காட்சிப்பிழை 7
அனைவரும் அந்த வேலியைக் கடந்து வந்ததும் ரியான் ரிஷபிடம், “இப்போ திரும்ப அந்த சீக்ரெட் ரூமுக்கு போகப் போறோமா?” என்று வினவ, “இல்ல அது இங்கயிருந்து ரொம்ப தூரம்.” என்ற ரிஷப் ஜானை ஒரு பார்வை பார்த்துவிட்டு, “ஜானால அவ்ளோ தூரம் தாக்கு பிடிக்க முடியாதுன்னு நினைக்கிறேன். நாங்க அந்த பவர் சப்ளை ஆஃப் பண்ண போனப்போ, அந்த சீக்ரெட் ரூம் மாதிரியே ட்ரோன்ஸ் கண்காணிக்காத ஒரு இடத்தை பார்த்தோம். இப்போ நாம அங்கயே போலாம்.” என்றான்.
நவிக்கும் ரிஷப் எந்த இடத்தைப் பற்றி பேசுகிறான் என்பது புரிந்தது. மிகவும் கவனத்துடனே, முன்பு சென்ற அதே வழியில் சென்று அந்த அறையை அடைந்தனர்.
அத்தனை நேரம் வலியைப் பொறுத்துக் கொண்ட ஜானால், இப்போது சுத்தமாக முடியவில்லை. அவன் கீழே சரிய, அவனிற்கான அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு தயாரானான் நோலன். அவனிற்கு உதவியாக ஜாஷாவும் நந்துவும் இருந்தனர்.
ரிஷபுடன் ரியான், நவி மற்றும் டோவினா தங்களின் அடுத்தக்கட்ட திட்டத்தைப் பற்றி விவாதித்துக் கொண்டிருக்க, அவர்கள் யாருடனும் சேராமல் தனியே இருந்தனர் அந்த சீன தம்பதியர்.
ரியான் ரிஷபிடம், “அந்த டிராகனை இதுக்கு முன்னாடி நீங்க பார்த்தது இல்லயா?” என்று வினவ, அந்த கேள்விக்கான பதிலுக்காக நவியும் அவனின் பக்கவாட்டிலிருந்து பார்த்துக் கொண்டு தான் இருந்தாள்.
ஒருமுறை நவியை பார்த்த ரிஷப், “இல்ல. ஜான் சொன்ன மாதிரி அங்க இருந்து தப்பிக்க ரெண்டு வழி இருக்கு. ஒண்ணு இப்போ நாம போன வெற்று நிலம். இன்னொன்னு சில ஆபத்தான நீர்ச்சுழிகளையும், இதுவரை நாம பார்த்திடாத ஜந்துக்களையும் கொண்ட ஏரி. நாங்க அந்த ஏரி வழியில போனோம். ஏன்னா அந்த டேப்பில் அந்த வழி தான் ஹைலைட் பண்ணப்பட்டிருந்துச்சு. அதனால இந்த டிராகனை நாங்க பார்க்காம இருந்துருக்கலாம்.” என்றான் ரிஷப்.
ஆனால், அவனுமே குழம்பித் தான் போயிருந்தான் என்பது அவனின் தெளிவற்ற குரலிலேயே தெரிந்தது.
“அப்போ நாம அந்த ஏரி வழியில போனா, இந்த டிராகனால தொந்தரவு இருக்காதுல?” என்று வினவினாள் நவி. அவளிற்கே அவளின் கேள்வி அபத்தமாக தான் பட்டது. ஆனால், தனியே முறைத்துக் கொண்டு நிற்பவனிடம் இப்படியாவது பேசலாம் என்று தான் இந்த முயற்சி.
நவியை ஆழ்ந்து பார்த்தவன், “பின்விளைவுகள் பத்தி யோசிக்காம, சட்டுன்னு எந்த முடிவையும் எடுக்கக் கூடாது.” என்றான். அவனின் இந்த கூற்று எதற்காக என்பது நவிக்கு நன்றாக புரிந்தது.
நவி எதுவும் பேசாமல் ரிஷபின் கண்களை நோக்க அவனும் அவளைத் தான் பார்வையால் துளைத்துக் கொண்டிருந்தான்.
அப்போது ‘பூஜை வேளை கரடி’ போல, “ரிஷப், நம்மளோட நெக்ஸ்ட் பிளான் என்ன? அதை தெரிஞ்சுக்க ரொம்பவே எக்ஸைட்டிங்கா இருக்கு!” என்றாள் டோவினா.
நோலனிற்கு உதவி செய்துவிட்டு அப்போது தான் இவர்களின் அருகில் வந்த நந்து டோவினாவின் பேச்சைக் கேட்டு, “இங்க எல்லாரும் உசுரு போயிடுமோன்னு பயந்துட்டு இருக்காங்க, உனக்கு எக்ஸைட்டிங்கா இருக்கா?” என்று வாய்விட்டே கேட்க, அவனின் தொனியில் அங்கிருந்தவர்களின் முகத்தில் மெல்லிய புன்னகை அரும்பியது.
டோவினா நந்துவை முறைக்க, அவனோ அவளைக் கண்டுகொள்ளாமல், “ஆமா, இங்க இருக்க யாருக்கும் பசிக்கலையா?” என்று வினவ, ‘பசி’ என்ற பெயரைக் கேட்டதும் அங்கிருந்தவர்களுக்கும் அவ்வுணர்வு தோன்றியிருக்க வேண்டும்!
அதே இதமான மனநிலையுடனே, தங்களிடம் இருந்த உணவை பகிர்ந்து உண்டனர்.
உணவு இடைவேளை முடிந்ததும், மீண்டும் அவர்களுக்கான பரபரப்பான நொடிகள் ஆரம்பித்தன.
