காட்சிப்பிழை 6
ஒருவழியாக அனைவரும் அந்த வேலியைக் கடந்து மற்ற பக்கத்திற்கு வந்து சிறிது ஆசுவாசப்பட்டுக் கொண்டனர். ஒருவருக்கொருவர் அந்த தற்காலிக மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டிருக்க, ரிஷபின் முகம் தீவிர நிலையிலிருந்து சற்றும் மாறவே இல்லை. அடுத்தடுத்து இருக்கும் ஆபத்துகள் அவனிற்கு அல்லவா தெரியும்!
நவியும் தன் மகிழ்ச்சியை நந்துவிடம் பகிர்ந்து கொண்டாலும் ஓர விழியில் ரிஷபைக் காணத் தவறவில்லை.
ரிஷபின் இறுக்கத்தைக் கண்ட நவி அவனருகே சென்று, “என்னாச்சு ரிஷப்? ஏன் இவ்ளோ சீரியஸா இருக்கீங்க?” என்று கேட்டு முடிப்பதற்குள்ளாகவே அவர்கள் நின்றிருந்த இடத்திற்கு அருகே யாரோ ஒருவரின் அலறல் சத்தம் கேட்டது.
நிசப்தமான அந்த இரவு நேரத்தில் கேட்ட அந்த அலறல் ஒலி தைரியமானவர்களைக் கூட பயப்படுத்தும் என்கையில் சில மணி நேரங்களாக திக் திக் நிமிடங்களைக் கடந்து சற்றே மகிழ்ச்சியாக இருந்த அந்த குழுவினரை பயப்படுத்தாமல் இருந்தால் தான் அது ஆச்சரியம்!
அந்த ஒலியை முதலில் கேட்டதும் அனைவரின் மனதும் படபடவென அடித்துக் கொண்டது உண்மையே. அக்குழுவில் உள்ள சில தைரியமானவர்கள் அந்த பயத்திலிருந்து இரண்டொரு நொடிகளில் மீண்டிருக்க, அவர்கள் தான் மற்றவர்களையும் சமாதானப்படுத்தினர்.
சிறிது நேரத்தில் அந்த அலறல் ஒலி நின்றது. மீண்டும் நிசப்தம்! அமானுஷ்யமான நிசப்தம்!
“என்னாச்சு? எங்க இருந்து அந்த சத்தம் வந்துச்சு?’ என்று டோவினா வினவ, ரிஷபிற்கும் அதற்கான விடை தெரியவில்லை.
அவன் சத்தம் வந்த திசை நோக்கி யோசனையுடனே செல்ல மற்றவர்களும் பதட்டத்துடனே அவனைப் பின்தொடர்ந்தனர்.
அவர்கள் இருந்த இடத்தில் ஆங்காங்கே சில மரங்கள் இருக்க, அவற்றையெல்லாம் தாண்டியும் அவர்கள் செல்ல வேண்டிய பாதை நீண்டு கொண்டேயிருக்க சத்தத்திற்கான காரணத்தை இன்னும் அவர்களால் கண்டறிய முடியவில்லை.
பத்து நிமிட நடைக்குப் பின்னர், மரங்களே இல்லாத வெற்று நிலத்தை அடைந்தவர்கள் அங்கு கண்ட காட்சி, அவர்களின் பதட்டத்தை மேலும் கூட்டியது.
அவர்கள் நின்றிருந்த இடத்திலிருந்து சற்று தூரத்தில் இருவரைக் கண்டனர். ஒருவர் கீழே படுத்திருக்க, அவரருகே ஒருவர் நின்றிருந்தார். இரவு நேரம் என்பதாலும், போதிய வெளிச்சமின்மையாலும் அவர்களின் வரிவடிவமே தெரிந்தது. இவர்கள் தேடி வந்ததற்கு அந்த வரிவடிவங்கள் எவ்வித உதவியும் செய்யாததால், மேலும் அருகில் சென்றனர்.
ரிஷப் கவனத்துடனே அந்த வரிவடிவங்களை நெருங்கினான். நவி தான் எடுத்து வைத்திருந்த டார்ச்சை உயிர்ப்பிக்க, அதன் வெளிச்சத்தில் அந்த வரிவடிவங்களுக்கு சொந்தக்காரர்களை கண்டவர்கள் மிரண்டனர்.
