காட்சிப்பிழை 10
புதை மணலில் சிக்கிக்கொண்டு தவித்த ஜாஷாவை தன் கையில் கிடைத்த சிறிய கயிற்றைக் கொண்டு காப்பாற்ற வெகுவாக முயற்சித்தான் ரிஷப். மெல்ல மெல்ல ஜாஷாவை வெளியில் கொண்டு வந்து விடலாம் என்று எண்ணியிருந்த வேளையில் சட்டென்று ஒரு கோடாரி இருவரும் பிடித்திருந்த கயிற்றின் நடுவே வெட்ட, அதன் எதிர்வினையாக உள்ளே இழுக்கப்பட்டாள் ஜாஷா.
ஒரு நொடிக்கும் குறைவான நேரத்தில் அது நிகழ்ந்திருந்ததால், மற்றவர்கள் திகைத்து தான் போயினர்.
ஜாஷா உள்ளே இழுக்கப்பட்டதிலிருந்து அவ்வளவு சீக்கிரம் வெளிவர முடியவில்லை அவர்களால். அனைவரும் ஜாஷாவை உள்ளே இழுத்துக் கொண்டு சென்ற புதை மணலில் கவனத்தை வைத்திருக்க, அவர்களின் கவனத்தை தன் பக்கம் திருப்புவது போல சிரித்தான் அவன்.
கையில் கோடாரியுடனும், முகத்தில் ‘சைக்கோ’த்தனமான சிரிப்புடனும் நின்றிருந்தவனை காண்பதற்கு சற்று பயமாகத் தான் இருந்தது.
காலில் அடிப்பட்டிருந்ததால், சற்று இழுத்து இழுத்து நடந்தவன், நோலனின் அருகே வந்து அவனின் காதில் ஏதோ கூறிவிட்டு மீண்டும் அனைவரையும் பார்த்து சிரித்தான்.
அவனின் செயல்களே அவன் சரியான மனநிலையில் இல்லை என்பதை உணர்த்த, அடுத்து அவன் என்ன செய்ய காத்திருக்கிறானோ என்பதே பலரின் இதயத்துடிப்பை எகிறச் செய்து கொண்டிருந்தது.
அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில், தன் கையில் வைத்திருந்த கோடாரியை தன் கழுத்தை நோக்கி ஆவேசமாக வீச, அந்த கோடாரி தன் பணியை சிரிப்பாக செய்தனன் விளைவாக, அவனின் இரத்தம் கீழே தெறித்தது. கழுத்தில் சிக்கிய கோடாரியுடனே தரையில் வீழ்ந்தான் ஜான். அவனின் குருதி அந்த பொன்னிற பாலைவன மணலை சிவப்பு நிறமாக மாற்ற முயன்று கொண்டிருந்தது.
ஜாஷாவின் இறப்பிலிருந்தே மீண்டு வராதவர்களுக்கு, அவர்களின் கண்முன்னே இரத்தம் தெறிக்க, ஜான் இறந்து மண்ணில் விழுந்த காட்சி அவர்களின் மூளையை சற்று நேரம் ஸ்தம்பித்த நிலையிலேயே வைத்திருந்தது.
வேகமாக வீசிய வெப்ப காற்றை தவிர எவ்வித சத்தமும் அங்கு எழவில்லை. இம்முறை எவருக்கும் அந்நிலையிலிருந்து தாங்களே மீள்வதற்கு சக்தி இல்லை என்பது போல சிலையாக நின்றிருந்தனர். அவர்களை மீட்பதற்காக அந்த மணலே தன் வேலையைக் காட்ட துவங்கியது!
ஏற்கனவே பயத்தை தன் அடிப்படை குணமாக கொண்டிருக்கும் நந்து, அருகிலிருந்த ரியானின் கைகளைப் பற்றிக் கொண்டிருந்தான்.
