காட்சிப்பிழை 11
அமில மழை முற்றிலுமாக நின்றிருந்த நேரம். அத்தனை நேரம் பேசியபடி இருந்தவர்களுக்கு இரவு நேர இருட்டு பெரிதாக தெரியவில்லை போலும்! நோலன் கூறியதற்கு பின்பு தான் ஆளுக்கு ஒருபுறம் விளக்குக்கான சொடுக்கியை தேடினர்.
நந்துவும் நவியும் பணம் செலுத்திமிடத்திற்கு கீழே தேடிக் கொண்டிருக்க, அதற்குள் டோவினா சொடுக்கியை கண்டுபிடித்து, அங்கிருக்கும் அனைத்து விளக்குகளையும் ஒளிரச் செய்தாள்.
டோவினா கூறியதைக் கேட்டு நந்து நிமிரவும், அவன் நின்றிருந்த இடத்தில் விளக்குகள் ஒளிரவும் சரியாக இருந்தது. அப்போது அவன் முகத்திற்கு வெகு அருகே தெரிந்த சற்று வயதான பெண்ணின் முகத்தைக் கண்டு பயத்தில் கத்தியபடி கீழே விழுந்தான்.
நந்துவின் சத்தத்தில் அனைவரின் கவனமும் வாசலருகே திரும்பியது. அங்கு நின்றிருந்த வயதானவரைக் கண்டு அனைவரும் குழம்பினர். ஏனெனில், அவர்கள் அனைவரின் சராசரி வயது முப்பத்தைந்திற்குள் அடங்கி விட, அதற்கு மேலிருப்பவர்கள் யாரையும் அவர்கள் இதுவரை சந்திக்கவில்லை. மேலும், அங்கு அவர்களைத் தவிர இன்னொருவரை அவர்கள் எதிர்பார்த்திருக்கவில்லை.
அனைவரின் முகங்களையும் எதிரிலிருந்தவர் ஆராய்ச்சியாக பார்த்துவிட்டு, “நீங்க அந்த ட்ரோன்ஸ் இருக்க பில்டிங்ல இருந்து வந்துருக்கீங்களா?” என்று வினவினார்.
இப்போது குழப்பத்துடன் அதிர்ச்சியும் சேர்ந்து கொண்டது.
“உங்களுக்கு அந்த இடம் பத்தி தெரியுமா?” என்று ரியான் வினவ, அவரோ பெருமூச்சுடன், “நான் நேர்ல பார்த்தது இல்ல. ஆனா, அங்கயிருந்து வந்தவங்க சொல்லியிருக்காங்க.” என்றார்.
“இதுக்கு முன்னாடி, அங்கயிருந்து இங்க வந்துருக்காங்களா?” என்று ரிஷப் கேட்க, “ஆமா, ரெண்டு பேர் வந்தாங்க. அந்த டிராகன் கூட சண்டை போட்டதால, உடம்பெல்லாம் காயத்தோட வந்தவங்களுக்கு நாங்க தான் ட்ரீட்மெண்ட் கொடுத்து அவங்களை அனுப்பி வச்சோம்.” என்றார்.
“உங்க கூட இங்க நிறைய பேர் இருக்காங்களா?” –
இம்முறை கேள்வி கேட்டது நவி.
“ஆமா, நீங்க கவனிக்கலையா. இங்க ஏகப்பட்ட வீடுகள் இருக்கே. ஓஹ், நீங்க வந்தப்போ மழை பெஞ்சதுனால யாரும் வீட்டை விட்டு வெளியே வந்துருக்கு மாட்டாங்க.” என்று அவரே கேள்வி கேட்டு பதிலையும் சொல்ல, அவர் சொல்லும் ஒவ்வொரு விஷயமும் அவர்களுக்கு புதிதாக பல குழப்பங்களை ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
அவர்கள் மேலும் தங்களின் சந்தேகங்களை கேள்விகளாக மாற்றுவதற்குள், அடிப்பட்டு படுக்க வைக்கப்பட்டிருந்த வாங் வெய்யின் முனகல் சத்தம் கேட்டது. ஷாங் மின் கணவரின் அருகே சென்று பார்க்க, அந்த புதியவரும் அடிப்பட்டிருந்த வாங் வெய்யைக் கண்டார்.
“அவருக்கு ரொம்ப அடிப்பட்டிருக்கு போல. எங்க வீட்டுக்கு கூட்டிட்டு வாங்க. டாக்டரை நான் கூப்பிடுறேன்.” என்றவர், அவர்கள் யோசிக்கக் கூட அவகாசம் கொடுக்காமல், அவரே அருகிலிருக்கும் தன் வீட்டிற்கு அழைத்துக் கொண்டும் சென்றார்.
இரவானதால், ஒவ்வொரு வீட்டிற்கும் வெளியே இருக்கும் விளக்குகள் எரிந்து கொண்டிருக்க, இப்போதும் மற்ற வீடுகளில் நடமாட்டம் இருப்பது போல தோன்றவில்லை. மற்றவர்கள் வீட்டினுள் சென்றுவிட, நவி மட்டும் அந்த இடத்தை ஒருமுறை சுற்றிப் பார்த்தாள்.