ஏனெனில், அங்கு அவர்கள் கண்டது ஜானையும் டேவிட்டையும். இருவரையும் கண்டதை விட, அவர்கள் இருந்த நிலையே மற்றவர்களின் மிரட்சிக்கான காரணம். டேவிட் கொலையுண்டிருக்க, அவனருகே கையில் கத்தியுடன் நின்றிருந்தான் ஜான்.
சட்டென்று யாராவது இந்த காட்சியைக் கண்டால், ஜான் தான் டேவிட்டை கொலை செய்தான் என்று கூறிவிடுவர். அதையே தான் அங்கு பதட்டத்திலிருந்த சிலரும் எண்ணினர். ஆனால், அதை வாய் திறந்து கேட்குமளவிற்கு யாருக்கும் தைரியம் இல்லை.
அந்த ‘சிலரில்’ அடங்காமல் இருந்த ரிஷபும் நோலனும் டேவிட்டின் உடலிலிருந்த காயங்களை ஆராய்ந்தனர். கூரிய ஆயுந்தங்களைக் கொண்டு அவனின் ஒருபக்க கை துண்டிக்கப்பட்டிருந்தது. மேலும் உடலில் பல இடங்களில் வெட்டு காயங்களிலிருந்து குருதி வழிந்து கொண்டிருக்க, அவன் நெஞ்சுப் பகுதிலிருந்து வழிந்த இரத்தம் அவனின் இறப்பிற்கான காரணத்தை கூறியது.
அதுவரையில் ஏதோ பிரம்மையில் இருந்ததைப் போல இவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்த ஜான், அப்போது தான் சுயத்திற்கு வந்தவனாக, இவர்களைக் கண்டான். மற்றவர்களின் பார்வை அவனை குற்றம்சாட்டுவதைப் போலிருப்பதை உணர்ந்து கொண்டவன், “நான் இல்ல… நான்… நான் கொல்லல…” என்று கூறியதையே திரும்ப திரும்ப கூறினான்.
அதைக் கேட்டும் கூட யாரும் அவன் மீதிருந்த பார்வையை மாற்றிக் கொள்ளவில்லை. அனுபவம் அங்கு அவர்களை யோசிக்க வைத்தது!
“என்னாச்சுன்னு விளக்கமா சொல்லு ஜான். அப்போ தான் எங்களால உனக்கு ஹெல்ப் பண்ண முடியும்.’ என்று ரிஷப் கூற, நோலன் உட்பட, மற்றவர்கள் அவனை ஆச்சரியமாக பார்த்தனர்.
அவர்களின் பார்வையே, ‘அத்தனை இழிவுபடுத்தியும், இவனால் எப்படி ஜானுடன் சாதாரணமாக உரையாட முடிகிறது?’ என்பதையே பிரதிபலித்தது.
ஜானோ மற்றவர்களின் பார்வையை புறக்கணித்துவிட்டு தன்னை நம்பத் துவங்கிய ரிஷபிடம் எப்படியாவது தன்னை நிரபராதி என்று நிரூபித்துவிட எத்தனித்தான்.
“நாங்க ரெண்டு பேரும் அந்த பில்டிங் விட்டு கிளம்பி கொஞ்ச தூரம் நடந்தோம். ஆனா, எங்க போறதுன்னு எங்களுக்கு சரியா தெரியல. அந்த டேப்ல ரெண்டு பாதை இருந்துச்சு. ஒரு பாதை ஏரியைக் கடந்து போகணும்னும் இன்னொரு பாதைல வெற்று நிலைத்தைக் கடக்கணும்னும் இருந்துச்சு. ஏரியை விட நிலம் வழியா சுலபமா போகலாம்னு இந்த திசைல வந்தோம். ஆனா, இங்க… இங்க…” என்று அத்தனை நேரம் கோர்வையாக கூறியவனின் வாயில் பயத்தின் காரணமாக வார்த்தைகள் நர்த்தணம் ஆட ஆரம்பித்தன.
ரிஷப் தான், “ரிலாக்ஸ் ஜான்!” என்று அவனிடம் தண்ணீர் போத்தலை நீட்டினான். அந்த தண்ணீரைக் குடித்து தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட ஜான் மீண்டும் தொடர்ந்தான்.
