15 - புவியே காட்சிப்பிழையாய் Skip to main content
Please do read and support * கதைகளைப் படித்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் எனது கதைகள் : தடம் மாறிய தடயம், வெள்ளையாடை தேவதை, (மனித)மிருக வேட்டை, தனிமையில் ஓர் இரவு, கருவறை தா(ண்டி)ங்கிய சுமை, குற்றங்கடிதல், உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே, மிரட்டும் அமானுஷ்யம், என்னில் இணைய உன்னை அடைய, புதிராய் நீயெனக்கு, நீயாக நான் நானாக நீ, வழி மாறிய பயணம் Ongoing : என் வாழ்வின் வானவில் நீதானே, துஷ்யந்தனின் காதலி, இதயத்தின் நிறம் பார்த்ததால், நிழலாய் ஒரு நினைவு   Future works : வினோதனின் வினோதையே, நெஞ்செங்கும் நுண்பூகம்பம், சீரியல் கில்லி

Recent posts

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)

15 - புவியே காட்சிப்பிழையாய்




 காட்சிப்பிழை 15


ரியான் மற்றும் நோலன் இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டுவதைக் கண்ட ரிஷபிற்கு குழப்பமாக இருந்தது. 


நவியின் கவனம் டோவினாவிடம் இருந்தாலும், இவர்களின் உரையாடல்களை அவளும் கேட்டுக் கொண்டு தான் இருந்தாள். 


நோலனின் புறமிருந்த ஆயுதங்கள் அடங்கிய பை, அவன் கையிலிருந்த துப்பாக்கி இவையனைத்தும் நோலன் மீது சந்தேகத்தை ஏற்படுத்த பெரும் காரணிகளாக அவளிற்கு தோன்றின. மேலும்,  நோலனின் இயல்பற்ற செயல்கள், அவனின் மூளையையும் கட்டுப்படுத்தியிருப்பார்களோ என்று எண்ணவும் வைத்தது.


இவற்றையெல்லாம் தொடர்பு படுத்தி பார்த்தவளின் மூளை அவசர காட்சியாக, ஜான் இறக்கும்போது நோலனிடம் ஏதோ கூறியதை மறுஒளிபரப்பு செய்ய, இப்போது நவிக்கு சந்தேகமெல்லாம் இல்லை. அவள் உறுதியே செய்து விட்டாள் நோலன் தன டோவினாவை தாக்கியுள்ளான் என்று…


இந்த சூழலில் என்ன முடிவெடுப்பது என்று தெரியாமல் குழம்பிய ரிஷபிற்கு சட்டென்று டோவினாவின் நினைவு எழ, அது எழுந்த வேகத்திலேயே அடங்கியும் போயிற்று.


தோட்டாக்கள் மேனியைத் துளைக்க, குருதி பீறிட்டு வழியும் நிலையில் இருப்பவளை இதற்கு மேல் கேள்விகளால் துளைக்க விரும்பவில்லை ரிஷப். 


ஆனால், அவன் பார்வையை உணர்ந்து கொண்ட டோவினா, அவன் எதிர்பார்த்த விடையைக் கொடுக்க முயல, அவளின் காயங்கள் அந்த முயற்சியை தடுத்துக் கொண்டிருந்தன. ஒருவழியாக, பல தடைகளை மீறி, ‘நோலன்’ என்று வாயசைக்கும் போதே, அத்தனை நேரம் உடலில் ஒட்டியிருந்த உயிர் பிரிந்தது. 


அவள் இறப்பு ஒருபுறம் வருத்தமாக இருந்தாலும், நோலனை நினைத்தும் வருத்தமாக தான் இருந்தது.


ஏனெனில், டோவினா கண்கள் சொருகும் வேளையில், அவன் நின்ற இடத்திலேயே மடிந்து அமர்ந்த நோலன், “நான் கொல்லல!’ என்று கதறினான்.


நம் மூளை நம் கட்டுப்பாட்டிற்குள் இல்லாத போது நாம் செய்யும் சில காரியங்கள் உண்டாக்கும் விளைவுகளை  நாம் சுயநினைவு அடைந்ததற்கு பிறகு நம்மால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. இது போதைக்கும் பொருந்தும்!


அத்தகைய நிலையில் தான் இருந்தான் நோலன். அவனால் இன்னமும் நம்பவே முடியவில்லை. தன் கையில் இருக்கும் துப்பாக்கியையும், தன் முன்னே வீழ்ந்திருந்தவளின் குருதியையும் பார்த்தவன் இறுதியில் அதை நம்பவேண்டியதாகிற்று.


நோலனின் வருத்தத்தை பிறரால் உணர்ந்து கொள்ள முடிந்ததோ இல்லையோ, ரிஷபினால் நன்கு உணர முடிந்தது. ஏனெனில், அவனும் மருத்துவன் தானே. உயிரைக் காப்பாற்ற வேண்டும் என்று கையில் எடுக்கும் ஆயுதங்கள் தவறி அந்த உயிரைப் பறிக்கும் சூழலில் யாராக இருந்தாலும் வருத்தம் இருக்கத்தானே செய்யும்!


ஆனால், ரிஷபைத் தவிர வேறு யாரும் அவனைக் கண்டுகொள்ளவில்லை. மற்ற மூவரின் கவனமும் டோவினாவிடமே இருந்தது. சில நொடிகள் அவளின் உயிரற்ற உடலையே கவலையாக பார்த்துக் கொண்டிருந்தவர்கள், அடுத்து என்ன செய்வது என்று யோசித்தனர்.


ரியான் தான் அவளின் உடலை புதைத்து விடலாம் என்று கூறி அந்த வேலையில் ஈடுபட்டான். அதன்பிறகு அங்கு மௌனம் மட்டுமே நிலவியது. அங்கேயே குழியைத் தோண்டி டோவினாவின் உடலை புதைத்தனர்.


அத்தனை நேரமும் அவர்களின் செயல்களை வெறித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் நோலன்.


ரிஷப் தான் அவனருகே சென்று, “நோலன் ரிலாக்ஸ். இது நீங்க இன்டென்ஷனலா பண்ணியிருக்க மாட்டிங்க. உங்க மூளையை கட்டுப்படுத்தி டோவினாவை சுட வச்சுருக்கலாம். நாங்க உங்களை இப்போ குற்றவாளியா பார்க்கல. ஆனாலும், நாம கேர்ஃபுல்லா இருக்கணும். இது உங்களுக்கு மட்டுமில்ல நம்ம எல்லாருக்குமே தான்…” என்று மற்றவர்களையும் பார்க்க, அனைவரும் அதை ஆமோதிப்பதைப் போல தலையசைத்தனர்.