அப்போது எதிர் வீட்டு கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க, நவி திரும்பிப் பார்த்தாள். அங்கு முகத்தை சுற்றி துணி கொண்டு மூடியபடி, இருட்டில் பளபளக்கும் கண்களுடன் நின்றிருந்த உருவத்தைக் கண்டு பயந்தாள் நவி.
சட்டென்று அந்த கண்களை உற்று நோக்கியவளிற்கு, அவை தன் இரையைப் பார்க்கும் விலங்கின் கண்களாகத் தான் தெரிந்தன.
முதல் முறை பயந்தாலும், மனதில் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு எதிர்வீட்டை நோக்கி நடக்க முற்பட, அவளின் கைகளைப் பற்றி தடுத்தார் அந்த வயதான பெண்.
மேலும், எதிர்வீட்டை நோக்கி, “ஒருத்தருக்கு அடிப்பட்டிருக்கு. சீக்கிரம் மெடிக்கல் கிட் எடுத்துட்டு வா.” என்றும் கூறினார்.
அவரின் குரலைக் கேட்டதும் பட்டென்று அந்த கதவு மூடிக்கொண்டது. அதையும் நவி கவனித்தாள்.
அவளின் கவனத்தை தன் பக்கம் திருப்ப, “உன் பேர் என்ன மா?” என்று அவர் வினவ, நவியும் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டாள்.
“என் பேர் லிண்டா.” என்று அவரும் அவரை அறிமுகப்படுத்தியவாறே அவளை உள்ளே அழைத்துக் கொண்டு சென்றார்.
வெளியிலிருந்து பார்ப்பதற்கு சிறிதாக தெரிந்தாலும், உள்ளே வீடு பெரிதாகவே இருந்தது. ஆனால், அவ்வீட்டில் எங்கும் தொலைதொடர்பிற்கான வசதிகளை அவளால் காண முடியவில்லை. அதுமட்டுமில்லை, வெகுசில மின்சாதன பொருட்கள் மட்டுமே
அவ்வீட்டினை அலங்கரித்தன.
இப்போதுள்ள உலகின் மிக அத்தியாவசிய தேவைகளாக கருதப்படும் பலவற்றை அந்த வீட்டில் காணமுடியாததால், நவிக்கு ஆச்சரியமாக தான் இருந்தது. அவள் அதைப்பற்றி கேட்க வரும்போதே, அவளை மற்றவர்கள் இருக்கும் இடத்திற்கு அழைத்து வந்துவிட்டார் லிண்டா.
நன்கு விசாலமான அந்த அறையின் ஒரு மூலையில் வாங் வெய் படுக்க வைக்கப்பட்டிருக்க, ஷாங் மின் அவரின் அருகே கலக்கத்துடன் அமர்ந்திருந்தாள்.
நவி அந்த அறையையும் தன் விழிகளால் ‘ஸ்கேன்’ செய்து கொண்டிருக்கும்போது, அங்கு வந்த நந்து, “நவி, இந்த வீடு டிஃபெரண்ட்டா இருக்குல.” என்றான். அவளோ தன் கண்களை இன்னும் கூர்மையாக்கி பார்த்தாலே தவிர எதுவும் பேசவில்லை.
இவளைப் போலவே ரிஷபும் வீட்டினை ஆராய்ந்து கொண்டு தான் இருந்தான். இதற்கு முன்னர் வந்திருந்த போது இருந்த நிலைக்கும், இப்போதைய நிலைக்கும் எத்தனையோ வித்தியாசங்கள் சொல்லுமளவிற்கு இருந்தது அவனை குழப்பியது.
இருவரின் குழப்பங்களை தற்காலிகமாக ஒத்திவைக்கவெனவே அங்கு வந்தார் அந்த புதியவன், நவி சற்று முன்னர் பார்த்த பளபளப்பான கண்களை உடைய எதிர்வீட்டுக்காரன்.
ஆசிய முகம் தான் என்றாலும், அவர்களிடம் இருக்கும் கருணையோ இரக்கமோ அவனின் முகத்தில் சிறிதும் இல்லை. சிறிது இயந்திரத்தன்மை அவனின் முகத்தில் வெளிப்படையாகவே காணப்பட்டது.
அனைவரின் பார்வையும் புதியவனை எடைபோட, அவர்களின் வேலையைக் குறைக்கும் நோக்கில், லிண்டாவே அவனை அறிமுகப்படுத்தினார்.
“இவன் பேரு கான். எதிர்வீட்டுல தான் இருக்கான். இவன் ஒரு டாக்டர். இங்க ரொம்ப அவசர சிகிச்சைக்கு இவனைத் தான் கூப்பிடுவோம்.” என்று அறிமுகப்படுத்தினார்.