“இந்த இடத்தை கடக்குறது அவ்ளோ சுலபமில்ல! ஏன்னா, இங்க ஒரு டிராகன் இருக்கு.” என்று அவன் சொல்லி முடிக்க, மற்றவர்களுக்கு அவன் கூறுவது பொய்யாகவே தோன்றியது.
“வாட் டிராகனா? எந்த காலத்துல இருக்கீங்க ஜான்?” என்று கேலியாக டோவினா வினவ, மற்றவர்கள் அவளைத் தடுக்காமல் இருந்ததே அவர்களும் அதே மனநிலையில் தான் இருந்தனர் என்பதை எடுத்துக் கூறியது.
ரிஷப் மட்டும் எப்போதும் போல் தன்னுணர்வுகளை வெளியிடாமல் அமைதியாக இருக்க, நவியின் பார்வை அவன் மீதே இருந்தது.
நவியின் மூளை ஜானின் முந்தைய ஏமாற்று வேலைகளை வைத்து அவனை நம்ப வேண்டாம் என்று சொன்னாலும், அவளின் உள்ளுணர்வு அவனை நம்பச் சொல்லியது. அதற்காக தான் ரிஷபை நோக்கினாள். அவனின் முகத்திலிருந்து எதுவும் தெரியவில்லை என்றாலும் அவனும் தன்னை போல தான் யோசிக்கிறான் என்று மீண்டும் அவளின் உள்ளுணர்வு அடித்துக் கூறியது.
ஜானோ, “ப்ளீஸ், நான் முன்னாடி செஞ்ச தப்பை மனசுல வச்சுக்கிட்டு இப்பவும் உங்களை ஏமாத்துறேன்னு நினைக்காதீங்க.” என்று இதுவரை இல்லாத வகையில் கெஞ்ச, அதை ஏற்கும் எண்ணம் தான் அங்கு யாருக்கும் இல்லை போலும்!
ரிஷப் ஏதோ கூற வர, அப்போது தூரத்தில் ஏதோ பெருஞ்சத்தம் ஒன்று கேட்டது. அச்சத்தத்தில் பூமி அதிர, பூமியுடன் தொடர்பில் இருந்த காரணத்தினால் அவர்களின் உடலிலும் அது எதிரொலித்தது. நிகழ்ந்து கொண்டிருக்கும் நிகழ்வில் அனைவரும் ஸ்தம்பித்து நிற்க, “அது தான்… அந்த டிராகன் தான் வருது!” என்று ஜான் பயத்துடன் கூறினான்.
முதலில் நம்ப மறுத்தவர்கள் கூட, ‘அப்படியும் இருக்குமோ?’ என்ற பயத்தில் நிற்க, ரிஷப் ஜானை சிறிது சமாதனப்படுத்திவிட்டு, ‘என்ன செய்வது’ என்று யோசித்தான்.
மறைந்து கொள்வதற்கு இடம் இருக்கிறதா என்று சுற்றிலும் பார்த்தான் ரிஷப். ஆனால், கண்களுக்கு எட்டிய வரை வெற்று நிலம் தான் தெரிந்தது. அப்படியே அவர்கள் வந்த வழியே சென்றாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும் மரங்களின் நடுவே எங்கு மறைந்து கொள்வது! ஜான் கூறியதைப் போலவே அது டிராகனாக இருந்தால், சுலபமாக அவர்கள் மறைந்திருப்பதை கண்டுபிடித்துவிடுமே.
அதனால், ஓடுவதை விட அந்த டிராகனை எதிர்கொள்வதே சிறந்தது என்று எண்ணினான் ரிஷப். அதை மற்றவர்களிடமும் காரணத்துடன் விளக்கினான். இப்போது தூரத்தில் கேட்ட சத்தம் அவர்களை நெருங்கியதைப் போன்று இருந்தது.
“ஜான், அந்த டிராகன் பார்க்க எந்த சைஸ்ல இருந்துச்சு? அதைப் பத்தி கொஞ்சம் தெளிவா சொன்னா எப்படி நாம தப்பிக்கிறதுன்னு பிளான் பண்ணலாம்.” என்று அவசரமாக கேட்டான் ரிஷப்.
“அது.. அது அஞ்சு வளர்ந்த யானையை சேர்த்து வச்ச அளவுல இருந்துச்சு. அப்பறம் நார்மல் டிராகன்ஸ் தீயை கக்குறது மாதிரி இல்லாம, இது புல்லட்ஸை வெளியிட்டுச்சு. அதோட பற்கள், நகங்கள், சிறகுகளுக்கு பதிலா, கூர்மையான கத்திகள் இருந்துச்சு. அதை வச்சு தான் டேவிட்டை அதை தாக்குச்சு.” என்று அவன் கண்ட காட்சிகளை வேகமாக ஒப்பித்தான் ஜான்.