“இப்போ என்ன செய்யலாம், ரிஷப்?” என்று நவி வினவ, “ஹ்ம்ம், அடுத்த பயணத்தை தொடங்க வேண்டியது தான்.” என்று கூறிய ரிஷப் டேப்பை எடுத்து பார்த்து குழம்பினான்.


அவனின் குழப்ப முகத்தைக் கண்ட ரியான், “என்னாச்சு ப்ரோ?” என்று கேட்க, “இங்க பாதையே மாறியிருக்கு.” என்று அந்த டேப்பை மற்றவர்களுக்கும் காட்டினான்.


“போன முறை பார்த்தப்போ, இதோ இந்த பாதையில போயிட்டே இருந்தா பெரிய மலை இருந்துச்சு. அதைக் கடந்து ஒரு பெரிய பில்டிங் இருந்துச்சு. இப்போ பார்த்தா, ஜஸ்ட் பில்டிங் மட்டும் தான் இருக்கு. மலையைக் காணோம்!” என்று கூறினான்.


அதைக் கேட்டவர்களும் குழம்பித் தான் போயினர்.


‘எப்படி காணாம போகும்?’ என்று அனைவரும் தனித்தனியே யோசிக்க நவியோ, “இதுக்கு முன்னாடி இப்படி ஆகியிருக்கா ரிஷப்? அதாவது நீங்க முன்னாடி வேற குழுவோட போயிருந்தப்போ இது மாதிரி ஏதாவது வியர்ட்டா நடந்துருக்கா?” என்றாள்.


ரிஷப் பதில் சொல்வதற்குள், “க்கும், இங்க வியர்ட்டா நடக்கலைன்னா தான் யோசிக்கணும்.” என்று நந்து முணுமுணுக்க அவனை பார்வையாலேயே அடக்கினாள் நவி.


“இப்படி எதுவும் நடந்த மாதிரி எனக்கு ஞாபகம் இல்ல நவி.” என்று யோசித்துக் கொண்டே அந்த டேப்பில் தெரிந்த கட்டிடத்தை பெரிதாக்கியவனிற்கு சட்டென்று அந்த நினைவு வந்து போனது.


“இது, இந்த பில்டிங் தான் நான் சொன்ன ரிசர்ச் ஃபேசிலிட்டி. போன முறை வந்தப்போ, இந்த இடத்துல இருந்தது தான் எனக்கு கடைசியா ஞாபகம் இருக்கு. இந்த இடத்துல என்ன நடந்துச்சுன்னு எதுவும் தெரியல. ஆனா, இங்கயிருந்து உயிரோட திரும்புனது நான் மட்டும் தான்.” என்று பழையவற்றை நினைவு கூர்ந்தான்.


“அப்போ நம்ம பயணத்துலயும் கடைசி ஸ்டாப் இந்த இடம் தான் போல.” என்று நவி கூற அனைவரின் மனதிலும் பயத்துடன் கூடிய பதட்டம் உருவானது.


“எதுவா இருந்தாலும் நம்ம ஃபேஸ் பண்ணி தான் ஆகணும்.” என்று டேப்பிலிருந்த அந்த இடத்தை வெறித்தபடி கூறிய ரிஷப் மற்றவர்களைப் பார்த்து, “நல்லா கவனிங்க கைஸ். இனிமே, என்ன நடக்கப் போகுதுன்னு யாருக்கும் தெரியாது. ஏற்கனவே நம்மில் பலரை இழந்தாச்சு… நம்ம மூளையைக் கட்டுப்படுத்தி நமக்கு எதிரா நம்மையே மாற்றி கொன்னுட்டு இருக்காங்க. இதைத் தடுக்கணும்னா எல்லாரும் ஒண்ணா இருக்கணும். உங்களுக்குள்ள நடக்குற சின்ன மாற்றத்தைக் கூட லேசா எடுத்துக்காதீங்க. உங்க மூளைக்குள்ள இருந்து யாராவது கட்டளையிடுற மாதிரி இருந்தா, உடனடியா மத்தவங்களுக்கு தெரியப்படுத்துங்க. முக்கியமா, நவி அண்ட் நோலன், உங்க ரெண்டு பேர் மூளையையும் ஏற்கனவே கன்ட்ரோல் பண்ணதால, நீங்க தான் ஈஸி டார்கெட்டா இருப்பீங்க.” என்று அவன் கூற, மற்றவர்கள் அவனையே கவனித்துக் கொண்டிருந்தனர்.


அவன் குரலிலிருந்த அழுத்தம் நிலைமையின் தீவிரத்தை உணர்த்த, அனைவரும் வருவதை எதிர்கொள்ள தயாராகினர்.


“லெட்ஸ் டூ திஸ் டுகெதர்.” என்று அனைவரிடமும் கூறி ஆயுதங்கள் அடங்கிய பையை கவனமாக அவனே தூக்கிக் கொண்டான். அவனின் செயலை மற்றவர்கள் கவனிக்கவில்லை எனினும், நவி கவனித்தாள். அவனின் செயலே கூறியது, அவன் யாரையும் நம்பவில்லை என்று.


அவள் கண்டதை அவனும் கண்டான். மெல்ல அவளருகே வந்தவன், “சூழ்நிலை கைமீறி போச்சுன்னா, சுடுறதை தவிர வேற வழியில்ல.” என்று கூறியவன், அவளிடமும் துப்பாக்கி ஒன்றை யாருக்கும் தெரியாமல் கொடுத்தான்.


“உனக்கும் அதே தான் சொல்றேன். ஒருவேளை எல்லாம் கைமீறி போனா, சுடுறதுக்கு ஒரு நொடி கூட தயங்காத.” என்று கூறிவிட்டு முன்னே சென்றான்.


அவன் கூறிய செய்தியிலிருந்தே வெளிவர சில நொடிகள் எடுத்துக் கொண்டவள், முன்னே செல்பவனின் முதுகை கலக்கத்துடன் பார்த்திருந்தாள்.


*****


அவர்களின் இறுதி இலக்கான (டேப்பை பொறுத்தவரை) அந்த ஆராய்ச்சி கூடத்தை நோக்கி அவர்களின் பயணம் தொடர்ந்தது. முதலில் ரிஷப் செல்ல, அவனைத் தொடர்ந்து நவி, நந்து, நோலன், ரியான் முறையே சென்றனர்.