“அவ்ளோ பெரிய டிராகனை எப்படி ஃபேஸ் பண்ண போறோம்?” என்று ரியான் ஆரம்பிக்க, “ஆமா, அதை தூரத்துல பார்க்கும்போதே பெருசா பயங்கரமா இருந்துச்சே.” என்று நந்து தன் பயத்தை வெளிப்படுத்தினான்.
அப்போது நவி, “நாம வெடிகுண்டுகளை பயன்படுத்தலாம்.” என்று அவள் முன்னர் செய்ததை வைத்து சொல்ல, “போன முறை நம்ம லக். எப்படியோ அதை டிஸ்ட்ராக்ட் பண்ணி வெடிகுண்டுகளை அதோட உடம்புக்குள்ள போட்டு தப்பிச்சுட்டோம். ஆனா, எப்பவுமே லக்கை எதிர்பார்த்துட்டு இருக்கக் கூடாது… நீ சொன்ன மாதிரி அது ‘சூசைட் மிஷன்’ தான்” என்றான் ரிஷப்.
‘ஹ்ம்ம், நான் சொன்னதுல இதையாச்சும் ஒத்துக்குறானே!’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டாள் நவி.
‘சூசைட்’ என்ற வார்த்தையைக் கேட்டதும் ரியான், “நாம ஏன் ‘சூசைடல் ட்ரோன்ஸ்’ டெக்னிக் பயன்படுத்தக் கூடாது?” என்று எதையோ கண்டுபிடித்த ஆர்வத்துடன் வினவ, ரிஷபின் முகமும் முதலில் தெளிவாகி பின்னர் ஒளியிழந்ததைப் போல ஆனது.
“ஐடியா நல்லா தான் இருக்கு. ஆனா, அந்த டிராகன் இருக்க சைஸுக்கு இங்க இருக்க ட்ரோன்ஸ் வச்சு இதை முடிக்க முடியுமா?” என்று கேட்டான் ரிஷப்.
“ட்ரை பண்ணலாம். அண்ட் இதுல எனக்கு கொஞ்சம் எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு. நாலு அஞ்சு ட்ரோன்ஸை சேர்த்து ஒண்ணா ஜாயின் பண்ணி முயற்சிக்கலாம்.” என்றான் ரியான்.
அவர்கள் இருவரும் பேச, புரியாத மொழியில் பேசுவதைப் போல குழப்பமாக இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தனர் மற்றவர்கள். இந்த குழப்பத்துடன் மேலும் ஒரு குழப்பம் நவியை சேர்ந்து கொண்டது. நவியின் ‘புது’ குழப்பத்திற்கான காரணம், ரியான் கூறிய ‘எக்ஸ்பீரியன்ஸ்’!
‘ரியானுக்கு என்ன எக்ஸ்பீரியன்ஸா இருக்கும்? அதுவும் ட்ரோன்ஸ் வச்சு!’ என்று யோசித்தவளின் சிந்தனையை கலைத்தான் நந்து.
“நவி, இவங்க ஏதோ ‘சூசைட்’ ‘ட்ரோன்ஸ்’ன்னு புரியாத மாதிரியே பேசுறாங்களே, உனக்கு ஏதாவது தெரியுமா?” என்று வினவ, நவியோ ‘இல்லை’ என்னும் விதத்தில் உதட்டைப் பிதுக்கினாள்.
“ஓஹ், உனக்கும் தெரியாதா? உன் ஆளு உனக்கு சொல்லியிருப்பான்னு நினைச்சேனே!” என்று வேண்டுமென்றே நந்து கூற, முதல் முறை அவனின் ‘ஆள்’ என்ற பதத்தை கண்டுகொள்ளாமல் விட்டவள், இப்போது சரியாக அதைக் கண்டுகொண்டு, “நந்து, இப்போ என்ன சொன்ன?” என்று அடிக்குரலில் அவனிற்கு மட்டும் கேட்குமாறு வினவினாள்.
நந்துவும் அவளைப் போலவே, “ஹ்ம்ம், உன் ஆளுன்னு சொன்னேன்.” என்றான்.
“ப்ச், நந்து இப்போ எதுக்கு இப்படியெல்லாம் பேசிட்டு இருக்க?” என்று நவி அதே ‘ஹஸ்கி’ குரலில் தொடர்ந்தாள்.
“அப்போ சொன்னதுக்கு எதுவும் சொல்லல, இப்போ மட்டும் என்ன? அதான் ரெண்டு பேரும் பார்க்குறதுலயே தெரியுதே! அவரு தனியா போகப் போறேன்னு சொன்னா, ரெண்டு பேரும் கண்ணாலேயே பேசிக்குறதும், அதுக்கு அடுத்த முறை ரெண்டு பேரும் சேர்ந்து போறதும். அப்போ இதுக்கு பேரு என்ன நவி?” என்று நந்து சரியாக பாயிண்ட் பாயிண்டாக பேச, நவிக்கு தான் என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
‘இவ்ளோ ஓப்பனாவா தெரியுது!’ என்று தனக்குள்ளேயே கேட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவளின் மனதோடு நடத்திய உரையாடல் அவனையும் அடைந்ததைப் போல, “எனக்கு மட்டும் இல்ல, இங்க இருக்க எல்லாருக்குமே உங்க ரெண்டு பேரு மேல டவுட் தான்.” என்றான்.
நவியே அதைப் பற்றி எதுவும் நினைக்க வேண்டாம் என்று எண்ணியிருக்க, இப்போது நந்து மீண்டும் அவர்களின் சொல்லப்படாத காதலைப் பற்றி பேச ஆரம்பித்தது, நவிக்கு சற்று சங்கடமாகவே இருந்தது.