“கான், இதோ இவருக்கு தான் ட்ரீட்மெண்ட் கொடுக்கணும். மழைல நனைஞ்சுட்டாரு போல.” என்று கானிற்கான வேலையைக் கூற, கான் எனப்பட்டவனோ எதுவும் பேசாமல் வேலையை ஆரம்பித்தான்.
ஆரம்பத்தில் நோலன், கானிடம் தன்னையும் மருத்துவர் என்று அறிமுகப்படுத்திக் கொண்டு பேச முயல, கான் அவரை மதிக்கக் கூட இல்லை.
“ஹ்ம்ம், ஒரு மனுஷனா கூட மதிக்க மாட்டிங்குறான்.” என்று மற்றவர்களிடம் சலித்துக் கொள்ள தான் முடிந்தது நோலனால்.
“கான், நீங்க நினைக்கிற மாதிரி யாரையும் மதிக்காதவன் இல்ல. அவனுக்கு மத்தவங்க கூடபேச, பழக பிடிக்காது. ஆனா, மருத்துவ ரீதியா என்ன உதவினாலும் செய்வான். அதுக்காகவே படைக்கப்பட்டதை போல!” என்றார் லிண்டா.
அதன்பின்பு, அவர்கள் அனைவரைப் பற்றியும் விசாரித்தார் லிண்டா.
“நீங்க எப்படி அந்த பில்டிங்குள்ள வந்தீங்கன்னே தெரியலையா!”
“உண்மைலேயே அங்க ட்ரோன்ஸ் இருக்கா? ரொம்ப பெரிய சைஸ் ட்ரோன்ஸா?”
“ரெண்டு டிராகன்ஸ் இருந்ததா இதுக்கு முன்னாடி வந்தவங்க சொன்னாங்களே! அந்த டிராகன்ஸ் கிட்டயிருந்து, பெரிய காயங்கள் இல்லாம எப்படியோ தப்பிச்சுட்டீங்க. போன முறை வந்தவங்க உடம்புல அவ்ளோ காயம். உயிர் பொழைக்கவே முடியாதுன்னு இருந்தவங்களை கான் தான் காப்பாத்துனாரு!”
இவையெல்லாம் அவர்களின் கதையைக் கேட்கும் போது லிண்டா கொடுத்த ‘ரன்னிங் கமென்டரி’கள் ஆகும்.
“இவங்களுக்கு கதை சொல்றதுக்குள்ள விடிஞ்சுடும்!” என்று ரியான் நந்துவிடம் முணுமுணுக்க, அவனும் அதையே ஆமோதித்தான்.
அப்போது அவர்களைக் காக்கவே, சிகிச்சையை முடித்துக்கொண்டு கான் லிண்டாவிடம் வந்தான்.
“ட்ரீட்மெண்ட் முடிஞ்சுதா?” என்று லிண்டா வினவ, அதற்கு தலையசைப்பையே பதிலாக கொடுத்தான்.
“ஓகே, இனி எங்க வாக்கிங்கா?” என்று மேலும் அவர்களின் உரையாடலை தொடர, அவனோ அதற்கும் வாய் திறந்து பதில் கூறாமல், கடிகாரத்தைப் பார்க்க, அது இரவு ஒன்பதை தொடுவதற்கு கால் மணி நேரம் இருப்பதாக காட்டியது.
மற்றவர்களுக்கு அந்த எண் கடிகாரம் (டிஜிட்டல் வாட்ச்) அடுத்த ஆச்சரியமாக அமைந்தது. காலத்தை சம்பந்தப்படுத்தும் பொருளை இந்த இடத்தில் இப்போது தானே காண்கின்றனர்!
இவர்களின் ஆச்சரியத்தை பொருட்படுத்த தான் அங்கு யாருமில்லை! இத்தனை நேரமிருந்த இலகு பாவம் மாறி, சற்று பரபரப்புடன், “ஓஹ், ஒன்பது ஆகப்போகுதா? சரி நீ சீக்கிரம் வீட்டுக்கு போ.” என்று வழியனுப்பி வைத்தார் லிண்டா.
லிண்டாவின் பதட்டத்தை கண்ட ரிஷப், “என்னாச்சு? ஏன் இவ்ளோ டென்ஷனாகுறீங்க?” என்று விசாரித்தான்.
“இன்னும் கொஞ்ச நேரத்துக்கு இந்த இடமே பரபரப்பா தான் இருக்கும்… ஏன்னா, இது ஜட்ஜ்மெண்ட் டைம்!” என்றார் லிண்டா.
“ஜட்ஜ்மெண்ட் டைம்மா! அப்படின்னா என்ன?” என்று டோவினா கேட்க, “ஹ்ம்ம், உங்களுக்கு இங்க நடக்குறதை சுருக்கமா சொல்றேன்.” என்று கூற ஆரம்பித்தார் லிண்டா.