வழியெங்கும் நவியின் மனதிற்குள் ரிஷப் கூறிய வார்த்தைகளே ரீங்காரமிட்டன. ‘சுடனுமா! அப்போ எல்லாரும் இறந்துடுவோமா? இப்படி எங்களை சாகடிக்கிறதுல இவங்களுக்கு என்ன கிடைச்சுடப் போகுது? இதுக்கு முதல் நாளே எல்லாரையும் கொன்றுக்கலாமே!’’ என்று நவி மனதுடன் பேசிக் கொண்டே வந்தவள், ரிஷப் நின்றதை கவனிக்காமல் அவன் மீதே மோதிக் கொண்டாள்.


உடனே, “சாரி சாரி…” என்று மன்னிப்பு கேட்டவளை ரிஷப் கண்டுகொள்ளவே இல்லை. அவனின் பார்வையெல்லாம் அவன் முன்னே, சற்று சிதைந்திருந்தாலும் கம்பீரமாக நின்றிருந்த அந்த ஆராய்ச்சி கூடத்தில் தான் நிலைத்திருந்தது.


முதலில் இருந்த கட்டிடத்ததைப் போல பிரம்மாண்டமாக இல்லாவிட்டாலும், பெரிய ஆராய்ச்சி கூடம் என்று சொல்வதற்கேற்ற அளவில் இருந்தது அந்த கட்டிடம். 


வெளி சுவர்களில் கருநிற தூசி படிந்திருந்ததைப் பார்த்தவர்களுக்கு, அது தீ விபத்தில் சிக்கிய இடம் என்று நன்றாகவே தெரிந்தது.


வெளியே ஆராய்வதற்கு எதுவும் இல்லை என்ற அளவிற்கு சுற்றிலும் பார்த்தவர்கள், உள்ளே நுழைய முற்பட்டனர்.


அந்த கட்டிடத்தை சுற்றி, பெரிய இரும்பு வேலி இருக்க, இதிலும் மின்சாரம் பாய்கிறதோ என்று அதை தொடுவதற்கு பயந்தனர். 


அப்போது ரிஷப் கீழேயிருந்த புல்லை பிடுங்கி அதன் நுனியை அந்த வேலியின் மீது வைக்க, அவனையே பார்த்துக் கொண்டிருந்தனர் மற்றவர்கள்.


“புல்லை வச்சு கரன்ட் பாஸ் ஆகுதான்னு செக் பண்ணலாமா?” என்று நவி ஆர்வத்துடன் வினவ, “ஆமா நவி. இப்படி புல்லோட நுனியை எலெக்ட்ரிக் ஃபென்ஸ் மேல வச்சு மெல்ல கையை முன்னாடி கொண்டு போனா, ஃபென்ஸ்ல கரன்ட் பாஸ் ஆச்சுன்னா லேசான பல்ஸ்ஸை நம்மால உணர முடியும். இந்த புல்லை இங்க ரெசிஸ்டரா உபயோகப்படுத்துறோம்.” என்றான் ரிஷப்.


நவிக்கு விளக்கிக்  கொண்டே அதை செய்து முடித்தவன், “இங்க கரன்ட் பாஸ் ஆகல.” என்றான்.


என்ன தான் ரிஷப் அந்த வேலியில் மின்சாரம் பாயவில்லை என்று கூறினாலும், மற்றவர்களுக்கு சிறிது தயக்கம் இருக்கத்தான் செய்தது. அவர்களின் முகபாவங்களை வைத்தே அவர்களின் எண்ணங்களை படித்தவன் தானே அந்த வேலியை வெறும் கைகளால் தொட்டான்.


அவனிற்கு எதுவும் ஆகவில்லை என்று தெரிந்து தான் அங்கிருந்தவர்களின் பதட்டம் சற்று குறைந்தது.


அனைவரும் அந்த வேலியைக் கடந்து கட்டிடத்தினுள் பிரவேசித்தனர். வெளியிலிருந்து பார்த்ததை விட உள்ளே வந்து பார்க்கும்போது தீயின் கோரத்தாண்டவம் நன்றாகவே கண்களுக்கு புலப்பட்டது.


திடீரென்று அந்த இடமே மயான அமைதியில் மூழ்கியது போன்றதொரு தோற்றம் ஏற்பட, அதை உணர்ந்தவர்களாலும் அதனை வார்த்தைகளைக் கொண்டு வடிவமைக்க முடியவில்லை. அத்தனை நேரமும் இருந்த அமைதியல்ல அது. அதையும் தாண்டிய மனதை உறைய செய்யும் அமைதி. 


அந்த அமைதியே அவர்களின் மனதில் பயம் கலந்த பதட்டத்தை விளைவித்தது. அதே பதட்டத்துடன் அந்த கூடத்திற்குள் நுழைந்தனர்.


அப்போது அந்த அமைதியை தகர்ப்பது போல கேட்டது அந்த குரல், யாரோ ஒரு நடுத்தர வயது மனிதர், அவரை விட இரண்டு அல்லது மூன்று வயது குறைந்த பெண்ணிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்த காட்சி இவர்களின் கண்களுக்கு புலப்பட்டது.


முதலில், யாரோ அங்கிருப்பதை போல இருக்க, சில நொடிகளுக்குப் பின்னர் தான் அது மாயை என்பது புரிந்தது. ஆனாலும் தொடர்ந்து அந்த காட்சிகள் ஓடிக் கொண்டு தான் இருந்தன.


இருவரிடையே நடந்த பேச்சுவார்த்தை முற்றி சண்டையாக மாற, அவர்கள் அங்கிருந்த ஆராய்ச்சிப் பொருட்களை மாறி மாறி உடைக்க, கீழே விழுந்து சிதறிய வேதியியல் திரவங்கள் ஒன்றோடொன்று கலந்து, அதனால் உண்டான சில பல வேதியியல் மாற்றங்களின் காரணமாக அங்கு தீப்பிடித்தது. அவர்கள் உதவிக்காக கத்த, யாரும் உதவி செய்ய வராமல் போனதால், அதே இடத்தில் அவர்கள் உடல் கருகி அவர்கள் உயிரிழந்தனர். இவ்வாறு அனைத்து காட்சிகளும் ஒன்றன் பின் ஒன்றாக நிகழ்ந்தன. 