ஆயினும் நந்துவிடம் தன் மனநிலையை விளக்க வேண்டி, மெல்லிய குரலிலேயே பேச ஆரம்பித்தாள்.
“நந்து, எனக்கே தெரியாம இந்த ஃபீல் எப்படி ஏற்பட்டுச்சுன்னு தெரியல. அதுவும் இவ்ளோ வெளிப்படையா என்னோட ஃபீலிங்க்ஸை காட்டியிருக்கேன்னு இப்போ தான் எனக்கே தெரியுது. நான் ரொம்பவே கன்ஃப்யூஸ்ட்டா இருக்கேன்.” என்றாள் நவி.
நந்துவும் இத்தனை வருடங்களாக நவியைப் பார்த்துக் கொண்டு தானே வருகிறான். ஆண்கள் (நந்துவை தவிர்த்து) என்றாலே அவர்களிடமிருந்து பல அடிகள் தூரத்தை கடைபிடித்து வருபவள், ரிஷபிடம் அந்த அளவுகோலை பயன்படுத்தாதது நந்துவிற்கு ஆச்சரியமாகத் தான் இருந்தது.
இருவரின் நடவடிக்கைகளையும் அலசி ஆராய்ந்த பின்பே நவியிடம் அதைப் பற்றி பேச வேண்டும் என்று பொறுமையாக இருந்தவன், சற்று நேரத்திற்கு முன்பு நவியிடம் தோன்றிய பொறாமை உணர்வைக் கண்டு இப்போதே அவளிடம் பேசினான்.
நந்து அவளின் கைகளைப் பற்றிக் கொண்டு, “எனக்கு புரியுது நவி. ஐ நோ யூ! ஆனா, இதுல நீ எவ்ளோ சீரியஸா இருக்கன்னு தெரிஞ்சுக்க தான் இப்போ பேசுறேன். டூ யூ லவ் ஹிம்?” என்று நந்து வினவினான் நல்ல நண்பனாக.
“இது லவ்வான்னு எனக்கு தெரியல நந்து. இந்த மாதிரி சிசுவேஷன்ல லவ் பண்றேன்னு சொல்றது எனக்கே வியர்ட்டா இருக்கு.” என்று நவி கூற, அவளை சமாதானப்படுத்தும் விதமாக கைகளை அழுத்தியவன், “கூல் நவி, இப்போதைக்கு இதைப் பத்தி நாம பேச வேண்டாம். முதல்ல இங்க இருந்து தப்பிச்சு வெளிய போவோம்.” என்று அவளை திசை திருப்பும் விதமாக பேசினான்.
இவர்கள் இருவரும் இங்கு பேசிக் கொண்டிருக்கும் வேளையில், ரிஷபும் ரியானும் தங்களின் திட்டத்தை வகுத்துவிட்டனர். அவர்கள் இருவரும் பேசுவதை ‘சப்டைட்டில்’ இல்லாத வேற்று மொழி படமாக பார்த்துக் கொண்டிருந்தாள் டோவினா.
“கைஸ், அந்த டிராகனை அழிக்க நாங்க யோசிச்சுருக்க வழி ‘சூசைடல் ட்ரோன்ஸ்’!” என்ற ரிஷப்.
“அப்போலயிருந்து இதைத் தான் சொல்றாங்களே தவிர அப்படின்னா என்னன்னு சொல்ல மாட்டிங்குறாங்களே.’ என்று நந்து நவியின் காதில் முணுமுணுத்தான். அவளின் மனதை மாற்றும் ஒரு முயற்சி.
“பொதுவா, கட்டுப்பாட்டை இழந்து ட்ரோன்களை அழிக்க, இன்னொரு ட்ரோன்னை அனுப்புவாங்க. சுருக்கமா சொல்லனும்னா நம்ம கும்கி யானை மாதிரி! அதே தான் இப்போ நம்மளும் பயன்படுத்த போறோம். ஆனா, இந்த டிராகன் பெருசுங்கிறதால, குறைஞ்சது அஞ்சு ட்ரோன்களை இணைச்சு, அதுக்குள்ள வெடிகளை நிரப்பி ஆயுதமா உருவாக்க போறோம்.” என்றான் ரிஷப்.
அவற்றையெல்லாம் வாயைப் பிளந்து கொண்டு கேட்டிருந்தனர் மற்றவர்கள்.
“அஞ்சு ட்ரோன்களை எப்படி நாம சேகரிக்க போறோம்?” என்று வியப்பிலிருந்து வெளிவந்த நவி வினவ, “காலைல குறிப்பிட்ட நேரத்துக்கு அந்த ட்ரோன்ஸ் அண்டர்கிரௌண்டுக்கு போகும்னு சொன்னேன்ல. அங்கயிருந்து தான் நாம சில ட்ரோன்ஸை திருட போறோம்.” என்று மிக சாதாரணமாக கூறினான் ரிஷப்.
அவன் கூறியதில் அங்கிருந்தவர்கள் தான் பதறினர்.
“எதே ட்ரோன்ஸை திருடனுமா?” என்று பயத்தை வெளிப்படையாகவே காட்டினான் நந்து.
“ஆமா நந்து. நாங்க ரெண்டு பேரும் டிஸ்கஸ் பண்ணதுல, அந்த ட்ரோன்ஸை எல்லாம் அண்டர்கிரௌண்டுக்கு வர வச்சு ரீசட் பண்ணி, அதை முழுசா அனலைஸ் பண்ணி, அப்பறம் மறுபடியும் செட் பண்ணி அனுப்புறாங்கன்னு தோணுது. நம்மால அந்த ட்ரோன்ஸ் ரீசட் ஆகியிருக்க நேரத்துல தான் அதை திருட முடியும்.” என்ற ரியான்.