“சோ, இந்த டிராகனும் ஒரு ரோபோ தான். அதால புல்லட்ஸ் ஃபயர் பண்ண முடியும். அதுக்கிட்ட ஷார்ப்பான கத்திகளும் இருக்கு. அதை நம்ம பக்கத்துல வர விட்டா, கண்டிப்பா அதை கட்டுப்படுத்த முடியாது. ஏன்னா, இது ட்ரோன்ஸை விட பல மடங்கு பெருசு. நம்ம என்ன தான் சுட்டாலும் அதுக்கு அவ்ளோ பாதிப்பு இருக்காது.” என்று ரிஷப் பேசிக்கொண்டே செல்ல, நவி அவனை இடைவெட்டி, “ரிஷப், இது ரோபோன்னா அதோட எதிராளியை கண்காணிக்க, இதுலயும் அதே கேமரா லென்ஸ் இருக்க அதிக வாய்ப்பு இருக்கு. நம்ம ஏன் அதே லேசர் டெக்னிக் யூஸ் பண்ண கூடாது?” என்றாள்.
“ஆமா, நானும் அதை தான் யோசிச்சேன். ஆனா, நம்ம லேசர்னால அந்த ட்ரோன்ஸை அழிச்சது மாதிரி இதை அழிக்க முடியாது. ஆனா, கொஞ்ச நேரத்துக்கு அதை செயல்பட விடாம தடுக்கலாம். அந்த கேப்ல நாம எல்லாரும் இங்க இருந்து தப்பிக்கணும்.” என்று கூறிக் கொண்டிருக்கும்போதே எங்கிருந்தோ வந்த தோட்டாக்கள் இவர்கள் அருகில் வெடித்தன.
அதில் அனைவரின் கவனமும் ஒருங்கே தோட்டாக்கள் வந்த திசை நோக்கி திரும்பியது.
அந்த இருள் சூழ்ந்த நேரத்திலும், அந்த இயந்திர இராட்ஷனின் இரும்பு தேகம் பளபளத்து அதன் வருகையை மற்றவர்களுக்கு கம்பீரமாக உணர்த்தியது. ஜான் கூறியதைப் போலவே ஐந்து யானைகளை தனக்குள் அடக்கிவிடும் அளவிற்கான பிரம்மாண்டத்தை தன்னகத்தே கொண்டு தன் கூர்மையான சிறகுகளை விரித்து பறந்து வந்து கொண்டிருந்தது அந்த இயந்திர டிராகன்.
அனைவரின் கண்களும் ஆச்சரியத்தில் விரிந்தன. இத்தகைய காட்சிகளையெல்லாம் படங்களில் மட்டுமே கண்டவர்கள், நேரில் காணும்போது தங்களுக்கு இருக்கும் ஆபத்தை கூட சில நொடிகள் மறந்து தான் போயினர்.
அந்த சில நொடிகள் தாமதம் அந்த இயந்திரத்திற்கு வசதியாக, மீண்டும் தன்னிடமிருந்த தோட்டாக்களை இவர்களை நோக்கி செலுத்தியது. அதில் பல தோட்டாக்கள் கீழே சிதறினாலும், ஒன்றிரண்டு ஜானின் கால்களை பதம் பார்த்தது.
அந்த சத்தத்தில் சிந்தை கலைந்தனர் மற்றவர்கள். ரிஷபோ தன் தடுமாற்றத்தை நொந்து கொண்டு தன் கையிலிருந்த கிளர்கதிர் ஒளிமி (லேசர்) இயந்திரத்தை உயிர்ப்பிக்க முயற்சித்துக் கொண்டிருந்தான்.
கைகள் அதன் போக்கில் வேலை செய்ய அவனின் மூளையோ, ‘இந்த டிராகன் இவ்ளோ தூரத்துல இருந்து சரியா குறிவச்சு சுடுற அளவுக்கு கேப்பபிலா இருக்கே!’ என்று ஆச்சரியப்பட்டான்.