அதைக் கண்டவர்கள் எவ்வாறு உணர்கின்றனர் என்று அவர்களுக்கே தெரியவில்லை. மாயை என்றாலும் கண்முன் நிகழ்ந்த அந்த கோர சம்பவமும், அந்த இருவரின் கூக்குரலும் அழுத்தமானவர்களைக் கூட கரைக்கும் என்கையில் இவர்கள் எம்மாத்திரம்! 


அந்த இருவருக்காகவும் இவர்கள் வருத்தப்படும் வேளையில் அந்த மாயை மறைந்து மீண்டும் இயல்பிற்கு திரும்பியது அந்த இடம்.


அப்போது தான், எதற்காக இந்த காட்சிகளை தங்களிடம் காட்ட வேண்டும் என்ற சந்தேகம் ஏற்பட்டது நவிக்கு. அதை ரிஷபிடம் வினவ நினைத்து அவன் புறம் திரும்ப, அவனோ அந்த காட்சிகளின் தாக்கத்திலிருந்து இன்னும் விடுபடவில்லை என்பது போல நின்று கொண்டிருந்தான்.


ஒரு பெருமூச்சுடன் அவனின் தோளை தொட்டவள், “ரிஷப்...” என்று அழைத்தாள். அவளின் அழைப்புகள் அவனின் மூளையை சென்றடையவில்லை என்பது அவனின் வெறித்த பார்வையிலேயே தெரிந்தது.


“ரிஷப் என்னைப் பாருங்க.” என்று கிட்டத்தட்ட அவனை உலுக்கி நிகழ்விற்கு அழைத்து வந்தாள் நவி.


கனவிலிருந்து விழிப்பவனைப் போல இருந்தவன் நொடியினில் சுதாரித்துக் கொண்டான்.


“என்ன நவி?” என்று வினவ, “நீங்க ஓகேயா?” என்றாள் நவி.


அவளின் கேள்வியில் முதலில் தடுமாறியவன் பின்னர் சுதாரித்துக் கொண்டு, “எஸ் நவி ஓகே தான்.” என்றதோடு நிறுத்திக் கொண்டான்.


“இப்போ நடந்தது எல்லாம் இல்யூஷன் தான? ஏன் இப்படி ஒரு  இல்யூஷனை உருவாக்கனும்? இன்ஃபேக்ட் அந்த ரெண்டு பேரு யாருன்னே தெரியாது. கண்ணு முன்னாடி அவங்க இறந்தது போல வந்த இல்யூஷன் கஷ்டமா இருந்தது உண்மை தான். ஆனா, எதுக்கு சம்பந்தமே இல்லாம இந்த காட்சி?” என்று நவி கூறிக் கொண்டிருக்க, ரிஷபின் மனமோ அப்போது தான் இந்த கோணத்தில் சிந்திக்க ஆரம்பித்தது.


அவன் மனதிற்குள் சில பல கணக்குகளைப் போட்டுக் கொண்டிருக்க, நவி அவன் பதிலேதும் சொல்லாததால் அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.


“ரிஷப்… ரிஷப்…” என்று அவனை அழைத்து, “என்னாச்சு உங்களுக்கு இன்னைக்கு அடிக்கடி ஃப்ரீஸ் மோடுக்கு போயிடுறீங்க?” என்று வினவினாள்.


ரிஷப் ஒரு பெருமூச்சுடன், “ஒன்னுமில்ல…”என்றான்.


அப்போது இருவரின் உரையாடலையும் கலைப்பது போல, “ஹே நோலன் என்ன பண்ற?” என்று ரியான் கத்தினான்.


அதைக் கேட்டவர்கள் சட்டென்று திரும்பி நோலனைப் பார்க்க, அவனோ நந்துவின் கழுத்தில் கத்தியை வைத்துக் கொண்டு நின்றான்.


அதைக் கண்டு பதறிய நவி, “நந்து…” என்று கத்திக்கொண்டு அருகே செல்ல முயல, நோலனோ நவியைக் கண்டு பின்வாங்கியபடி, “அங்கயே நில்லு நவி. பக்கத்துல வராத.” என்று எச்சரித்தான்.


நந்துவிற்கு ஆபத்து என்றவுடனே யோசிக்கும் அளவிற்கெல்லாம் நவியின் மூளை செயல்படவில்லை. எப்படியாவது அவனைக் காப்பாற்ற வேண்டும் என்ற சிந்தனையிலேயே இருந்ததால், நோலனின் எச்சரிக்கை அவளின் செவிக்குள்ளேயே செல்லவில்லை.


அவள் இருவரையும் நோக்கி அடியெடுத்து வைக்க, “சொன்னா கேட்க மாட்டியா?” என்று நந்துவின் கழுத்தில் லேசாக கீறினான் நோலன்.


நவி பிரக்ஞையின்றி செயல்படுகிறாள் என்பதை உணர்ந்து கொண்ட ரிஷப் தான் அவளை இழுத்து தன் கைகளுக்குள் பிடித்து வைத்துக் கொண்டான்.


இப்போது ரிஷபிற்கே சந்தேகம் ஏற்பட்டது. யாருடைய மூளையை எல்லாம் கட்டுப்படுத்தி வைத்திருக்கிறார்கள் என்று அவனிற்கு புரியவில்லை.


ஒருபுறம் நோலன் சைக்கோத்தனமாக நந்துவின் கழுத்தை அறுக்க, அதற்கு எந்தவித எதிர்வினையும் இல்லாமல் அவனிடம் அடங்கியிருந்தான் நந்து. மறுபுறம் தன் கைகளுக்குள் சிறைப்பட்டுக் கொண்டிருந்த நவி, சுயநினைவின்றி நந்துவிடம் செல்ல வேண்டும் என்பதை மட்டுமே எண்ணி முரண்டிக் கொண்டிருந்தாள்.


முதலில் நோலனிடம் பேசலாம் என்று எண்ணிய ரிஷப், “நோலன், இங்க பாருங்க. எதுக்கு இப்படி பிஹேவ் பண்ணிட்டு இருக்கீங்க? நீங்க ஒரு டாக்டர். உயிரோட மதிப்பு என்னன்னு உங்களுக்கு நல்லாவே தெரியும். அது தெரிஞ்சும் நீங்க இப்படி நடந்துக்குறது சரியான்னு நீங்களே சொல்லுங்க.” என்று அவனிடம் மெதுவாக பேச்சு கொடுத்தான்.


ஆனால், அவன் கூறிய ‘மருத்துவர்’ என்னும் வார்த்தையே அவனை இன்னும் தூண்டுவதைப் போல இருந்தது.