சிறிது நேரம் அங்கு மௌனம் குடிகொள்ள, அனைவரும் அவர்கள் கூறியதை மனதில் பதிய வைக்க முயன்றனர்.
“சோ காலைல தான் நாம அந்த ட்ரோன்ஸை திருட போறோம். அண்ட் இந்த முறை ரெண்டு டீம் இல்ல, மூணு டீம் தேவைப்படும்.” என்று ஆரம்பித்தான் ரிஷப்.
“முதல் டீம் எப்பவும் போல சாப்பாடு எடுக்குறதுக்கு. ரெண்டாவது டீம் ஆயுதங்களையும், மூணாவது டீம் ட்ரோன்ஸையும் திருட போறோம். ட்ரோன்ஸ் திருட என்னோட ரியான் அண்ட் நோலன் வரட்டும்.” என்று நவியை ஒருமுறை பார்த்துக் கொண்டே கூறினான்.
நவியும் தற்காலிகமாக ரிஷபைப் பற்றிய எண்ணங்களை ஒத்திவைக்கலாம் என்று முடிவெடுத்ததால் அதற்கு எந்த விதமான எதிர்வினையும் புரியவில்லை. ரிஷபும் தன் பார்வையை திருப்பிக் கொண்டான்.
ஆனால் எதிர்பார்க்காத இடத்திலிருந்து எதிர்ப்பு வந்தது. “ரிஷப் நான் உங்க டீம்ல ஜாயின் பண்ணிக்குறேனே. கொஞ்சம் எக்ஸைட்டிங்கா இருக்கும்!” என்று டோவினா கூற, அங்கிருந்த அனைவருமே அவர்களின் பிடித்தமின்மையை முகபாவத்திலேயே வெளிப்படுத்தினர்.
“இவளுக்கு ‘எக்ஸைடிங்’ தவிர வேற ஒன்னும் தெரியாது போல!” என்று நந்து வெளிப்படையாகவே முணுமுணுத்தான்.
ரிஷபிற்கும் எரிச்சலாக தான் இருந்திருக்க வேண்டும். “எனக்கு ரியான் அண்ட் நோலன் வந்தா தான் ஹெல்ப்ஃபுல்லா இருக்கும்னு தோணுது.” என்று அழுத்தமாகவே கூறினான்.
அதன்பின்பு டோவினா வாய் திறப்பாளா!
“சாப்பாடு மற்றும் ஆயுதங்களை போன முறை யாரு எடுத்தீங்களோ அவங்களே எடுங்க. உங்களுக்கு தான் எந்தந்த பொருட்கள் எங்க இருந்துச்சுன்னு தெரியும். சோ சீக்கிரமா எடுத்துடலாம். ஜாஷா அண்ட் ஜான் இங்கயே இருக்கட்டும். ஜாஷா இந்த முறை ஜானுக்கு துணையா இருங்க.” என்றவன் நவியிடம், “இவங்க உன் பொறுப்பு. உன்கிட்ட ஒரு டேப் இருக்கும். அதுல வழி பார்த்து பத்திரமா போயிட்டு இதே இடத்துக்கு திரும்பிடுங்க.” என்றான் ரிஷப்.
‘ஹ்ம்ம், இப்போ மட்டும் நம்பி பொறுப்பை ஒப்படைக்குறாராமா!’ என்று மனதிற்குள் கூறிக் கொண்டாலும் வெளியே சரியென்று தலையசைத்தாள்.
*****
அவர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த நேரம் வந்தது. அந்த சங்கொலி அனைவரின் காதிலும் விழ, அப்போதே அவரவர்களின் பயணத்திற்கு தயாரானார்கள்.
செல்லும் முன் நவியிடம் வந்த ரிஷப், “ஆயுதங்கள் எடுக்கப்போற அறையில, லெஃப்ட் சைட்ல ஃபர்ஸ்ட் கப்போர்ட்ல நானோ வெப்பன்ஸ்னு ஸ்டிக்கர் ஒட்டி இருக்க பாக்ஸை ஓப்பன் பண்ணி அதுல எவ்ளோ வெப்பன்ஸ் எடுக்க முடியுமோ, எல்லாத்தையும் எடுங்க. ஏன்னா நம்ம கிட்ட இருக்க ட்ரோன்ஸ்ல அதை லோட் பண்ணா தான் அந்த டிராகனை அழிக்க முடியும்.” என்றான்.
‘நானோ வெப்பன்ஸ்ஸா!’ என்று நவி யோசிக்கும்போதே அனைவரையும் கிளம்ப சொல்லி விட்டதால், அவளும் அதே சிந்தனையிலேயே தாங்கள் செல்ல வேண்டிய பாதையில் முன்னே நடக்க ஆரம்பித்தாள்.
இம்முறை ‘நானோ வெப்பன்ஸின்’ பிடியில் அவளின் சிந்தனை சிக்கி விட்டதால், ரிஷபை அவள் திரும்பிப் பார்த்திருக்கவில்லை. ரிஷபும் அவள் ஏதோ சிந்தனையில் இருப்பதைக் கண்டு, ஒரு பெருமூச்சுடன் திரும்பிக் கொண்டான். இக்காட்சியை இரு ஜோடி விழிகள் பார்த்தன.
நவி ஒவ்வொரு முறையும் அந்த டேப்பை பார்த்துக் கொண்டே அனைவரையும் கவனமாகவே அழைத்துச் சென்றாள். முன்னர் போலவே இரு புறமும் பிரிந்து செல்ல வேண்டிய வழி வந்தது.