அந்த இயந்திரம் அடுத்த தாக்குதலுக்கு தயாராவதை அதன் சத்தத்திலிருந்து உணர்ந்தவன், இம்முறை சரியாக தன்னிடமிருந்த இயந்திரத்தை உயிர்ப்பித்தான்.
இவர்களுக்கும் அந்த டிராகனுக்கும் இருக்கும் தொலைவு சற்று அதிகமாகவே இருந்ததால், ரிஷபினால் லேசரை சரியாக அதன் கண்களை நோக்கி குறிவைக்க முடியவில்லை.
அந்த லேசரினால் அந்த டிராகன் சிறிது திசை திருப்பப்பட்டு அதன் தாக்குதலை கைவிட்டது என்னவோ இவர்களின் அதிர்ஷ்டம் என்று கூறலாம். இப்போதும் ரிஷப் குறிவைக்க முடியாமல் தடுமாறினான்.
நவி ரிஷபின் அருகே வர, “ரொம்ப தூரம் இருக்குறதால சரியா குறிவைக்க முடியல. இடையில இருக்க தூரத்தை குறைக்கணும்.” என்று கூறினான்.
“தட்ஸ் சிமிலர் டு சூசைட் ரிஷப்!” என்று நவி தடுக்க, “இப்போ நமக்கு வேற வழியில்ல நவி.” என்றான்.
இந்த தாக்குதலுக்கு மத்தியில், அடிபட்ட ஜானிற்கு நோலன் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தான். அதனையும் பார்த்த ரிஷப், ரியானை அழைத்து, “எனக்கு கவர் கொடு ரியான். நாம அந்த டிராகன் பக்கத்துல போனா தான் என்னால குறி பார்த்து லேசரை அடிக்க முடியும்.” என்று கூற, ரியானும், ஜான் வைத்திருந்த ஆயுதங்களில் சிலவற்றை அள்ளிக் கொண்டு செல்ல எத்தனிக்க, நவி தானும் வருவதாகக் கூறினாள்.
அவள் கண்களிலிருந்த உறுதியைக் கண்ட ரிஷப், இப்போது இதற்காக ஒரு விவாதத்தை உண்டாக்கி நேரம் தாழ்த்த வேண்டாம் என்பதை உணர்ந்து ஒன்றும் கூறாமல் அவளை நோக்கி அழுத்தமான பார்வையை வீசிவிட்டு முன்னே செல்ல, நவியும் தன் கைகளில் ஆயுதங்களை ஏந்தியவாறு அவனைப் பின்தொடர்ந்தாள்.
அதனருகே முன்னேற, இவர்களின் இருப்பை உணர்ந்துகொண்ட அந்த டிராகன், மீண்டும் தோட்டாக்களை செலுத்த முயன்றது. ஆனால், அதை முந்திக்கொண்ட ரியானும் நவியும் தங்களின் தாக்குதல்களை தொடர்ந்தனர். சரியான பயிற்சி இல்லையெனினும், பெரிய இரும்பு தேகத்தை உடைய எதிராளியின் சில பாகங்களை அவர்களின் துப்பாக்கிகளிலிருந்து வெளிவந்த தோட்டாக்கள் துளைக்க தான் செய்தன.
அதற்கும் இவர்களுக்கும் மிகக் குறைந்த இடைவெளியே இருந்ததால், இம்முறை ரிஷப் சரியாக அதன் கண்களை நோக்கி லேசர் ஒளியைப் பாய்ச்சினான். அந்த அதிவேக லேசர் கற்றைகளை சமாளிக்க முடியாமல் அந்த டிராகன் திணறிக் கொண்டிருந்தது. அப்போது அதன் வாய் பகுதி லேசாக திறக்க, அந்த கணத்தை சரியாக கணித்த நவி, தன்னிடமிருந்த குண்டை அதன் வாய்க்குள் தூக்கி வீசிவிட்டு, மற்ற இருவருக்கும் கண்களை காட்ட, அவர்களும் சற்று வேகமாக பின்னே நகர்ந்தனர்.
சில நொடிகளில், அந்த டிராகனின் உட்புற பகுதியில் ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்க, தன்னுடைய திட்டம் வெற்றிபெற்றதை நினைத்து மகிழ்ந்தாள் நவி. ரியான் கூட அவளின் திட்டத்தை பாராட்ட, ரிஷபிடம் அதற்கான எதிர்வினை எதுவும் இல்லை.