“டாக்டரா? அப்படி டாக்டரா இருந்து என்ன பிரயோஜனம்? என் முன்னாடி எத்தனையோ மக்கள் செத்து போறதை பார்த்துட்டு வெட்டியா தான இருந்தேன்! ஒன்னும் செய்ய முடியாம இப்படி என்னோட கைகளை கட்டிப்போட்டது யாரு? ஆராய்ச்சிங்கிற பேர்ல கண்ட பொருட்களையும் சந்தைக்கு கொண்டு வர பணக்கார முதலாளிங்க தான. இங்க யாருக்கிட்டயும் மனிதாபிமானத்தை எதிர்பார்க்கவே முடியாது. இப்படியான உலகத்துல வாழ்றதுக்கு செத்தே போயிடலாம்.” என்று நோலன் கூற, அவனின் மூளையைக் கட்டுப்படுத்தியது மட்டுமல்ல அவனின் இயலாமையை தூண்டியிருக்கின்றனர் என்பது ரிஷபிற்கு நன்கு விளங்கியது.


“அப்படியெல்லாம் இல்ல நோலன். தயவு செஞ்சு என்னை கவனிங்க.’ என்று ரிஷப் எத்தனை கத்தினாலும் அது நோலனின் மூளைக்குள் செல்லவே இல்லை. அங்கு ஒரு வழித் தொடர்பு மட்டுமே நடந்து கொண்டிருந்தது.


“கவலைப்படாதீங்க, உங்களையெல்லாம் வலிக்காம கொன்னுடுறேன்.” என்று உண்மையான சைக்கோ போலவே பேச, இனிமேல் பேச்செல்லாம் வேலைக்காகாது என்று உணர்ந்த ரிஷப் நோலனை நோக்கி செல்ல முயலும்போது, அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் அவர்கள் இருவரும் நின்றிருந்த இடம் பிளந்து கொண்டு உள்ளே சென்றது.


அதைக் கண்ட ரிஷப் மற்றும் நவி திகைத்து நின்றிருந்தனர். நவி அப்போது தான் சுயநினைவை எட்டியிருந்தாள். சுயத்தை அடைந்ததும் முதலில் கண்டது, இத்தனை வருடங்களாக சுகத்துக்கங்களில் பங்கேற்று தன்னுடனே இருந்த தன் ஆருயிர் நண்பன் நிலத்திற்குள் செல்லும் காட்சியைத்தான்.


அதைக் கண்டவள் தன்னை சுற்றியிருந்த ரிஷபின் கைகளை தட்டிவிட்டு, நந்து நின்றிருந்த இடத்தை நோக்கி சென்றாள். அதற்குள் இருவரும் கீழே கண்கள் காண முடியாத தொலைவினில் சென்றுவிட்டனர்.


இப்போதும் நவி யோசிக்க முடியாத சூழலில் தான் சிக்கிக்கொண்டாள். “நவி நவி…” என்று பின்னிலேயே சுற்றிக் கொண்டிருக்கும் ஜீவன் இப்போது இல்லை என்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை. பிறந்த சிறிது நேரத்திலிருந்து அவளுடனே இருந்தவனாகிற்றே. இறக்கும்போதும் அவ்வாறு தான் என்று எண்ணம் கொண்டிருந்தாளோ!


அவள் அதே இடத்தில் மடங்கி அமர்ந்து அழுது கொண்டிருக்க, ரிஷப் சிறிது நேரத்திலேயே அந்த சூழலிலிருந்து வெளிவந்தான். அவனிற்கும் இருவர் இறந்தது வருத்தமான விஷயம் தான் என்றாலும், மீதி இருப்பவர்களையாவது காக்க வேண்டும் அல்லவா! அதற்கான வேலையில் இறங்கினான்.


அப்போது தான் அந்த இடம் மட்டும் எப்படி கீழே சென்றது என்ற யோசனை எழுந்தது. ஒருமுறை அந்த இடத்தை எட்டிப் பார்த்தான். கண்களால் அளக்க முடியாத அளவிற்கு ஆழம் அதிகமாக இருந்தது. நிலம் பிளந்து சென்றதைப் போல் அல்லாமல், சரியாக செவ்வக வடிவில் கீழே சென்றிருந்தது. 


‘அப்போ இது நேச்சுரலா நடந்தது இல்ல.’ என்று அவன் யோசிக்கும்போதே, கீழிருந்து ஏதோ சத்தம் கேட்டது.


அதில் அவன் எட்டிப்பார்க்க, இத்தனை நேரம் அழுகையை கழித்தவளும் எட்டிப்பார்த்தாள். சற்று முன்னர் கீழே சென்ற பகுதி மீண்டும் மேலே வந்து கொண்டிருந்தது. 


‘லிஃப்ட்டா?’ என்று ரிஷப் யோசிக்க, நவியோ அதில் நந்து எங்கேனும் தென்படுகிறானா என்று பார்த்துக் கொண்டிருந்தாள்.


ஆனால், அவளின் தேடலுக்கு எந்த பலனும் இல்லாமல், அனாதையாக மேலே வந்தது அந்த பகுதி. நவியின் ஆசை நிராசையாகிப் போனதில் சோர்வுடன் ரிஷபைக் காண, அவனின் முகமோ குழப்பத்தை தத்தெடுத்துக் கொண்டிருந்தது.


அவள், “ரிஷப்…” என்று அழைக்கும்போதே, “நவி, யாரோ இதுக்கு பின்னாடி இருக்காங்க.” என்று கூற, “ஹப்பா ஒருவழியா கண்டுபிடிச்சுட்டீங்களா?” என்று ஆர்ப்பாட்டமாக சிரித்தான் ரியான்.


“ரியான்?” என்று ரிஷபும் நவியும் அதிர்ச்சியாக பார்க்க, “எஸ் ரியானே தான்!” என்று அந்த தூக்குசாதனத்தை இயக்கும் நெம்புகோலை விட்டு விலகி நின்றான்.


“நீ தான் இந்த லிஃப்ட்டை ஆப்பரேட் பண்ணதா?” என்று ரிஷப் வினவ, ரியானோ சிரித்தபடி, “இப்படி மாத்தி மாத்தி கேட்டா மட்டும் நடந்தது ரிவர்ஸ்ல போயிடுமா என்ன?” என்று கிண்டலாகவே கேட்டான் ரியான்.