திடீரென்று அவனின் கால்களை ஏதோ இழுப்பது போல தோன்ற, கீழே குனிந்து பார்த்தான். அவனின் கைகளின் அழுத்தத்தால் ரியானும் அதை நோக்க, அங்கு இவ்வளவு நேரம் சாதாரணமாக இருந்த மணல், இப்போது புதை மணலாக மாறி நந்துவை உள்ளே இழுத்துக் கொண்டிருந்தது.
அதைப் பார்த்து நந்து கத்த, அனிச்சை செயலாக நந்துவை தன் பக்கம் இழுத்திருந்தான் ரியான்.
அதற்குள்ளாகாவே நந்துவின் சத்தத்தில், மற்றவர்களும் சுயத்திற்கு திரும்பியிருந்தனர்.
அங்கு நடந்த நிகழ்வுகளைக் கண்டதும், முதலில் நவி நந்துவிடம் வந்து அவனின் முதுகை தடவி சமாதானப்படுத்தினாள். சில நொடிகளிலேயே நந்துவும் பழைய நிலைக்குத் திரும்பினான்.
அப்போது ரியான் ரிஷபிடம், “இங்க நந்து நின்னுட்டு இருந்த இடம் சாதாரணமா தான் இருந்துச்சு. ஆனா, திடீர்னு புதை மணலா மாறியிருக்குன்னா, இங்க ஏதோ தப்பா நடக்குது!” என்றான்.
ரிஷபும் ரியான் கூறியதை ஆமோதிக்கும் விதமாக, “ஆமா ரியான், ஆர்ட்டிஃபிசியலா இதை கிரியேட் பண்றாங்களோன்னு சந்தேகமா இருக்கு. எனக்கென்னமோ சீக்கிரம் இந்த இடத்தை விட்டு போறது சரின்னு தோணுது.” என்று கூறினான்.
தங்களின் கண்முன்னே நிகழ்ந்த இரு இறப்புகளின் தாக்கம் ஒருபுறம் இருக்க, தாங்களும் அந்த புதை மணலுக்கு பலியாகி விடுவோமா என்ற பயம் மறுபுறம் அவர்களை ஆட்டுவிக்க, அந்த இடத்திலிருந்து செல்லலாம் என்று ரிஷப் கூறும்முன்பே தயாராகி விட்டனர் மற்றவர்கள்.
ஆனால் நவிக்கு தான் அந்த இடத்தை விட்டு செல்லவே மனம் வரவில்லை. சிறிது நாட்கள் என்றாலும், ஜாஷாவிடம் ஏற்பட்டிருந்த பிணைப்பு வேறு யாரிடமும் தோன்றவில்லை நவிக்கு. அந்த புதை மணல் ஏற்பட்ட இடத்தைப் பார்த்துக் கொண்டே அவள் நடக்க, அவளருகே வந்த ரிஷப், “நவி, இப்போ நமக்கு ஃபீல் பண்றதுக்கு கூட நேரமில்ல. நீ புரிஞ்சுப்பன்னு நினைக்குறேன்.” என்று கூறினான்.
நவியும் ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து அகன்றாள். ரிஷப் அங்கிருந்து செல்லும்முன், “சாரி ஜாஷா!” என்று முணுமுணுத்தது நவிக்கும் கேட்டது.
இப்போதும் நவியின் மனதில் ஏகப்பட்ட கேள்விகள் விடையின்றி சுழன்று கொண்டு தான் இருந்தன.
‘நல்லா போயிட்டு இருந்த பயணத்தில, ஏன் திடீர்னு புதை மணல் உருவாகனும்?’
‘ஜான் ஏன் அந்த கயிறை கட் பண்ணனும்?’
‘ஏன் அவனே அவனை வெட்டிட்டு இறக்கணும்?’
‘இறக்குறதுக்கு முன்னாடி நோலன் கிட்ட என்ன சொல்லியிருப்பான்?’
இவைப் போன்ற கேள்விகள் மனதை உறுத்தினாலும், இப்போது அதை சிந்திப்பதற்கான சந்தர்ப்பம் இல்லை என்கிற காரணத்தால், அதன் மேல் கவனம் செலுத்தாமல், அந்த பாலைவனத்தை கூடிய விரைவில் கடப்பதற்காக வேக வேகமாக நடக்க ஆரம்பித்தாள்.
