறினான்.
அவன் கூறியதைக் கேட்டவர்கள் சிறிது நேரம் மௌனமாக இருக்க, மீண்டும் ரிஷப் தான், “ஓகே இனி வேஸ்ட் பண்ண நம்மகிட்ட டைம் இல்ல. சீக்கிரம் கிளம்புங்க.” என்றவன் ரியானிடம், “நாம இதை வேற இடத்துல போட்டுடலாம்.” என்று கூறியவாறே அந்த ட்ரோனின் பாகங்களை சேகரிக்க ஆரம்பித்தான்.
மற்றவர்கள் அவனைப் பார்த்துவிட்டு திரும்பி நடக்க ஆரம்பித்தனர். நவி தான் அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள். நந்து அவளிடம் வந்து அவளை அழைக்க அப்போதும் எந்தவித மாறுதலும் இல்லாமல் அப்படியே நிற்க, ரிஷப் அவளைத் திரும்பிப் பார்த்தான்.
அவனின் பார்வை தன்மீது பட்டதும் தான் சுயத்திற்கு வந்தவளின் மூளை ஒருபுறம் ‘தான் ஏன் அவ்வாறு நின்றோம்!’ என்று யோசிக்க, மனமோ அவன் செய்யப்போகும் செயலின் சாதக பாதகங்களை சிந்தித்துக் கொண்டிருந்தது.
ரிஷபும் அவளிடம் வந்து, “என்னாச்சு ஏதாவது சந்தேகமா?” என்று வினவ, ‘ஒன்றும் இல்லை’ என்று தலையசைத்துவிட்டு, “டேக் கேர்.” என்ற ஒற்றை வரியைக் கூறிவிட்டு திரும்பி நடந்தாள்.
அவள் செல்வதையே பார்த்துக்கொண்டு நின்றவனை கடமை அழைக்க, இக்கட்டான சூழலில் சலனப்பட்ட மனதை திட்டிக்கொண்டே அந்த ட்ரோனின் பாகங்களை தூக்கிக்கொண்டு மறுபுறம் நடந்தான். அவனுடன் ரியானும் சேர்ந்துக் கொண்டான்.
மனதில் உண்டான முதல் சலனத்தை மறைத்தபடி, மறைக்க வேண்டிய சூழலை சபித்தபடி இருவரும் அவரவர்களின் பாதையில் சென்று கொண்டிருக்க, இன்னும் இவர்களை வைத்து என்னென்ன விளையாட விதி காத்திருக்கிறதோ!
Comments
Post a Comment
Please share your thoughts...