“ஏன் இப்படி பண்ண ரியான்?” என்று வினவிய நவிக்கு, என்ன முயற்சித்தும் குரல் நடுங்கியது.


“ஹ்ம்ம், உங்களுக்கு எப்படி புரிய வைக்கிறது? லுக், எனக்கும் இப்போ இறந்தவங்களுக்கும் எந்த பெர்சனல் வெஞ்சன்சும் இல்ல. சொல்லபோனா நான் கூட ஜாஷா இறக்குறதுக்கு முன்னாடி வரைக்கும், எல்லாரும் சேர்ந்து தப்பிக்கணும்னு தான் நினைச்சேன். ஆனா, இங்க நடக்குறதை பார்த்தா, ஜான் சொன்ன மாதிரி ஒருத்தன் தான் இங்கயிருந்து வெளிய போகக் கூடிய நிலைமை வந்தா, அந்த ஒருத்தன் நானா தான் இருக்கணும்.” என்று நீண்ட விளக்கம் அளித்தான் ரியான்.


“அதுக்காக எல்லாரையும் கொன்னுடுவியா?” என்று இம்முறை கோபமாகவே வினவினாள் நவி.


“அஃப்கோர்ஸ், ஏன்னா எல்லாருமே எனக்கு காம்படிட்டர் தான?” என்று குற்றவுணர்ச்சி கொஞ்சமும் இல்லாமல் கூறினான் ரியான்.


“இப்படி தான்னு நிச்சயமா தெரியாத ஒண்ணுக்கு இத்தனை பேரை கொன்னுருக்கியே, தப்பா தெரியலையா ரியான்?” என்று இறங்கிப் போன குரலில் ரிஷப் வினவ, “தப்பு தானோன்னு யோசிச்சேன். முதல் முறையா டோவினாவை கொன்னு, அந்த பழியை நோலன் மேல போட்டப்போ! ஆனா, எனக்கு நான் வெளியப்போகணும். அதுக்காக தான் இதுன்னு நானே எனக்கு சொல்லிக்கிட்டேன். இப்போ எனக்கு கொஞ்சமும் தப்பா தோணல.” என்று ரியான் கூற, ‘என்ன மனிதன் இவன்’ என்று தான் தோன்றியது நவிக்கு.


மேலும், எந்த தவறும் செய்யாத நோலனின் மீது பழியைப் போட்டதற்கு நவி தன்னைத் தானே திட்டிக்கொண்டாள். அவளின் மனதில், நோலன் சற்று முன்பு நடந்துகொண்ட விதத்திற்கு தானும் ஒரு காரணமா என்றும் தோன்றி அவளை வதைத்தது.


ஒருவேளை நோலன் மீது சந்தேகப்படாமல் இருந்திருந்தால், நந்துவும் இறந்திருக்க மாட்டானோ என்று எண்ணியபடி இருந்தவளை மற்ற இருவருக்குமிடையே நடந்த உரையாடல் நிகழ்விற்கு அழைத்து வந்தது.


“உங்களை எதுக்கு கொல்லாம விட்டு வச்சுருக்கேனா, இனி என்ன ஆபத்து வரும்னு எனக்கு தெரியாதுல. சோ உங்களை பகடையா உபயோகிக்க போறேன்.” என்று ரியான் கூற, ரிஷபோ கவனத்தை அவனின் பேச்சில் வைத்திருந்தாலும், எதையோ தீவிரமாக தேடிக் கொண்டிருந்தான்.


“என்ன ப்ரோ, இதையா தேடுறீங்க?” என்று ஆயுதங்கள் அடங்கிய பையை ரியான் தூக்கிக் காட்ட, அதுவும் அவன் கைகளில் இருந்ததை எண்ணி பல்லைக் கடித்தான் ரிஷப்.


“பேசினது போதும். கிளம்பலாமா?” என்று ஒரு துப்பாக்கியை எடுத்து இருவரையும் நோக்கி நீட்டியபடி, “நெக்ஸ்ட் எங்க போகணும்னு டேப்ல பாருங்க ப்ரோ.” என்றான்.


வேறு வழியில்லாததால், டேப்பை எடுத்து பார்த்தான். சென்ற முறை பார்த்தபோதே இந்த ஆராய்ச்சி கூடத்தை தாண்டி எதுவும் இல்லாமல் இருந்ததால், இப்போதும் எந்த நம்பிக்கையும் இல்லாமல் தான் அதை பார்த்தான்.


ஆனால், அவன் நம்பிக்கைக்கு மாறாக, அந்த டேப்பில் இவர்கள் நின்றிருந்த ஆராய்ச்சி கூடத்தை பெரிதாக்கியபோது, அந்த இடத்திலிருந்து வெளியே செல்வதற்கான வழி தெரிந்தது.


“உங்க முகத்தைப் பார்த்தா வழி இருக்கு போல. ம்ம்ம், முன்னாடி நடங்க ரெண்டு பேரும்.” என்று கட்டளையிட்டான்.


ரிஷபும் நவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டே நடக்க ஆரம்பித்தனர்.


*****


அந்த டேப் காட்டிய வழிபடி, ஆராய்ச்சி கூடத்தின் இடப்பக்க தாழ்வாரத்தில் நடக்க ஆரம்பித்தனர். அவ்வப்போது இருவரின் கண்களும் ஒருவரையொருவர் பார்த்துக் கொள்ள, அதனை பின்னிலிருந்து கவனித்த ரியான், “ஹலோ, என்ன ரெண்டு பேரும் கண்ணாலேயே பேசிக்குறீங்களா?” என்று வினவ, ரிஷப் அவனை முறைத்தான்.


“ப்ரோ, நீங்க இப்போ என்கிட்ட சிக்கியிருக்கீங்க. இப்படியெல்லாம் முறைக்கக் கூடாது. அப்பறம் கண்ணால பேசுறது, கையால பேசுறதை எல்லாம் விட்டுட்டு ஒழுங்கா சரியான பாதையில நடங்க.” என்றான் ரியான்.


சிறிது தூரம் நடந்தவர்கள், ஒரு இடத்தில் நிற்க, “இப்போ என்ன?” என்று கடுப்பாகவே வினவினான் ரியான்.


பக்கவாட்டிலிருந்த பெரிய அறையை சுட்டிக் காட்டியவன், “இதுக்குள்ள போற மாதிரி வழி முடிஞ்சுருக்கு.” என்றான் ரிஷப்.