நவியும் நந்துவும் ஆயுதங்களை எடுக்கவும், டோவினா, வாங் வெய் மற்றும் ஷாங் மின் உணவு பொருட்களை எடுக்கவும் செல்வதாக முன்பே முடிவு செய்யப்பட, அதன்படியே பிரிந்து செல்ல முற்பட்டபோது, நவி டோவினாவிடம், “ போற இடத்துல ஆபத்து வந்தா ஏதாவது சிக்னல் கொடுங்க. அண்ட் உங்ககிட்ட துப்பாக்கி இருக்குல?” என்று கேட்க, டோவினாவோ சரியான எதிர்வினை புரியாமல் அலட்சியமாக நின்று கொண்டிருந்தாள்.
‘இப்போ இவளுக்கு என்ன ஆச்சு?’ என்று எண்ணிக்கொண்டே மீண்டும் “டோவினா, ஏதாவது டவுட்ஸ் இருக்கா?” என்றாள் நவி.
“ப்ச், என்ன உங்களுக்கு தான் இதெல்லாம் தெரியும்னு எல்லாரு முன்னாடியும் சீன் போடுறீங்களா? எங்களுக்கும் எங்களை பார்த்துக்க தெரியும்.” என்று கத்தியவள், “எப்போ பார்த்தாலும் ‘நானும் வரேன்’னு முன்னாடி போய் நின்னுக்க வேண்டியது. இப்போ வந்து என்னை கேள்வி கேட்க வேண்டியது.” என்று முணுமுணுத்தாள்.
அவள் கூறியதில் சற்று அதிர்ச்சியான நவி எவ்விதம் எதிர்வினையாற்றுவது என்று தெரியாமல் விழிக்க, நந்துவுக்கு கூட லேசான கோபம் எட்டிப்பார்த்தது.
அவன் டோவினாவிடம் ஏதோ கூறப் போக, சுயத்தை அடைந்த நவி அவனைத் தடுத்து, “இப்போ இதுக்கெல்லாம் நேரம் இல்ல நந்து.” என்றவள் டோவினாவின் பக்கம் திரும்பாமல் அந்த சீன தம்பதியரிடம், “சீக்கிரம் வந்துடுங்க.” என்று கூறிவிட்டு தங்களின் பாதையில் நடக்க ஆரம்பித்தாள்.
“இப்போ எதுக்கு என்னை இழுத்துட்டு வந்த நவி? அந்த வெள்ளை காராச்சேவு ஓவரா தான் பண்ணிட்டு இருக்கா. நாக்கை பிடுங்குற மாதிரி நாலு கேள்வி கேட்டா தான் எனக்கு திருப்தியா இருக்கும்.” என்று புலம்பிய நந்துவை சமாதானப்படுத்தியவள், “எனக்கு மட்டும் கோபம் இல்லன்னு நினைக்குறீயா? ஆனா, அதைக் காட்ட இது சரியான நேரம் இல்ல” என்று கூறி அவனை ஆயுதங்கள் அடங்கிய அறையின் பக்கம் அழைத்துச் சென்றான்.
ஏற்கனவே வந்த பாதை என்பதால், சீக்கிரமாகவே அந்த அறைக்கு சென்றனர். ஒருமுறை சுற்றுப்புறத்தை நன்கு ஆராய்ந்துவிட்டே அறைக்குள் சென்றாள் நவி.
உள்ளே சென்றதும் நந்துவிடம், “போன முறை ஜான் அண்ட் டேவிட் எடுத்த மாதிரி ஆயுதங்களையெல்லாம், உன்னால எவ்ளோ முடியுமோ அவ்ளோ எடுத்துக்கோ.” என்றவள், ரிஷப் அடையாளம் கூறிய ‘நானோ வெப்பன்ஸ்’ புறம் சென்றாள்.
அவன் கூறிய அலமாரியைத் திறந்தவள், அவன் சொன்னதைப் போலவே ‘நானோ வெப்பன்ஸ்’ என்று ஸ்டிக்கர் ஒட்டியிருந்த டப்பாவை திறக்க, அதற்குள் மிகச்சிறிய அளவிலான பொருட்களை கண்டாள்.
முதலில் அவை என்னவென்று தெரியாமல் விழித்தவள், அவற்றுள் ஒன்றிரெண்டை கையில் எடுத்து பார்த்ததும் தான், அவையாவும் சிறிய வகை தோட்டாக்கள், வெடிகுண்டுகள் என்று தெரிய வந்தது.
மேலும் அதனருகே இருந்த கோப்பில், அவற்றைப் பற்றின விளக்கங்களும் இருந்தன. நேரமின்மை காரணத்தினால், அதில் விரைவாக பார்வையை ஓட்டியவள், அவள் தெரிந்துகொள்ள வேண்டியவற்றை மட்டும் உள்வாங்கிக் கொண்டாள்.
நானோ என்றால் மிக நுண்ணிய என்று பொருள். அளவில் கூற வேண்டுமென்றால், நூறு கோடியில் ஒன்று என்பதன் முன்னெட்டு தான் நானோ. மிகச்சிறிய அளவிலான ஆயுதங்களான தோட்டாக்கள், வெடிகுண்டுகள் ‘நானோ வெப்பன்ஸ்’ என்று அழைக்கப்படும். அளவில் சிறியதாக இருந்தாலும், வீரியத்தில் அதன் முன்னோடிக்கு எந்த வகையிலும் குறைந்தது இல்லை இந்த நானோ வெப்பன்ஸ்.
இவற்றையெல்லாம் தெரிந்து கொண்டவள், இனிமேல் தாமதிக்க நேரமில்லை என்று உணர்ந்து அந்த கோப்பையும் கையிலெடுத்துக் கொண்டவள், ரிஷப் கூறியதைப் போலவே தன்னால் முடிந்த அளவிற்கு அந்த நானோ வெப்பன்ஸை எடுத்துக் கொண்டாள்.