அந்த டிராகனின் பல பகுதிகள் சேதமாகி விட, இவர்களுடன் இப்போது சண்டையிட முடியாது என்று எண்ணியதோ, தன் கூர்மையான சிறகுகளை விரித்து வந்த வழியே பறந்து சென்றது.
அது பறந்து சென்றதைக் கண்ட மூவரும் மற்றவர்கள் இருக்கும் இடத்திற்கு வந்தனர். அதற்குள் நோலன், மருத்துவ உபகரணங்கள் மூலம் ஜானின் உடலிலிருந்த குண்டுகளை அகற்றி அதற்கான தற்காலிக சிகிச்சைகைகளை செய்திருந்தான்.
அதைப் பார்த்த ரிஷப், நோலனிடம் ஜானின் உடல்நிலையைப் பற்றி வினவினான்.
“தேங்க் காட்! புல்லட்ஸ் ரொம்ப டீப்பா போகல. பட், ஹீ நீட்ஸ் ரெஸ்ட்.” என்றான் நோலன்.
அதைக் கேட்டு ஒரு பெருமூச்சு விட்டவன், மற்றவர்களிடம் திரும்பி, “அந்த டிராகன் எப்போ வேணும்னாலும் திரும்ப வரலாம். அதுக்குள்ள நாம பாதுகாப்பான இடத்துக்கு போகணும்.” என்றான்.
“பாதுகாப்பான இடமா?” என்று நந்து வினவ, மற்றவர்களிடமும் அதே எண்ணம் தான் என்பது அவர்களின் முகங்களிலிருந்தே கண்டுபிடிக்க முடிந்தது.
“ஆமா, நமக்கு இப்போ பாதுகாப்பான இடம் அந்த பில்டிங் தான்.” என்று ரிஷப் கூற, அனைவரின் முகத்திலும் ‘மீண்டும் அதே கட்டிடமா’ என்ற பாவனையே இருந்தது.
“நமக்கு வேற இடமில்லை. நீங்களே பார்த்தீங்க தான, நாம வந்த வழியில நம்ம ஒளியிறதுக்கு ஏத்த மாதிரி இடம் இருந்துச்சா? அதே மாதிரி வேற வழியில போலாம்னு நினைச்சாலும், அங்க என்னென்ன புது ஆபத்துகள் இருக்கும்னு நமக்கு தெரியாது. சோ நமக்கு ஓரளவு தெரிஞ்ச இடத்துக்கு போறது தான் பெட்டர்.” என்றவன் ஜானை கைகாட்டி, “அண்ட் ஹீ ஆல்சோ நீட்ஸ் ரெஸ்ட்.” என்றான்.
அவனின் முதல் சில வரிகளையெல்லாம் ஏற்றுக்கொண்டவர்களால், இறுதி வரியை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
“இவனுக்கெல்லாம் ரெஸ்ட் ஒண்ணு தான் கேடு!” என்று ஆளாளுக்கு முணுமுணுப்பது ரிஷபிற்கு கேட்டாலும், அது தெரிந்ததாக காட்டிக் கொள்ளவில்லை.
வழக்கம் போல ரிஷபை பின்தொடர்ந்தனர் மற்றவர்கள். நோலன் ஜானை தாங்கிக்கொள்ள மெதுவாக நடந்தான் ஜான்.
அப்போது முன்னே சென்ற ரிஷபின் அருகே வந்த நவி, “இந்த டிராகனை இதுக்கு முன்னாடி நீங்க பார்த்தது இல்லயா?” என்று வினவ, அவனோ பதிலேதும் சொல்லாமல், அப்படி ஒரு கேள்வியை கேட்கப்படாததைப் போல முன்னேறி சென்றான்.
‘இப்போ எதுக்கு இவன் மொறச்சுட்டு இருக்கான்!’ என்று நவி சிந்திக்க, சட்டென்று அவள் அந்த டிராகன் மிஷனிற்கு செல்லும் சமயத்தில் அவன் பார்த்த பார்வை நினைவிற்கு வந்தது.
‘ஓஹ், அதான் கோபமா இருக்கானா?’ என்று யோசித்தவளை தோளில் தட்டிய நந்து, “ஏன் இப்படி நின்னுட்டே கனவு கண்டுட்டு இருக்க?” என்றான்.
அப்போது தான் சிலர் தன்னை தாண்டி சென்றதையும் தான் நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருப்பதையும் கண்டாள்.