அத்தனை நேரம் சோர்வுடன் நடந்து கொண்டிருந்தவளை பின்தொடர்ந்த ரிஷபிற்கு அவளின் வேகம், அவள் பழைய நிலைக்கு திரும்பியதை உணர்த்தியது. அவனும் ஒரு பெருமூச்சுடன் அவளின் வேகத்திற்கு ஈடு கொடுத்து நடக்க ஆரம்பித்தான்.
பத்து நிமிட பயணத்தில் அந்த பாலைவனத்தை கடந்திருந்தனர் அவர்கள். அத்தனை நேரம், எங்கு இன்னொரு புதை மணல் உருவாகிவிடுமோ என்ற பயத்தில் விரைவாகவும் அதே சமயம் கவனத்துடனும் வந்தவர்கள், அதிலிருந்து வெளிவந்ததும் சிறிது ஆசுவாசப்பட்டனர்.
உச்சியில் இருந்து சூரியன் மேற்கே தன் பயணத்தை ஆரம்பித்திருந்த தருணம். அதே இடத்திலேயே தங்களின் தண்ணீர் மற்றும் உணவு தேவையை பூர்த்தி செய்தனர்.
இப்போதும் அவர்களுக்குள் நடந்த சம்பவங்களை குறித்து எவ்வித பேச்சும் இல்லை. அதைப் பற்றி பேசுவதற்கு கூட பயந்தனர் என்றே கூறலாம்!
அரை மணி நேர ஓய்வுக்கு பின்னர், “நைட் ஆரம்பிக்குறதுக்குள்ள நம்ம ஒரு சேஃப் பிளேசுக்கு போயிடணும். சோ நாம இப்போவே கிளம்புனா தான் சரியா இருக்கும்.” என்று ரிஷப் கூற, மற்றவர்களுக்கு எழுந்து நடக்கவே சக்தியில்லை.
“என்ன திரும்ப நடக்கணுமா? பாஸ் என்னால சுத்தமா முடியல. நேத்து மாதிரியே இங்கயே கூட நைட் ஸ்டே பண்ணிப்போம்.” என்றான் நந்து.
“நோ நந்து, அந்த இடம் ஓரளவுக்கு நமக்கு பரிச்சயமா இருந்துச்சு. அதுவும் அங்கிருந்த ஆபத்தை அழிச்சதுக்கு அப்பறம் தான் அங்க ஸ்டே பண்ணோம். ஆனா, இந்த இடத்துல என்ன ஆபத்து இருக்குன்னே நமக்கு தெரியாது. சோ இங்கயே தங்குறது பேட் ஐடியா.” என்றான் ரிஷப்.
அதைக் கேட்ட அனைவரும் சோர்வுடனே எழுந்து நடக்க ஆரம்பித்தனர். சற்று தொலைவில் அவர்கள் கண்ட கட்டிடம் தெரிந்தது. பாதுகாப்பான இடத்திற்கு வந்துவிட்டோம் என்ற உற்சாகத்தில் வேகமாக நடந்தனர்.
ஆனால், அருகில் வந்து பார்க்கும்போது தான் தெரிந்தது அது கலங்கரை விளக்கம் போன்ற கட்டிடம் என்பது. உயரமான அக்கட்டிடத்திற்கு படிகளும், மேலே இருவர் அமர கூடிய அளவிற்கான அறையும் மட்டுமே உள்ள கட்டிடம் அது.
அதைப் பார்த்ததும், உற்சாகம் மறைந்து மீண்டும் சோர்வு அவர்களை ஒட்டிக்கொண்டது. இதில் அவர்களால் ஓய்வெடுக்க முடியாது என்று நினைத்தவர்கள், சற்று தூரம் சென்று வேறெதுவும் இடம் கிடைக்கிறதா என்று பார்க்கலாம் என்று முடிவெடுத்தனர். அரை மணி நேர தொலைவில் எந்த இடமும் கிடைக்கவில்லையெனில் இந்த கட்டிடத்திலேயே இரவைக் கழிக்கலாம் என்றும் நினைத்தனர்.