இருவரும் தங்களின் வேலையை முடித்துவிட்டு மற்றவரைப் பார்த்து கிளம்பலாம் என்று தலையசைத்துக் கொண்டனர்.
கைகளில் பெரிய பையை தூக்கிக் கொண்டே வெளியில் வர, அங்கு எவ்வித நடமாட்டமும் இல்லை என்று உறுதிப்படுத்திக் கொண்டனர். சற்று வேகமாகவே, மற்றொரு குழுவை வரசொல்லிய இடத்தை அடைந்தனர்.
ஆனால், அவர்கள் இன்னும் அங்கு வந்திருக்கவில்லை. சில நொடிகள் காத்திருந்தவர்களுக்கு, ஏதேனும் ஆபத்தில் சிக்கிக் கொண்டார்களா என்று பயம் ஏற்பட்டது.
மேலும் சில நிமிடங்கள் காத்திருந்தவர்கள், தாங்களே அங்கு சென்று பார்த்துவிடலாம் என்று நினைத்து டேப்பில் அங்கு செல்வதற்கான வழியைக் கண்டனர்.
இருவரும் அந்த வழியில் பயணிக்க துவங்கும்போதே அந்த புறத்திலிருந்து மூவரும் வருவதைக் கண்டனர். அவர்களை கண்டதும் தான் நவி மற்றும் நந்து இயல்பாகினர்.
ஆனால், அவர்கள் அருகில் வரும்போது தான் அவர்களின் மாற்றம் கண்ணில் விழுந்தது. இரு பெண்களும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டே வர, அந்த ஆண், தன் மனைவியை சமாதானப்படுத்தியவாறே வந்தான்.
‘இப்போ என்ன சண்டையோ?’ என்று நவி மற்றும் நந்து தங்களின் மனதிற்குள்ளேயே அலுத்துக் கொண்டாலும் வெளியே அதைக் கேட்கவில்லை. அவர்களுக்கும் அதைப் பற்றி பேசுவதற்கான அவகாசத்தை தரவில்லை.
அவர்களை அழைத்துக் கொண்டு முதலில் இடத்தை காலி செய்ய வேண்டும் என்று தான் நினைத்தாள் நவி. இப்படி எதற்கெடுத்தாலும் சண்டை போடும் நபர்களை வைத்துக் கொண்டு அந்த ட்ரோன்களை எதிர்ப்பதை அவளால் கனவில் கூட நினைத்து பார்க்க முடியவில்லை!
அந்த நொடி, இவற்றையெல்லாம் இங்கு வந்ததிலிருந்தே செய்து கொண்டிருக்கும் ரிஷபை நினைத்து அவனிற்கு மனதிற்குள்ளேயே பாராட்டு பத்திரம் வேறு வாசித்தாள் நவி.
ஒவ்வொருவரும் அவரவர்களின் எண்ணங்களில் உழன்று கொண்டே அவர்களின் தற்போதைய ரகசிய அறைக்கு வந்து சேர்ந்தனர்.
அறையின் ஒரு மூலையில் சோர்வாக படுத்திருந்த ஜானையும் அவனிற்கு சற்று தள்ளி அமர்ந்திருந்த ஜாஷாவையும் பார்த்தாள் நவி.
அவர்கள் உள்ளே வந்ததும் ஜாஷா, “ஓகேயா?” என்று நவியிடம் வினவ, நவியும் சிறு புன்னகையுடன் தலையசைத்தாள். இங்கிருந்தவர்களில் ஜாஷாவிடம் நல்லதொரு பிணைப்பு ஏற்பட்டிருந்தது நவிக்கு.
தாங்கள் கொண்டு வந்த பொருட்களை அந்த அறையின் ஒரு பகுதியில் வைத்தனர். பின் ஜாஷாவிடம் வந்து, “அவங்ககிட்ட இருந்து எதுவும் தகவல் கிடைச்சுதா?” என்று வினவினாள் நவி.
எந்த தகவலும் வந்திருக்காது என்று தெரிந்தே நவி வினவ, ஜாஷாவும் நவிக்கு தெரிந்ததையே கூறினாள்.
இந்நிலையில், மீண்டும் அந்த சீன பெண் ஷாங் மின்னும் டோவினாவும் ஏதோ விவாதத்தில் இருப்பதை நவி மற்றும் ஜாஷா கண்டனர்.
“எந்த மாதிரி சூழ்நிலைல மாட்டியிருக்கோம்னு புரிஞ்சுக்காம சண்டை போட்டுட்டு இருக்காங்களே!” என்று ஜாஷா கவலைப்பட, “ஹ்ம்ம், எத்தனையோ முறை சொல்லியாச்சு. இப்படியே போயிட்டு இருந்தா, இவங்களை சண்டை போடாம பார்த்துக்கவே நம்ம நேரம் சரியா போயிடும் போல.” என்று அலுத்துக் கொண்டாள் நவி.
இருவரும் அவர்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டனரே தவிர சண்டையிடும் இருவரையும் தடுக்க முற்படவில்லை. இவர்கள் சென்று சண்டைக்கான காரணத்தை வினவினால், அதை வைத்து மேலும் சண்டை வலுக்கும் என்பதை கணித்தவர்களாக அமைதியாகவே இருந்தனர்.
அவர்கள் எண்ணியதைப் போலவே, வாங் வெய் ஷாங் மின்னை அமைதிப்படுத்த, அந்த சண்டையும் ஓய்ந்தது.
அதன்பின்பு, அவர்களுக்கு வெகு அருகில் நின்று கொண்டு அந்த சண்டையை டிவியில் வரும் ‘ரியாலிட்டி ஷோ’வைப் போல பார்த்துக் கொண்டிருந்த நந்துவை அழைத்து சண்டைக்கான காரணத்தை வினவ, “ஹ்ம்ம், ரெண்டு பொண்ணுங்க அடிச்சிக்கிறதுக்கு காரணம் வேணுமா என்ன?” என்று கூற, இரு பெண்களும் அவனை முறைத்தனர்.