“ஒன்னுமில்ல வா போலாம்.” என்று நந்துவை அழைத்துக் கொண்டு நடந்தாள்.
அப்போது நந்து சும்மா இருக்காமல், “அங்க பார்த்தியா அந்த டோவினா உன் ஆளு கூட கடலை போடுறா.” என்றதும் முன்னே சென்ற ரிஷபை பார்க்க, அவனருகே நந்து கூறியது போலவே ‘கடலை போட்டு’க் கொண்டு சென்ற டோவினாவையும் கண்டாள்.
அதைக் கண்டவளின் மனதில் மீயுடைமை உணர்ச்சியின் தாக்கம் சற்று கூடித்தான் போனது. அவள் மனதிற்குள் நடந்த வேதியியல் மாற்றங்களை அறியும் முயற்சியில் இருந்ததால், நந்து கூறிய ‘உன் ஆளு’ என்ற பதம் அவளின் செவிக்குள்ளே செல்லவே இல்லை.
ஏற்கனவே, மனதிற்குள் இருக்கும் பல குழப்பங்களுக்கு மத்தியில் ரிஷபின் மீது ஏற்படும் ஈர்ப்பும் சேர்ந்து கொள்ள, மற்ற குழப்பங்களை காட்டிலும் இதற்கான விடையை சுலபமாகவே கண்டுபிடிக்க முடிந்தது நவியினால். அப்படி கண்டுபிடித்ததை ஏற்றுக்கொள்ளத் தான் முடியவில்லை.
ஒருவனை சந்தித்து இரண்டே நாட்களில் காதல் வயப்படுவாள் என்று முன்னர் யாராவது அவளிடம் கூறியிருந்தால், நவி நம்பியிருக்கவே மாட்டாள். ஆனால், இப்போது அவளின் கண்டுபிடிப்பை பார்க்கும் போது அது உண்மையாக அல்லவா நடந்தேறியிருக்கிறது.
ஆம் காதலே! எதிர்பாராத சூழலில், எதிர்பாராத நேரத்தில், எதிர்பாராதவனின் மேல் உண்டாகும் உணர்வின் பெயர் காதல் என்றால் நவிக்கு ரிஷபின் மேல் காதல் தான்!
‘இப்போ இந்த காதலுக்கு என்ன அவசியம்? நான் உண்மையிலேயே காதலிக்கிறேனா? காதல்னா என்னன்னே தெரியாததால, சாதாரணமா ஒருத்தர் மேல ஏற்படுற பிடித்தத்தைக் கூட காதல்னு கன்ஃபியூஸ் பண்ணிக்குறேனா!’ என்று மேலும் குழம்பித் தான் போனாள்.
நவி குழப்பத்திலேயே மூழ்கியிருக்க, அவர்கள் அனைவரும் அந்த வேலியைக் கடந்து மீண்டும் அந்த கட்டிடத்திற்குள்ளே வந்ததைக் கூட அவள் உணரவில்லை.
மீண்டும் நந்து தான் அவளை உசுப்பி, “என்ன நீ அடிக்கடி ட்ரீம்ஸ் போயிடுற?” என்றான்.
அவனின் கூற்றில், தன்னைத்தானே மனதிற்குள் கடிந்து கொண்டவள், அவளின் குழப்பங்களுக்கான விடையை கண்டறியும் நேரம் இது இல்லை என்று உணர்ந்து, அதைப் பற்றி மேலும் சிந்திப்பதை தள்ளிப் போட்டாள். ஆனால், மனம் ஒரு குரங்கல்லவா! சில சமயங்களில் எதைப் பற்றி சிந்திக்க வேண்டாம் என்று மூளை
எச்சரிக்கிறதோ, மனம் அதைப் பற்றியே சிந்திக்கும் என்பது அப்போது நவிக்கு தெரியவில்லை!
அதே போல, சில சமயங்களில் நம்முள் ஏற்படும் சிறு மாற்றம், பெரிய விளைவுகளை உண்டாக்கும் ஆற்றல் பெற்றது.
நவியின் மனதில் தோன்றிய காதலும், அதனால் அவளுள் ஏற்படும் தடுமாற்றங்களும், அவர்களின் பயணத்தில் எவ்வித விளைவுகளை உண்டாக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்…
Comments
Post a Comment
Please share your thoughts...