முடிவெடுத்த பின்னர் தாமதிக்காமல் மெல்ல நடக்க ஆரம்பித்தனர். அப்போது நவி ரிஷபிடம், “இந்த இடத்துக்கு இதுக்கு முன்னாடியே வந்துருக்கீங்களா?” என்று வினவினாள்.
ரிஷபும், ‘ஆம்’ என்று தலையசைத்தான். ஆனால், அவனின் முகமோ அவன் வேறெதையோ தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறான் என்று கூறியது.
நவி அதை கவனித்தாலும், அவளின் சந்தேகத்தை வினவும் ஆர்வத்தில், “அப்போ அந்த டெசர்ட், இந்த கட்டிடம், இதைப் பத்தியெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சுருக்கும்ல.” என்றாள் நவி.
ரிஷபும் இதையே தான் யோசித்துக் கொண்டிருந்தான். ஒரு பெருமூச்சுடன், “அந்த டெசர்ட் பத்தி எனக்கு தெரியாது. ஏன்னா, நாங்க வேற வழி மூலமா இந்த இடத்துக்கு வந்தோம். ஆனா, இங்க எல்லாமே வேற மாதிரி இருக்கு. இந்த கட்டிடம் இங்க இல்ல. அதுக்கு பதிலா பெரிய ரிசர்ச் ஃபெசிலிட்டி இருந்துச்சு.” என்று அவன் கூறிக் கொண்டிருக்கும்போதே ரியான் ரிஷபை அழைத்தான்.
ரியான் அவன் கைகளை உயர்த்தி ஒரு இடத்தை சுட்டிக்காட்ட, அதைக் கண்ட ரிஷபிற்கு மேலும் குழப்பமானது. அங்கு நேர்கோட்டில் சீரான இடைவெளியுடன் கட்டப்பட்ட சிறிய வீடுகள், கடைகள் போன்றவற்றை உள்ளடக்கிய சிறிய நகரம் காணப்பட்டது.
ரிஷப் அமைதியாக இருப்பதைக் கண்ட நவி, அவன் தோளில் இடிக்க, அப்போது தான் சுயத்திற்கு வந்தவன் அனைவரும் தன்னைப் பார்த்திருப்பதை உணர்ந்தான்.
இதுவரை இப்படி ஒரு நகரம் இருப்பது அவனிற்கு தெரியாது என்று மற்றவர்களிடம் கூறலாமா வேண்டாமா என்று யோசித்துக் கொண்டிருக்க, அவனிற்கு அந்த யோசிக்கும் அவகாசத்தை இயற்கை அளிக்கவில்லை போலும்!
இத்தனை நேரம் வெயிலின் சிறிய அளவிலான தாக்கத்தையாவது உணர்ந்து கொண்டிருந்தவர்களுக்கு திடீரென்று மாறிய வானிலை குழப்பத்தை அளித்தது.
“என்ன இது திடீர்னு வானம் கருக்குது?” என்று நந்து கேட்டுக் கொண்டிருக்கும்போதே, அவன் மீது மழையின் முதல் துளி விழ, அதை ரசிக்க முடியாமல் கத்தினான் அவன்.
அவன் கத்தியதற்கான காரணம், மழைத்துளி விழுந்த இடம் சிறிதாக கொப்பளித்தது. அதைக் கண்ட மற்றவர்கள் என்னவென்று யோசிக்கும் முன்னரே, “சீக்கிரம் எல்லாரும் அந்த பில்டிங் நோக்கி ஓடுங்க. இது சாதாரண மழை இல்ல, ஆசிட் ரெயின்!” என்று கத்தினான் ரிஷப்.
அதைக் கேட்டதும் அதிர்ந்தவர்கள் தங்களின் ஓட்டத்தை ஆரம்பித்தனர். மண்ணை சேர அந்த ‘மழைத்துளி’களுக்கு என்ன அவசரமோ, ஒன்றிரண்டாக தூர ஆரம்பித்தன.