“நீங்க அந்த டிப்பார்ட்மென்டல் ஸ்டோருக்குள்ள இருந்தீங்களே, அப்போ எப்போயாச்சும், அதைப் பார்த்துக்குறதுக்கு ஏன் யாருமே இல்ல, ஏன் அந்த ஸ்டோர் பூட்டப்படலைன்னு யாராவது யோசிச்சீங்களா?” என்று லிண்டாவின் கேள்வியைக் கேட்டதும் தான் மற்றவர்களுக்கு அந்த சிந்தனை எழுந்தது.
“இவ்ளோ ஏன், அங்க இருக்க கேஷ் கவுண்டரை கூட பூட்ட மாட்டாங்க. ஏன்னா, இந்த இடத்தைப் பொறுத்தவரை, சின்னதா தப்பு செஞ்சாலும் கூட அவங்களுக்கான தண்டனை பெருசா இருக்கும்!” என்று அவர் கூற, “அப்போ அந்த ஸ்டோர்ல எல்லா இடத்துலயும் கேமரா இருக்கா? எப்போவும் கண்காணிக்கப்பட்டுட்டே இருப்போமா?” என்று நந்து வினவினான்.
“கேமரா வச்சு கண்காணிக்குறதெல்லாம் பல வருஷத்துக்கு முன்னாடி இருந்த டெக்னிக். இது லேட்டஸ்ட். ஒருத்தர், அந்த நாளை எப்படி செலவு பண்ணாருன்னு அவரோட மூளை செயல்பாடுகளை வச்சு கணிக்கலாம். இப்படி தான் இங்க யாரெல்லாம் தப்பு செய்றாங்கன்னு கண்டுபிடிப்பாங்க. இதுக்காக பல லேட்டஸ்ட் ரோபோக்கள் இந்த இடத்துக்கு சரியா நைட் ஒன்பது மணிக்கு வரும்.”என்று அந்த ‘ஒன்பது மணி’ விஷயத்தைப் பற்றி கூறினார்.
“ஓஹ், அப்போ இப்படி தான் இங்க வாழ்றீங்களா? உங்களுக்கு இப்படி அடிமையா வாழ பிடிச்சிருக்கா?” என்றாள் நவி.
“ஹ்ம்ம், எங்களுக்கு மட்டும் இப்படி வாழ ஆசையா என்ன? ஆனா, இது தான் வாழ்க்கைன்னு ஆன பின்னாடி, குத்துது குடையுதுன்னு சொன்னா மட்டும் மாறிடவா போகுது. அதான் இதுகேத்த மாதிரி அடாப்ட் ஆகியாச்சு.” என்று சிறிது சோர்வுடனே கூறி முடித்தார்.
அப்போது திடீரென்று எங்கிருந்தோ தாரை சத்தம் கேட்க, ரியான் லிண்டாவிடம் அதைக் குறித்து வினவினான்.
“நீங்க வரும்போது பார்த்திருப்பீங்களே, பெரிய லைட்-ஹவுஸ் மாதிரி ஒரு இடம். அங்கயிருந்து தான் சத்தம் வருது. எங்களைப் பொறுத்தவரை அது தான் இந்த இடத்துக்கான எல்லை. அங்க எல்லா நைட்டும் ஒரு ஆள் கண்காணிப்புக்காக இருப்போம். எப்போ தூரத்துல அந்த ரோபோ வரது தெரியுதோ, அப்போ அங்கயிருந்து இந்த மாதிரி சத்தம் கேட்கும். நாங்களும் அதுக்கு கொஞ்சம் ரெடியா இருப்போம்.” என்று விளக்கினார் லிண்டா.
மேலும் மற்றவர்களைப் பார்த்து, “நீங்க எதுக்கும் பேஸ்மெண்ட்ல ஒளிஞ்சுக்கோங்க. ஏன்னா, நீங்களே அந்த இடத்துலயிருந்து தப்பிச்சு வந்துருக்கீங்க. இந்த ரோபோக்களுக்கும் அந்த ட்ரோன்ஸுக்கும் சம்பந்தம் இருக்கா, இந்த ரோபோக்களும் அதே இடத்துலயிருந்து தான் வருதான்னு நமக்கு தெரியல. அதான் ஒரு சேஃபர் சைடுக்கு எல்லாரும் ஒளிஞ்சுக்கோங்க.” என்றார்.
அவர் கூறியதும் சரியான காரணமாக இருந்ததால், அனைவரும் அந்த வீட்டின் அடித்தளத்திற்கு சென்றனர்.
*****
கையில் சிறிய டார்ச்சை வைத்துக் கொண்டு அந்த அடித்தளத்திற்குள் சென்றனர். பல நாட்கள் மூடி வைக்கப்பட்டிருந்ததால் உண்டான நெடி குப்பென்று மூக்கில் ஏற, உள்ளே சென்றதும் தும்ம ஆரம்பித்தனர் அனைவரும். ரிஷபும் ரியானும், வாங் வெய்யை கைத்தாங்கலாக உள்ளே அழைத்து வந்து, ஒரு மூலையில் படுக்க வைத்தனர்.