“ஹ்ம்ம், உங்களை நம்ப முடியாதே.” என்ற ரியான் ரிஷபிடமிருந்து டேப்பை வாங்க, ரிஷப் அதைக் கொடுக்கும்போது அணைத்துவிட்டு கொடுத்திருந்தான்.


ரியான் அதை உயிர்ப்பிக்க முயற்சிக்கும்போது ரிஷப் மெல்ல நவியிடம் நெருங்கி, அவளின் இடையில் ஒளித்து வைத்திருந்த துப்பாக்கியை கைப்பற்றினான். அப்போது தான் நவிக்கே தன்னிடமிருந்த துப்பாக்கி நினைவிற்கு வந்தது.


ரிஷப் நவியின் காதில், இந்த ரூமுக்குள்ள ஒரு ரகசிய படிக்கட்டு இருக்கு. அதை வேகமா கண்டுபிடிச்சு மேல ஏறி வெளிய போ. அது தான் இங்க இருந்து தப்பிக்கிறதுக்கான வழி.” என்று கூற, நவியோ குழப்பத்துடன் ரிஷபை பார்த்து, “அப்போ நீங்க?” என்றாள்.


அவனோ பெருமூச்சுடன், “ரியான் சொன்ன மாதிரி ஒருத்தர் தான் வெளிய போகணும்னு இருக்கோ என்னவோ.” என்றவன் நவியின் கலங்கிய முகத்தைக் கண்டு, “இவனை சமாளிச்சிட்டு முடிஞ்சா நானும் வரேன். ஆனா, எந்த சூழ்நிலையிலும்  நீ எனக்காக காத்திருக்கக் கூடாது.” என்று அழுத்தமாக கூறினான்.


அதற்குள் ரியான் அந்த டேப்பை உயிர்ப்பித்து விட, நவியிடம் கண்ணைக் காட்டி அறைக்குள் ஓடச் சொன்னான்.


அவளும் ஒருமுறை அவனை பார்த்துவிட்டு, அந்த அறைக்குள் ஓடி கதவை மூடிவிட, அந்த சத்தத்தைக் கேட்ட ரியான் நிமிர்ந்து ரிஷபை முறைத்தான்.


*****


உள்ளே வந்த நவியோ ரிஷப் கூறியதைப் போல அந்த ரகசிய படிக்கட்டை தேடினாள். மனம் முழுக்க இறந்து போன நண்பனையும், இப்போது தனக்காக போராடிக் கொண்டிருப்பவனையும் நினைத்துக் கொண்டிருக்க, மூளை அதுவாக வேலை செய்தது.


அந்த படிக்கட்டை கண்டுபிடிப்பது ஒன்றும் சிரமமான காரியமாக தெரியவில்லை. அந்த அறைக்கு பொருந்தாத ஓவியம் ஒன்றைக் கண்டவள், அதை நகர்த்தினாள். அவள் நினைத்தது போல, அங்கு ரகசிய அறை ஒன்று தென்பட்டது. அந்த அறையின் நடுவே இரும்பு ஏணி ஒன்று இருந்தது. முடிவற்றதோ என்று எண்ணும்வகையில் கண்களுக்கு புலப்படாத தொலைவிற்கு மேலே சென்றது. 


ஒரு பெருமூச்சுடன், அவள் மேலே ஏறினாள். இருபது படிகள் ஏறியபோது, வெளியில் துப்பாக்கி சத்தம் கேட்டது. அதில் அவளின் உடல் தூக்கிப் போட, அதே இடத்தில் நின்றாள்.


அவளின் மனம் ரிஷபை நினைத்து கலங்க, பார்வையை மறைக்கும் அளவிற்கு கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. ஆனா, மனதிற்குள் சிறிதளவு நப்பாசை எழத்தான் செய்தது. ஒருவேளை ரிஷப் உயிருடன் இருந்தால் என்ற சிந்தனையும் எழுந்தது. 


அப்போது கீழே ஏதோ சத்தம் கேட்க, ரிஷப் தான் வந்துவிட்டானோ என்ற ஆவலுடன் கீழே பார்க்க, அங்கு முகம் முழுவதும் ரத்தக்காயங்களுடன் ஏணியின் அடியில் நின்றிருந்தான் ரியான்.


அவனை அப்படி பார்ப்பதற்கே மிகவும் பயமாக இருந்தது. இதில் அவனின் வில்லன் சிரிப்பும் சேர்ந்துவிட, அவள் இதயம் படுவேகமாக துடித்தது.


“என்கிட்டயிருந்து அவ்ளோ சீக்கிரம் தப்பிச்சுடலாம்னு நினைச்சியா நவி?” என்று வினவியபடி ஏணியில் ஏற ஆரம்பிக்க, அடுத்த நொடி அவளும் வேகமாக ஏறினாள்.


நொடிக்கு நொடி பயமும் பதட்டமும் அதிகரிக்க, அவளின் வாழ்நாளில் இந்த நிமிடத்தைப் போல வேறொரு நிமிடம் இருந்திருக்காது என்னும் அளவிற்கு இருந்தது. 


ஏற்கனவே, கலங்கியிருந்த கண்களின் காரணமாக அவளால் சரியாக பார்க்கக்கூட முடியவில்லை. அதன் காரணமாகவே இரண்டு மூன்று முறை தவறியும் இருக்கிறாள். எனினும், ஏதோ ஒரு உத்வேகம் அவளை உந்த ஏறுவதை மட்டும் நிறுத்தவில்லை.


எவ்வளவு வேகமாக ஏறினாலும், அவன் அவளை நெருங்கி விட்டான் என்பது அவளிற்கு தெரிந்தே இருந்தது.


இதோ, அடுத்தடுத்த நொடிகளில் அவனிடம் சிக்கிவிட போகிறேன் என்று எண்ணிக் கொண்டே மேலே ஏற, அவள் எண்ணியதைப் போலவே, அவளிற்கு இரு படிகளே பிந்தி இருந்தான் ரியான்.


தன்னைப் பிடித்துவிடுவான் என்று எண்ண, திடீரென்று அவனிற்கும் அவளிற்குமான இடைவெளி அதிகமாக, அத்தனை நேரம் கீழே குனிந்து பார்க்காதவள், முதல் முறையாக கீழே பார்த்தாள்.


அங்கு ரிஷப் உடல் முழுவதும் காயங்களுடன், ரியானை பிடித்து கீழே இழுத்துக் கொண்டிருந்தான்.


அவனை உயிருடன் பார்த்ததும் அவள் மனம் சற்று அமைதியடைவதைப் போல இருந்தது.