அனைவரும் தங்களின் கையிலிருந்த பையை தலைக்கு மேல் வைத்து தற்காலிகமாக தங்களை காத்தவாறே ஓடினர். அப்படியும் சில துளிகள் அவர்களின் கைகளில் விழுந்தன. இருப்பினும் பல்லைக் கடித்துக் கொண்டு பெரிய மழை வருவதற்குள் எப்படியாவது கட்டிடத்திற்குள் சென்றுவிட வேண்டும் என்று நினைத்துக் கொண்டே ஓடினர்.
பத்து நிமிட தொலைவை ஐந்தே நிமிடத்தில் கடந்து முதல் கட்டிடமான அந்த பேரங்காடிக்குள் முதல் நபர் நுழைய, மழையும் வலுக்க ஆரம்பித்தது.
முதலில் நுழைந்த ரிஷப், மற்றவர்கள் வருவதற்காக அந்த கடையின் கதவை திறந்து வைத்திருக்க, ஒவ்வொருத்தவராக உள்ளே நுழைந்தனர். அவர்கள் உள்ளே வருவதற்கு முன்பே மழை பெய்ததால், ஆங்காங்கே சிறிது காயங்களுடன் தான் வந்தனர். இதில் மோசமான காயங்கள் ஏற்பட்டது வாங் வெய்க்கு தான். அவர் கடைசியாக ஓடி வந்ததால், அவரின் உடலை அந்த அமில மழை பதம் பார்த்திருந்தது.
அனைவரின் மனதிலும், நல்ல வேளையாக மழை பெய்ய ஆரம்பிக்கும்போதே சரியாக யோசித்து இந்த கட்டிடத்ததை அடைந்துவிட்ட நிம்மதி இருந்தது. இந்த கட்டிடம் தொலைவில் இருந்திருந்தாலோ, இல்லை அவர்கள் அந்த வெற்று நிலத்திலேயே ஓய்வெடுத்திருந்தலோ, நடந்திருக்கும் நிகழ்வுகளை எண்ணிப் பார்க்கவே முடியவில்லை அவர்களால்.
நந்து ரிஷபின் அருகே சென்று, “தேங்க்ஸ் பாஸ்!” என்று கூறினான். அவன் தோளில் தட்டியவன், அவர்களின் காயங்களுக்கான மருந்து இருக்கிறதா என்று நோலனுடன் பேசிக் கொண்டிருந்தான்.
முதலில் மோசமான காயங்களுடன் இருந்த வாங் வெய்யை தனியாக ஒரு இடத்தில் படுக்க வைத்து அந்த கடையிலிருந்த குளிர்ந்த நீரைக் கொண்டு அவரின் காயங்களை கழுவினான். அனைவரின் காயங்களையும் முதலில் குளிர்ந்த நீரில் கழுவுமாறு கூறினான் நோலன். அதன் பிறகு, அவர்களுக்கான கழும்பை கொடுத்து தடவுமாறு கூறினான்.
*****
வெளியே மழை விடாமல் பெய்து கொண்டிருக்க, நவி அந்த கண்ணாடி ஜன்னலின் வழியே பெய்யும் மழையையும், அதை உரியும் நிலைத்தையுமே பார்த்துக் கொண்டிருந்தாள்.
தனியே நின்ற அவளிடம் வந்த ரிஷப், “என்னாச்சு நவி? நீ ஆயின்மெண்ட் தடவலையா?” என்றான்.
அவளோ அவன் கேட்ட கேள்வி காதில் விழாதவளாக, “ஆசிட் ரெயின் இவ்ளோ சிவியரா நான் பார்த்ததே இல்ல.” என்றாள்.
அவளின் முகத்திலோ, பயம், ஏமாற்றம், சோர்வு என அனைத்து உணர்வுகளும் சரி விகிதத்தில் கலந்து இருந்தன.