அனைவரும் உள்ளே சென்றதும், “நான் கூப்பிடுற வரைக்கும் வெளிய வரவோ, சத்தம் போடவோ முயற்சிக்காதீங்க.” என்று எச்சரிக்கை செய்து விட்டே கதவை மூடினார் லிண்டா.
கதவு மூடப்பட்டதும் அதன் வழியாக வந்த வெளிச்சமும் காற்றும் நின்று போக, அவர்களுக்கு அச்சூழல் பழக சற்று நேரம் பிடித்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு இடத்தில் அமர்ந்து அவரவர்களின் எண்ணத்தில் மூழ்கிப் போயினர்.
சற்று நேரம் கூட அமைதியாக இருக்க முடியாத டோவினா, “உஃப் இந்த இடம் ரொம்ப அன்கம்ஃபார்டபிலா இருக்கு. எப்படி தான் இங்க இருக்காங்களோ!” என்று புலம்பினாள்.
“ஆமா, இது ஸ்டார் ஹோட்டல், இவங்க செலிப்ரிட்டி, ஹோட்டல் சரியில்லன்னு கம்ப்ளைன்ட் பண்றாங்க! இந்த நேரத்துல வெளிய விரட்டி விடாம இருக்க விட்டதே பெருசு. இதுல ‘அன்கம்ஃபார்டபிலா’ இருக்காம்ல.” என்றான் நந்து.
“ப்ச், உன்னை யாராவது கேட்டாங்களா?” என்றாள் டோவினா எரிச்சலுடன்.
“ச்சேச்சே, ஆனா, நீ யாருக்கு கேக்கணும்னு இப்படி பேசுறன்னு நல்லாவே தெரியுது.” என்று நந்துவும் பேச,
அங்கு சண்டை மூளும் சூழ்நிலை ஏற்பட்டதால், நவி தான் நந்துவை அடக்கினாள்.
“ப்ச், இருக்க பிரச்சனையையே தீர்க்க வழியில்லாம இருக்கோம். இதுல நீங்க வேற ஏன் புதுசா பிரச்சனையை உருவாக்குறீங்க?” என்று ரிஷபும் பேச, இருவருமே அமைதியானார்கள்.
இந்த அமைதி மீண்டும் வாய்ப்போரை உருவாக்கும் என்ற எண்ணம் உருவானதாலோ, நவி ரிஷபிடம், “ரிஷப், நீங்க இந்த இடத்துக்கு வந்ததில்லையா?” என்று வினவினாள்.
“இல்ல, அந்த லைட்- ஹவுஸ் இருந்த இடத்துல தான் நாங்க ஒரு ரிசர்ச் சென்டரை பார்த்தோம். அந்த நாள் இரவை அங்கயே கழிக்கலாம்னு உள்ள போனோம். ஆனா, அதுக்கப்பறம் என்ன நடந்துச்சுன்னு எனக்கு சரியா தெரியல. முழிச்சு பார்க்கும்போது திரும்ப அந்த பில்டிங்குள்ள இருந்தேன்.” என்றான் ரிஷப்.
“ஓஹ், அப்போ இந்த இடம் திடீர்னு எப்படி வந்துருக்கும்?” என்று குழப்பத்துடன் வினவினாள் நவி. ரிஷபும் அதே குழப்பத்தில் தான் இருந்தான்.
அப்போது ரியான், “லிண்டா சொன்னதைக் கேட்டீங்களா? கிட்டத்தட்ட அடிமை வாழ்வு! பாவம் இங்க இருக்குறவங்க எல்லாம்.” என்றான்.
“ஹ்ம்ம், மனுஷன் தன்னை அறிவில் சிறந்தவனா காட்ட ரோபோக்களை உருவாக்கினான். இப்போ அதே ரோபோ அவனை அடிமைப்படுத்த முயற்சிக்குது!” என்று விரக்தியாக கூறினான் ரிஷப்.
அவன் குரலில் தெரிந்த விரக்தி, இங்கு மாட்டிக் கொண்டதால் மட்டுமா என்ற கேள்வி நவிக்கு தோன்றியது!
அதே சமயம் அவன் கூறியவை வெளியுலகில் நடந்தால், அதற்குமேல் அவளால் யோசிக்கக் கூட முடியவில்லை! இங்கு நடக்க நிகழ்வுகள் வெளியுலகில் நடக்க வெகுகாலம் இல்லை என்றும் அவளின் மனம் எச்சரித்தது.
“ஆமா, ரிஷப் சொன்ன மாதிரி அவங்க இங்க வந்தப்போ இந்த இடம் இல்லைன்னா, இந்த இடம் மட்டுமில்ல இங்க இருக்குறவங்களும் அதுக்கு அப்பறம் தான் இங்க கொண்டு வரப்பட்டுருப்பாங்க. அப்போ இவங்க ஏன் நம்மள மாதிரி தப்பிக்க முயற்சி பண்ணல. ஏன் இந்த வாழ்க்கையையே வாழ ஒத்துகிட்டாங்க?” என்று நோலன் கேள்வி எழுப்ப, அதற்கான பதில் தான் யாரிடமும் இல்லை.