அதைக் கண்டு இளித்து சமாளித்தவன், “எனக்கும் சரியான காரணம் தெரியல. ஆனா, சண்டையை வச்சு பார்க்கும்போது, ‘நீ சொன்னது சரியா, நான் சொன்னது சரியா’ங்கிற மாதிரியான சண்டையா தான் தெரியுது. கொஞ்ச நேரம் வெயிட் பண்ணா, அந்த வெள்ளை காராச்சேவு வாயில இருந்து என்ன மேட்டர்னு கறந்துடலாம்.” என்றான் நந்து.
இப்படி பேசியபடியே நேரம் கழிய, மீண்டும் அந்த சங்கொலியைக் கேட்டு அனைவரும் பரபரப்பாகினர். இந்த சங்கொலிக்கான அர்த்தம் தான் அவர்களுக்கு தெரியுமே!
ட்ரோன்களை எடுக்கச் சென்ற மூவரும் இன்னும் வராததைக் கண்டு, ஏதேனும் ஆபத்தில் சிக்கிக் கொண்டார்களா என்ற பயம் அனைவரின் மனதிலும் தோன்றியது.
பதட்டம் நிறைந்த சூழலில், ஒவ்வொரு நொடியையும் எண்ணிக் கொண்டிருந்தவர்கள், திடீரென்று கேட்ட துப்பாக்கி சத்தத்தில் மேலும் பயந்து ஒருவரின் கைகளை மற்றவர் பற்றிக் கொண்டே நின்றிருந்தனர்.
அடுத்த இரண்டு நிமிடங்களில் தோட்டாக்களின் சத்தம் நின்று போக, அந்த அமைதியும் அவர்களை பயப்படச் செய்தது.
அடுத்தவர்களின் இதயத்துடிப்பைக் கூட துல்லியமாக கேட்கும் அளவிற்கான அமைதி! பயத்தில் உண்டாகும் பெருமூச்சு சத்தமும் இதயதுடிப்புடன் போட்டிப் போட்டுக் கொண்டிருந்தது.
அப்போது அவர்கள் இருந்த ரகசிய அறைக்கான கதவின் கைப்பிடியை யாரோ (எதுவோ) மெதுவாக திறக்கும் சத்தம் கேட்க, பயத்தின் உச்சத்தில் இருந்தவர்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை.
சாவின் விளிம்பில் இருப்பவர்களுக்கு, கடைசி ஏழு நிமிடங்களில் அவர்கள் வாழ்வில் ஏற்பட்ட மிகவும் சந்தோஷமான நிகழ்வுகள், சோகமான நிகழ்வுகள், குற்றவுணர்வு என்று கலவையான நினைவுகள் அணிவகுத்து வந்து போகுமாம். அந்த அறையில் இருந்தவர்களுக்கு கூட அவர்களின் மூளை அப்படி தான் சில காட்சிகளை அவர்களின் மனக்கண்ணில் ஓட விட்டது.
ஆனால், ஏழு நொடிகள் முழுதாக முடிவதற்கு முன்னரே, கதவைத் திறந்து வந்த அம்மூவர், அந்த மனக்காட்சிகளை நிறுத்தியிருந்தனர்.
அவர்களைக் கண்டதும், இதுவரை மூச்சை இழுத்துப் பிடித்து ஒருவரையொருவர் ஆதரவுக்காக பற்றியிருந்த மற்ற அனைவரும், சிறு ஆசுவாசத்துடன் அப்படியே அமர்ந்துவிட்டனர். ஏனெனில், அவர்கள் அந்த இரு நொடிகளில் அனுபவித்த பயம் அத்தகையது!
அவர்கள் முகங்களைக் கண்டே நடந்ததை யூகித்த ரிஷப், “ரிலாக்ஸ் கைஸ்!” என்றான்.
நவியும் சற்று பயந்து தான் இருந்தாள். வேக மூச்சுக்களை வெளியிட்டு தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டவள், மீண்டும் அம்மூவரையும் பார்த்தாள். அவர்களின் கைகளில் ட்ரோன்களை ஏந்திக் கொண்டிருந்தனர்.
ரிஷபை பார்த்தவள், “எல்லாம் ஓகேவா?”என்று வினவ அவனோ, “இங்கயிருந்து அண்டர்கிரௌண்டுக்கு போய் ட்ரோன்களை சேகரிச்ச வரைக்கும் எல்லாம் சரியா தான் போச்சு. ஆனா, ட்ரோனுக்கான கண்ட்ரோலரை எடுத்ததும் தான் அந்த சங்கொலி அடிக்க ஆரம்பிச்சுருச்சு. நாங்க அதுல ஒரு நொடி ஷாக்காகி நின்னுட்டதால, அங்க இருந்த மத்த ட்ரோன்ஸ் ஆன்னாக ஆரம்பிச்சுருச்சு. அதுங்க கிட்டயிருந்து நூலிழைல தான் தப்பிச்சு வந்துருக்கோம்.” என்றான்.
“எனக்கென்னவோ அந்த கண்ட்ரோலரை நாம எடுத்ததுக்கு அப்பறம் தான் அந்த சத்தம் கேட்டிருக்கும்ன்னு தோணுது!” என்றான் ரியான்.
“இருக்கலாம் ரியான். ஏன்னா அந்த கண்ட்ரோலர் இல்லாம ட்ரோன்ஸ் வச்சுக்கிட்டு நாம எதுவும் செய்ய முடியாது.” என்றான் ரிஷப்.