இதுவரை அவளிடம் பயத்தை வெளிப்படையாக கண்டிராததால் அவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டே, “ஹ்ம்ம், நம்ம நார்மல் உலகத்துல பெய்யுற ஆசிட் ரெயின்ல இருக்க ஆசிடோட கான்செண்ட்ரேஷன் விட இங்க ரொம்பவே அதிகம். அதான் மழை பட்டதும் உடனே உடம்புல காயங்கள் ஏற்பட ஆரம்பிச்சுருது.” என்றவன் அவளை நோக்கி திரும்பி, “நீ ஏன் ஒரு மாதிரி இருக்க? அந்த காயங்கள் ரொம்ப எரிச்சலா இருக்கா?” என்று வினவினான்.
“இல்ல, ஹ்ம்ம், எனக்கு மழைன்னா ரொம்ப பிடிக்கும். அதுல நனையும்போது இருக்க சுகமே தனி. அதுவும் மழை வரும்போது இருக்க மண்வாசனை நுகர அவ்ளோ பிடிக்கும். ஆனா, இப்போ இப்படி அமில மழையைப் பார்க்கும்போது கஷ்டமா இருக்கு. ஸ்கூல்ல படிக்கும்போதும், நியூஸ்ல இதைப் பத்தி விளக்கும்போதும் சாதாரணமா கடந்து போன என்னால, அதை நேரில் பார்க்கும்போதும், அனுபவிக்கும்போதும் தாங்க முடியல. இன்னும் கொஞ்ச நாள்ல நம்ம உலகத்துலயும் இதே மாதிரி ஆசிட் ரெயின் பெஞ்சா கூட ஆச்சரியப்படுறதுக்கு இல்லல.” என்று பேசியவளை கண்டவனிற்கு அவளை சமாதானப்படுத்தும் வழி தான் தெரியவில்லை.
“ம்ம்ம் உண்மை தான். ஆனா இதுக்காக சயின்டிஸ்ட் ஒர்க் பண்ணிட்டு இருக்காங்க. எப்படி இந்த ஆசிட் ரெயின்ல இருந்து மக்களை காப்பாத்துறது.” என்று ரிஷப் கூறும்போதே இடைவெட்டியவள், “அந்த சயின்ஸும் தான் இதுக்கு ஒரு காரணம்னு சொல்றேன். எப்போ மனிதன் தன் பேராசைகளை சயின்ஸ் மூலமா நிறைவேத்திக்க ஆரம்பிச்சானோ, அப்போவே இந்த இயற்கையை விட்டு விலக ஆரம்பிச்சுட்டான். இதோ இப்போ, தானே கடவுளா இருக்கணும்னு ஆசைப்படுறான். நமக்கு முன்னாடி ஜெனரேஷன் பண்ணதுக்கு நாம அனுபவிக்கிறோம், நாம பண்ணுற தப்புக்காக நமக்கு அடுத்து வர ஜெனரேஷன் அனுபவிப்பாங்க.” என்றாள் நவி.
அவளின் கூற்றுகள் உண்மையாக இருந்ததால், ரிஷப் எதுவும் பேசாமல் மௌனமாக இருந்தான்.
அதைக் கவனித்த நவி, “சாரி, ஏதோ பேசி போர் அடிச்சுட்டேனா?” என்று வினவும்போதே, “நவி, நீ இன்னும் ஆயின்மெண்ட் போட்டுக்கலைல.” என்றவாறே வந்தான் நந்து.
நவியும் ரிஷபிடம் சிறு தலையசைப்புடன் விடைபெற்றாள். இம்முறை ஜன்னல் வழியாக மழையை வெறிப்பது ரிஷபின் முறையானது. நவி கூறிய ‘பேராசை’ அவனின் மனதை உறுத்திக் கொண்டிருந்தது.
*****
நவியுடன் நடந்த நந்து, “அப்பறம் பாஸ் என்ன சொன்னாரு?” என்று விஷமமாக நந்து வினவ, “நான் தான் சொன்னேன்…” என்று ஏதோ நினைவில் பேசிக் கொண்டு வந்தாள் நவி.