“லிண்டா சொன்னதை கவனிக்கலையா, மேபி இங்க இருந்து தப்பிச்சு போக முயற்சி செய்தவங்களை அந்த ரோபோக்கள் கொன்றுருக்கலாம். அவங்களும் இந்த வாழ்க்கையே அடாப்ட் பண்ணிக்கிட்டதா சொன்னாங்களே. எனக்கென்னவோ வெளிய இருக்க வாழ்க்கையை விட இதுவே பரவாலன்னு தோணுது. ஜஸ்ட் இமேஜின். கொலை, கொள்ளைன்னு எதுவும் இல்லாத ஒரு இடம்! கேட்கவே நல்லா தான இருக்கு.’ என்றாள் டோவினா.
“அப்படியில்ல டோவினா. பலத்தை உபயோகிச்சு மத்தவங்களை கட்டுப்படுத்துறது யாருக்கும் சந்தோஷத்தையோ நிம்மதியையோ தராது. இங்க இருக்குறவங்க எப்போ எது நடக்கும்னு பதட்டத்தோட தான் வாழ்ந்துட்டு இருக்காங்க. இப்படி ஒரு வாழ்க்கை எப்படி நல்லா இருக்கும்?” என்று நவி வினவினாள்.
மற்றவர்கள் யாரும் பேசவில்லை என்று தான் டோவினா தன் கருத்தை வெளிப்படுத்தி கவனத்தை ஈர்க்க முயன்றாள். அது தெரிந்தோ தெரியாமலோ, நவி இப்படி கூற கடுப்பானது என்னவோ டோவினா தான்.
“நீங்க சொல்றது மட்டும் தான் சரின்னு நினைச்சா நான் ஒன்னும் பண்ண முடியாது. முதல்ல மத்தவங்க கருத்துக்களை கேட்டு புரிஞ்சிக்க முயற்சி பண்ணுங்க.” என்று கத்த ஆரம்பிக்க, நவியோ ‘தேவையில்லாமல் வாயைக் கொடுத்து மாட்டிக்கொண்டோமோ!’ என்று நினைத்தாள்.
“உஃப் போதும் நிறுத்துங்க. இப்போ எதுக்கு தேவையில்லாத ஆர்க்கியுமெண்ட்ஸ்ல ஈடுபட்டுட்டு இருக்கீங்க? இவங்களை நம்மால காப்பாத்தவும் முடியாது. இவங்களுக்காக இங்கயிருந்து போராடவும் முடியாது. நாளைக்கு காலைல இங்கயிருந்து கிளம்புறோம். அடுத்து இப்படி எங்கேயாவது ஸ்டே பண்ண இடம் கிடைக்குமான்னு தெரியாது. சோ எல்லாரும் நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க.’ என்று அந்த ‘உரையாடல்’களுக்கு முற்றுப்புள்ளி வைத்தான் ரிஷப்.
*****
அப்போது அவர்கள் இருந்த அடித்தளத்திற்கு மேலே ஏதோ சத்தம் கேட்டது. அத்தனை நேரம் இலகுவாக இருந்தவர்கள், தங்களின் புலன்களை கூர்மையாக்கி நடப்பதை கிரகிக்க முயன்றனர். அவர்களின் அனுபவம் கற்று தந்த பாடம்!
யாரோ அடித்தளத்திற்குள் நுழையும் முயற்சியில் தரையை உடைப்பது போன்ற சத்தம் கேட்க, “கதவு இந்த பக்கம் இருக்குறப்போ அதுக்கு எதிர்முனையில இருந்து சத்தம் வருதே.” என்று ரியான் கூற, மற்றவர்களும் அதையே தான் நினைத்தனர்.
வருவது லிண்டாவாக இருக்காது என்று எண்ணியவர்கள் தங்களிடம் இருந்த ஆயுதத்தை தயாராக வைக்க, அதற்கு வேலை இல்லாமல் போனது.
தரையில் இருவர் வெளிவருவதற்கான அளவில் துளை அமைத்து அதிலிருந்து கீழே பார்த்தது லிண்டா தான்.
அவர்கள் நின்றிருந்த விதத்தைக் கண்டவர், “வேற யாரையோ எதிர்பார்த்தீங்க போலயே.” என்று கேலியாக வினவினார்.
“க்கும், இந்த பக்கம் கதவு இருக்கப்போ வேற பக்கம் வந்தா என்ன நினைக்குறது?” என்று நந்துவும் அவருக்கு ஏதுவாக பதிலளித்தான்.
“அதெல்லாம் இன்னுமா திறந்து வச்சுருப்பாங்க. ஒருவேளை சந்தேகத்துல ரோபோ அந்த கதவை உடைச்சுட்டு உள்ள வந்துடுச்சுனா.” என்று நிறுத்தினார்.