அவர்களின் பேச்சை இடைவெட்டிய நவி, “புல்லட்ஸ் சத்தம் கேட்டுச்சே!” என்றாள்.
“அதுல ஒரு ட்ரோன் எங்களை ஃபாலோ பண்ணிட்டு வந்துச்சு. அதான் நாங்க எடுத்துட்டு வந்த வேறொரு ட்ரோன்னை வச்சு அதை டைவர்ட் பண்ணிட்டு நாங்க தப்பிச்சு வந்தோம்.” என்றான் ரிஷப்.
சிறிது நேர நலவிசாரிப்புக்கு பின்னர், ரியான் மற்றும் ரிஷப் அந்த ட்ரோன்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட, மற்றவர்கள் அவர்கள் செய்வதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்
ரிஷப் நவியிடம் ‘நானோ வெப்பன்ஸ்’ பற்றி வினவ, அவள் தான் எடுத்து வந்திருந்ததை அவனிடம் கொடுத்துவிட்டு, அந்த கோப்பையும் கொடுத்தாள்.
“ஓ மேனுவலும் இருக்கா. ரொம்பவே யூஸ்ஃபுல்லா இருக்கும்.” என்றவாறே அதை வாங்கினான் ரிஷப்.
சில மணி நேரங்களுக்கு பின்னர், பெரிய அளவிலான பல நானோ ஆயுதங்களை தன்னகத்தே வைத்திருக்கும் அந்த ‘சூசைடல் ட்ரோன்’னை செய்து முடித்தனர்.
சில மணி நேரங்கள் என்றாலும், தங்களின் முழு உழைப்பைப் போட்டு உருவாக்கியதால், ரிஷப் மற்றும் ரியான் இருவருமே சோர்ந்து தான் இருந்தனர். அவர்கள் லேசாக சாய்ந்து அமர்ந்திருக்க, நந்து அத்தனை நேரம் அந்த ட்ரோன்னை பார்த்தவன் ரியானிடம், “செமையா இருக்கு ப்ரோ.” என்றான்.
ரியானும் சிரித்துக் கொண்டே, “இதுல எனக்கு எக்ஸ்பீரியன்ஸ் இருக்கு நந்து.” என்று கூற, மீண்டும் அந்த ‘எக்ஸ்பீரியன்ஸ்’ என்ற வார்த்தையில் குழம்பினாள் நவி. அதையே அவனிடம் கேட்கவும் செய்தாள்.
நவியின் கேள்வியில் சற்று தடுமாறிய ரியான், “எனக்கு ஃபோட்டோகிராஃபில ஆர்வம் அதிகம். அதுவும் ஏரியல் வியூ ஃபோட்டோகிராஃபிக்காக நானே சொந்தமா ட்ரோன் வச்சுருந்தேன். அப்படி தான் ட்ரோன்ஸ் பத்தின ஆர்வமும் அதிகமாச்சு. பல ட்ரோன்களை வாங்கி அதை பார்ட் பார்ட்டா பிரிச்சு நானே திரும்பியும் புதுசா டிசைன் பண்ணுவேன்.” என்று கண்கள் மின்ன பேசிக் கொண்டிருந்தான் ரியான்.
அவன் பேசுவதை மற்றவர்கள் சாதாரணமாக கேட்டுக் கொண்டிருந்தாலும், நவியின் மனமோ அனைத்தையும் சந்தேக கண்ணுடனேயே பார்க்க சொல்லியது.
“ட்ரோன்ஸை இது மாதிரி ஃபோட்டோ ஷூட்ல யூஸ் பண்றதுக்கு இப்ப அனுமதிக்கிறாங்களா என்ன?” என்று நவி வினவ, ஒரு விரக்தி புன்னகையுடன், “நான் சொன்னது இப்போ இல்ல, ஏழு வருஷத்துக்கு முன்னாடி!” என்ற ரியான்.
“ஓஹ், யூ மீன் உங்களோட டீன் ஏஜ்லயே ட்ரோன்ஸ் மேல ஆர்வம் வந்துருச்சா?” என்று இதை சாதாரணமாக வினவியிருந்தாள் நவி. ஆனால், அதற்கு கிடைத்த பதில் தான் யாரும் எதிர்பார்க்காதது.
“இல்ல, என்னோட டுவன்டிஸ்ல தான் எனக்கு ஃபோட்டோகிராஃபில ஆர்வம் வந்துச்சு. அதுக்கு அப்பறம் டூ இயர்ஸுக்கு அப்பறம் தான் ட்ரோன்ஸை ஆராய ஆரம்பிச்சேன்.” என்று ரியான் கூற, இப்போது அங்கிருந்த அனைவருக்குமே சந்தேகம் ஏற்பட்டது.
“எப்படி ப்ரோ? செவன் இயர்ஸுக்கு முன்னாடி ட்ரோன்ஸை பார்ட் பார்ட்டா பிரிச்சேன்னு சொல்றீங்க. அதுக்கு முன்னாடி ஃபோட்டோகிராஃபில இன்ட்ரெஸ்ட்னு சொல்றீங்க. எங்கேயோ கணக்கு இடிக்குதே! ஆமா, உங்களுக்கு இப்போ என்ன வயசு?” என்று குழப்பத்துடன் கேட்டான் நந்து.
ரியானோ ஒரு பெருமூச்சுடன், “இருபத்திமூணு!” என்றான்.
“வாட்?” – அங்கிருந்த பலரின் பொதுவான கேள்வியாக இது தான் இருந்தது.
“லாஸ்ட் செவன் இயர்ஸா நான் டுவன்ட்டி த்ரீ தான்!” என்று அடுத்த அதிர்ச்சியைக் கொடுத்தான் ரியான்.
Comments
Post a Comment
Please share your thoughts...