“வாவ்! அப்போ ட்ரீட் கொடு நவி.” என்று நந்து ஆர்ப்பரிக்க, ‘இவன் எதுக்கு திடீர்னு இவ்ளோ எக்ஸைட் ஆகுறான்!’ என்று யோசித்தவள், அதையே அவனிடமும் வினவினாள்.
“நீ தான் உன் லவ்வை சொல்லிட்டேல. அதுக்கு தான் ட்ரீட். ஆமா, பாஸ் ஒத்துகிட்டாரா என்ன?” என்று மேலும் வினவ, அவனை அமைதிபடுத்தியவள், யாரும் கேட்டுவிட்டார்களா என்று சுற்றிலும் பார்த்துவிட்டு நந்துவிடம் திரும்பினாள்.
“அட லூசு! நாங்க சும்மா மழையைப் பத்தி தான் பேசுனோம்.” என்று தாங்கள் பேசியவற்றை கூறினாள்.
“இதை தான் பேசுனீங்களா?” என்று தலையிலடித்துக் கொண்டான்.
“ஹே நந்து, நீ தான இப்போ இருக்க சிஷுவேஷன்ல இந்த லவ், இன்ஃபேக்ஷுவேஷன் எல்லாம் வேணாம்னு சொன்ன. நானும் நீ மெச்சூர்ட்டாகிட்டன்னு சந்தோஷப்பட்டேன். அப்பறம் தான் நானும் இதைப் பத்தி இப்போ யோசிக்க போறதில்லன்னு தள்ளிப்போட்டேன்ல.” என்றாள் நவி.
“நானா அப்படியெல்லாம் சொன்னேன்!” என்று முணுமுணுத்தான் நந்து. அவனின் முணுமுணுப்பை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை நவி.
*****
அந்த பேரங்காடியில் இவர்களைத் தவிர வேறு யாரும் இருப்பதற்கான அறிகுறி இல்லை.
“இப்படி இந்த டிப்பார்ட்மென்டல் ஸ்டோரை திறந்து போட்டுட்டு போயிருக்காங்களே. யாரும் திருடிட்டா என்ன பண்ணுவாங்க?” என்றாள் டோவினா.
“ஹ்ம்ம், இங்க யாரும் உன்னை மாதிரி திருடுற எண்ணத்தில இல்லன்னு அர்த்தம்.” என்றான் நந்து. டோவினா அவனை முறைக்க, அவனோ அவளைக் கண்டுகொள்ளவில்லை.
நவி கூட நந்துவிடம், “ஏன் டா அவளை ஏதாவது சொல்லிட்டே இருக்க?” என்று வினவினாள்.
நந்துவோ, “சும்மா தான் நவி. அந்த வெள்ளை காராச்சேவை கலாய்க்கலைன்னா தூக்கமே வரமாட்டிங்குது பார்த்துக்கோ!” என்று கண்ணாடித்தான்.
அப்போது அருகில் வந்த ரியானோ, “இந்த ட்ரோன்ஸ், டிராகன், புதை மணல், ஆசிட் ரெயின் இதெல்லாம் பார்த்தா தான் சாருக்கு பயம். இல்லைன்னா ஜாலியா கலாய்ப்பாரு. அதுவும் டோவினான்னா கேட்கவே வேண்டாம். அருவி மாதிரி கொட்டும்! அப்படி தான?” என்று கேலி செய்ய, நந்து சிரிக்க, நவியும் ரியானும் ‘ஹை-ஃபை’ அடித்துக் கொண்டனர்.
இப்படியே அவர்கள் பேசிக் கொண்டிருக்க, சற்று நேரத்திலேயே மழையும் குறைய ஆரம்பித்தது. எனினும், மழை முற்றிலுமாக நிற்கும் வரையில் வெளியே செல்ல முடியாததால், அங்கேயே அமர்ந்து தங்களின் பேச்சை தொடர்ந்தனர்.