“அப்போ எங்களை உள்ள விட்டுட்டு முழுசா அடைச்சுட்டீங்களா!” என்று அதிர்ந்தாள் டோவினா.
மற்றவர்களுக்கு அது பெரிய விஷயமாக தெரியவில்லை போலும்! இதுவும் அனுபவம் கற்று தந்த பாடம் தான்.
லிண்டா அமைத்த துளையின் வழியாக ஒவ்வொருத்தராக வெளியே வந்தனர். அடிப்பட்டிருந்த வாங் வெய்யை வெளியே அழைத்து வருவது தான் சற்று சிரமமாக இருந்தது.
“அந்த ரோபோவை நீங்க பார்க்க போவீங்களா? இல்ல அது உங்களை பார்க்க வருமா?” என்று தான் விசாரணையை ஆரம்பித்தான் நந்து.
“அதுங்க வந்து பார்க்க நான் என்ன அவ்ளோ பெரிய ஆளா? நாங்க தான் அதுங்களை போய் பார்க்கணும். எங்க ப்ரெயின் ரீட் பண்ணி ஏதாவது அப்நார்மலா தெரிஞ்சா தான் எங்களோட இருப்பிடத்துக்கு வந்து செக் பண்ணும்.” என்றார் லிண்டா.
“உங்க மூளையை ரீட் பண்றப்போ எங்களை பத்தின விஷயங்களும் உங்க மூளைல இருந்துருக்குமே, அப்போ எப்படி அந்த ரோபோக்களுக்கு தெரியாம போச்சு?” என்றான் ரியான்.
“ஒரு சட்டம் இயற்றப்பட்டா, அதுலயிருந்து எப்படி தப்பிக்கனுங்கிற வழியும் கொஞ்ச நாள்லேயே வெளிய வந்துடும். இதுக்கும் அது பொருந்தும். நடந்த சில சம்பவங்களை நம்ம மூளையில இருந்து தற்காலிகமா நீக்குறதுக்கு சில ட்ரக்ஸ் இருக்கு. தற்காலிக மறதிக்கான ட்ரக்ஸ்.” என்றார்.
அவர் கூறியதைக் கேட்டதும், ‘இதுக்கெல்லாம் ட்ரக்ஸா!’ என்று தான் நினைத்தனர்.
“தற்காலிகமா நீக்குறதா, அது எப்படி?” என்று நோலன் வினவ, “டாக்டர் சார், சாதாரண கஸ்டமரான எனக்கு, உங்களுக்கு எப்படி விளக்கி புரிய வைக்குறதுன்னு தெரியலையே. நீங்க ஏன் கான்கிட்ட கேட்க கூடாது?” என்றார் லிண்டா, இப்போதும் கிண்டலாகவே…
“அவன்கிட்ட கேட்டா மட்டும் பதில் வந்துடப்போகுதா?” என்று நோலன் முணுமுணுத்தது அங்கிருந்த அனைவருக்கும் கேட்டது.
“சரி நீங்க இந்த ரூம்ல ரெஸ்ட் எடுங்க. நாளைக்கு காலைல பார்க்கலாம்.” என்று லிண்டா அந்த அறையை விட்டு வெளியேற, அனைவரும் அங்கேயே படுக்க ஆயத்தமாயினர்.
நவி படுக்கும் முன் அனைவரையும் ஒருமுறை பார்த்தாள். பல நாட்கள் ஓய்வில்லாததைப் போன்றிருந்த அவர்களின் முகம் கண்டு, எப்போது இங்கிருந்து வெளியே செல்வோம் என்று எண்ணி பெருமூச்சு விட்டாள்.
அப்போது தான், ரிஷப் அங்கில்லாதது தெரிந்தது. தன் கண்களை சுழற்றும் போது, அந்த அறையின் மூலையில் உள்ள ஜன்னலின் அருகே நின்று வெளியே வெறித்திருந்தான் ரிஷப். முதல் நாள் கண்ட காட்சி தான். ஆனால் நின்றிருந்தவனில் தான் ஏதோ மாற்றம் தென்பட்டது.
நவி மெல்ல அவனருகே செல்ல, இம்முறை அவளின் வரவை அவன் கண்டுகொள்ளவில்லை. அதற்கு காரணம், அவன் தீவிர சிந்தனையில் இருந்ததாலா இல்லை அவளின் வாசனை திறவியத்தின் வாசனை இல்லாததாலா என்று தெரியவில்லை.
தான் வந்து சில நொடிகளாயினும் தன்னைக் கண்டுகொள்ளாததால் நவியே அவனை அழைத்தாள்.
அப்போதும் அவனின் சிந்தனையிலிருந்து வெளிவர விரும்பாதவனாக, “என்ன நவி? இன்னும் தூங்கலையா?” என்று அவளைப் பார்க்காமலேயே வினவினான்.
நவியோ அவனின் கேள்விக்கு பதிலளிக்காமல், “ரிஷப், என்னாச்சு? ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க?” என்று வினவினாள்.
“ஒன்னுமில்ல நவி. ஐ’ம்…”என்று அவன் சொல்வதற்குள், “ஆல்ரைட்னு மட்டும் சொல்லிடாதீங்க. உங்களை பார்த்தாலே தெரியுது, நீங்க சரியில்லன்னு. அதுவும் ஜாஷா இறந்ததுக்கு அப்பறம் நீங்க ரொம்பவே டவுன்னா தான் இருக்கீங்க. என்கிட்ட ஷேர் பண்ண முடியும்னா சொல்லுங்க.” என்றாள்.
“எஸ் நவி, நான் ரொம்பவே டவுன்னா தான் இருக்கேன். என் கண்ணு முன்னாடியே ரெண்டு பேரு இறந்துருக்காங்க. அதுவும் கொஞ்சம் முயற்சி செஞ்சுருந்தா ஜாஷாவை காப்பாத்திருக்கலாங்கிற எண்ணம் இப்பவும் மனசுல தோணிக்கிட்டே தான் இருக்கு. இது குற்றவுணர்ச்சியான்னு சொல்ல தெரியல. ஆனாலும், அந்த எண்ணம் தோணும்போதெல்லாம் ஐ ஃபீல் டவுன். இதுவரைக்குமான பாதையும், அங்க இருக்க ஆபத்துகளும் ஓரளவுக்கு எனக்கும் தெரியும். ஆனா, இனிமே நாம போகப்போற பாதை எனக்குமே தெரியாது. அப்படி இருக்குறப்போ, கொஞ்சம் பயமா தான் இருக்கு!” என்றான் ரிஷப்.
“ரிஷப், இங்க யாருக்கும் யாரும் பொறுப்பில்ல. எல்லாரும் தனி தான். சோ அவங்க இறந்ததுக்கு நீங்க காரணம் இல்ல. உங்களை யாரும் ப்ளேம் பண்ணவும் முடியாது. நீங்க ஜாஷாவை காப்பாத்த உங்களாலான முயற்சிகள் செஞ்சீங்க. ஆனா, அவங்களை காப்பாத்த முடியல. இதுக்காக நீங்க குற்றவுணர்வோட இறக்குறதுக்கு அர்த்தமே இல்ல. அண்ட் எஸ் நாளைக்கு நாம போகப்போற பாதை புதுசு தான். எல்லாருக்குமே புதுசு. சோ எல்லாருமே கவனமா இருப்போம். நம்மால முடிஞ்சளவுக்கு போராடுவோம். மீதி நம்மள படைச்சவன் கையில. நான் முதல்ல பார்த்த ரிஷப் எங்க? என்ன வந்தாலும் எதிர்த்து நிக்கலாங்கிற ரிஷப் எங்க?” என்று வினவினாள்.
அவள் பேசியதைக் கேட்டவன், ஒரு பெருமூச்சுடன், “நீ சொல்றது சரி தான் நவி. நடந்து முடிஞ்சதை நினைச்சு எந்த யூஸும் இல்ல. சோ, இனிமே நடக்கப்போறதை யோசிக்கணும்.” என்றான்.
“இந்த அர்த்த ராத்திரில நீங்க யோசிச்சது போதும். போய் தூங்குங்க ரிஷப்.” என்று நவி சலித்துக் கொண்டே கூற, அவனும் ஒரு சிரிப்புடன் அவளைக் கடந்து சென்றான்.
என்ன தான் மனதை கட்டுக்குள் வைத்திருப்பதாக எண்ணினாலும், அவன் உதிர்த்து சென்ற சிரிப்பு அவளின் மனக்கதவை பலமாக தட்டியது என்னவோ உண்மை தான்.
*****
நன்கு உறங்கிக் கொண்டிருந்த நவிக்கு ஏதோ சத்தம் கேட்பது போல தோன்ற, லேசாக இமைகளை விரித்து, கண்களை சுருக்கி, சத்தம் வந்த திசை நோக்கி தன் பார்வையை திருப்ப, அங்கு ஒரு உருவம் வாங் வெய்யின் வாயை ஒரு கையால் மூடியபடி மறுகையிலிருந்த கத்தியைக் கொண்டு வயிற்றில் குத்திக் கொண்டிருந்தது.
அதைக் கண்டவளின் கண்கள் பெரிதாக விரிந்து கொள்ள, கண்களைப் போலவே விரிய முயன்ற வாயைக் கைக்கொண்டு மூடியபடி, அருகில் ஏதேனும் ஆயுதம் இருக்கிறதா என்று தேடினாள்.
சிறிதும் சத்தம் வராமல் தேடிவளின் கையில் சிக்கியது அந்த துப்பாக்கி. அது கைக்கு அகப்பட்டதும் சிறிதும் தாமதிக்காமல் அந்த உருவத்தின் தலையை நோக்கி சுட்டாள். அதற்கு அவ்வுருத்தின் எதிர்வினை கண்டு அதிர்ந்தது நவி தான்.
Comments
Post a Comment
Please share your thoughts...