இப்போது அவர்களின் பேச்சு ஜாஷா மற்றும் ஜானின் இறப்பில் வந்து நின்றது. அந்த நொடிக்கு முன்னர் வரை, தாங்கள் பெரிய கண்டத்திலிருந்து தப்பித்து வந்ததே பெரிதாக இருந்ததால், ஜாஷா மற்றும் ஜானின் நினைவு வரவில்லை என்பதே உண்மை. அவர்களின் நினைவு வந்தபோதோ, ஜாஷாவுக்காக அனைவரும் வருந்தினர். அதனுடன் ஜானின் திடீர் மாற்றத்தை எண்ணியும் குழம்பினர்.
ரியான் தான் அதை ஆரம்பித்தான். “ஜான், இப்படி பண்ணுவான்னு நினைக்கல. அப்படி என்ன வன்மமோ!” என்று ரியான் கூற, “ஹ்ம்ம், அடிபட்டு வந்தப்போ கூட நல்லா தான் இருந்த மாதிரி இருந்துச்சு. நானும் திருந்திட்டானோன்னு நினைச்சேன்.” என்றான் நந்து.
இப்படியே ஒவ்வொருவரும் ஒவ்வொன்றைக் கூற, “அவனை அந்த பில்டிங்கிலேயே விட்டுட்டு வந்திருக்கணும். அவனையும் ஒரு ஆளா மதிச்சு, அவனுக்காக பார்த்து பார்த்து செஞ்சா இப்படி அவன் புத்தியை காட்டிட்டான்.” என்று ஷாங் மின் ரிஷபை குற்றம்சாட்டும் விதத்தில் கூற, விவாதம் செல்லும் பாதை மாறியதை அறிந்த ரியான் அதை மாற்றிவிட்டான்.
“ப்ரோ, ஜானோட அந்த பிஹெவியருக்கு காரணம் என்ன?” என்று ரிஷபிடம் வினவினான்.
“ஹ்ம்ம், நானும் அதைத் தான் யோசிச்சுட்டு இருக்கேன் ரியான். மேபி, ஜானோட. மூளையை ஹாக் பண்ணி இப்படி நடந்துக்க வச்சுருக்கலாம்!” என்றான் ரிஷப்.
“ப்ரெயின் ஹாக்கிங்கா?” என்று அதிர்ந்து பார்த்தான் நந்து.
அப்போது நோலன், “மழை நின்னுடுச்சு போல.” என்று கூறினான். அனைவரும் அவனின் குரலில் கலைந்தவர்கள் வெளியே பார்க்க, முற்றிலுமாக மழை குறைந்திருந்தது. இரவு நேரம் நெருங்கியதால் வெளிச்சமும் குறைந்திருந்தது.
“இந்த கடையில சுவிட்ச் எங்க இருக்குன்னு தெரியலையே?” என்றவாறே எழுந்தான் நந்து. ஆளுக்கு ஒருபுறம் விளக்கிற்கான சொடுக்கியை தேடியபடி சென்றனர்.
நந்துவும் நவியும், பணம் செலுத்துமிடத்திற்கு அருகே தேடிக் கொண்டிருந்தனர். அந்த இடம் நுழைவு வாயிலிற்கு அருகே இருந்தது.
அப்போது மறுபுறம் சென்ற டோவினா, “நான் கண்டுபிடிச்சுட்டேன்!” என்று கத்தியவாறே அங்கிருந்த அனைத்து சொடுக்கிகளையும் சொடுக்க, அடுத்த நொடி அங்கிருந்த அனைத்து விளக்குகளும் ஒளிர ஆரம்பித்தன.
அப்போது அந்த பணம் செலுத்துமிடத்தில் இருந்த மேஜைக்கு அடியே சொடுக்கிகள் இருக்கின்றனவா என்று தேடிக் கொண்டிருந்த நந்து, டோவினாவின் குரலைக் கேட்டதும் எழும்ப, அதே நேரம் அவனிற்கு மேலிருந்த விளக்கு ஒளிர, அவன் முகத்திற்கு வெகு அருகில் இருந்தவரைப் பார்த்து பயத்தில் கத்தியபடியே கீழே விழுந்தான்.
Comments
Post a Comment
Please share your thoughts...