ஆனால் ரிஷபோ, “சீக்கிரம் மேல போ நவி. இவனை என்னால ரொம்ப நேரம் பிடிச்சு வைக்க முடியாது.” என்று கத்தினான்.


அவன் கூறியதைக் கேட்டவள், ‘அப்போ அவன் வரலையா?’ என்று சிந்தித்தது.


அவளை யோசிக்கக் கூட விடாமல், “எதையும் யோசிக்காம போ நவி.” என்று மீண்டும் கத்த, அவனின் குரலிலிருந்த ஏதோ ஒன்று அவளின் கால்களை நகரச் செய்தது.


அவ்வப்போது கீழே ரிஷப் படும்பாடுகளை பார்த்து அழுதுக்கொண்டே மேலே ஏறினாள். முன்னிருந்த வேகம் இப்போது பெருமளவு குறைந்திருந்தது.


அப்போது திடீரென்று அந்த ஏணி அதிர, திடுக்கிட்டு கீழே பார்த்தவளின் கண்களுக்கு தெரிந்தது, ரியான் அதிவிரைவாக மேலே ஏறும் காட்சி தான். அவன் வந்து கொண்டிருக்கும் வேகம், கண்டிப்பாக நவியை கொன்றுவிடுவான் போல தான் இருந்தது.


அதைக் கண்டவள் மீண்டும் தன் வேகத்தை அதிகரித்தாள். என்ன தான் அதிகரித்தாலும், ராட்சசனைப் போன்று வந்து கொண்டிருப்பவனின் வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியவில்லை.


முன்னர் போலவே, சில படிகள் தான் இருவருக்கும் வித்தியாசம் இருக்க, இம்முறை கீழே பார்த்தவளின் விழிகள் விரிந்தன. ஏனென்றால், ரியானை விட வேகமாக அவனை நெருங்கியிருந்தான் ரிஷப்.


அவள் அதைப் பார்க்கும்போதே, “இனி உனக்கு இவனோட தொல்லை இருக்காது நவி. சீக்கிரம் இங்கயிருந்து வெளிய போ. ஆல் தி பெஸ்ட்!” என்று சொல்லி லேசாக உதட்டை பிரித்து சிரித்தவன், அவள் என்னவென்று யோசிக்கும் முன்பே ரியானை இழுத்துக் கொண்டு கீழே விழுந்தான்.


அவன் ஏணியிலிருந்து கீழே விழும்போது தான், அவன் செய்யப்போகும் காரியம் நவிக்கு புரிய, “நோ நோ ரிஷப்…” என்று கத்தும்போதே அவர்கள் இருவரும் பாதி வழி கீழே சென்றிருந்தனர்.


‘தட்’ என்று சத்தம் கேட்க, இருவரும் கீழே விழுந்து இறந்தது அவளிற்கு புரிந்தது. தன் கண்முன் நிகழ்ந்த இந்நிகழ்வையும் தடுக்க இயலாமல் போன தன் இயலாமையை நினைத்து கண்ணீர் வழிய அந்த ஏணியில் நின்றிருந்தாள் நவி.


இப்போது அவளிற்கு அங்கிருந்து தப்பிக்கும் எண்ணமெல்லாம் இல்லை. ஏன், வாழ வேண்டும் என்ற எண்ணம் கூட இல்லை. இத்தனை இறப்புகளை கண்முன்னே பார்த்ததால் உண்டான விரக்தியுடன் அந்தரத்தில் நின்றிருந்தாள் நவி.


அவளின் மூளை, வேலை செய்யவே விருப்பமில்லாமல் இருக்க, திடீரென்று அவள் மனதிற்குள் கேட்டது அந்த குரல்.


“நவி, இன்னும் என்ன பண்ணிட்டு இருக்க? சீக்கிரம் மேல ஏறு!” என்று கட்டளையிட்ட ரிஷபின் குரல் அது.


மூளைக்கு அது வெறும் மாயை என்று புரிந்தாலும், மனதிற்கு அது புரியவில்லை. சுற்றிலும் தேடிக் கலைத்தவள், இறுதியாக அது மாயை தான் என்று புரிந்து கொண்டாள்.


இருப்பினும், அந்த குரலை மீற அவளால் முடியவில்லை. அவளின் கால்கள் தானாக மேலே ஏறின. முடியாதோ என்று நீண்ட அந்த பயணம் ஒருவழியாக முடிவிற்கு வந்தது.


அந்த ஏணியின் கடைசி படியை அடைந்தவள் மேலே மூடியிருந்த கதவைத் திறந்து வெளியே வர, அந்த இடமே வெள்ளையாக ஒன்றுமில்லாமல் இருப்பதைப் போல இருந்தது.


அத்தனை நேரம் அவளின் நண்பர்களின் இறப்பிலிருந்து மீள முடியாமல், தவணை முறையில் வேலை செய்து கொண்டிருந்த அவளின் மூளை இப்போது சுயத்திற்கு வர, அங்கு என்ன நடக்கிறது என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.


யோசித்து யோசித்து தலைவலி ஏற்பட, ஒரு கட்டத்தில் சோர்வின் காரணமாக மயங்கியே விட்டாள்.


மயக்கம் தெளிந்த பின்னர் அடுத்த அதிர்ச்சியை தாங்கும் அளவிற்கு சக்தி இருக்குமா அவளிடம்? 


Comments

Popular post

தீதும் நன்றும்

தீதும் நன்றும்   நேரம் காலை எட்டு மணி ... மந்தமான வானிலைக்கேற்ப அந்த காவல் நிலையமும் சோம்பி தான் இருந்தது .   அப்போது மத்திய வயதுடைய ஒருவர் அழுது கொண்டே வந்து , எஸ் . ஐ கதிர்வேலனிடம் ஏதோ பேசிக் கொண்டிருந்தார் .   அந்நபர் அழுது கொண்டே பேச , அது புரியாததால் , “ அழுகையை நிறுத்திட்டு என்ன நடந்துச்சுன்னு சொல்லுங்க .” என்று கதிர்வேலன் கூற , அந்த சத்தத்தில் கவனம் கலைந்த இன்ஸ்பெக்டர் அபிஜித்தும் அங்கு சென்றான் .   கரைபுரண்டு ஓடும் கண்ணீரை அடக்கியவராக , “ சார் ... என் குடும்பத்தை காணோம் சார் !” என்றார் அவர் .   “ முதல்ல , நீங்க யாரு , எங்க இருந்து வரீங்கன்னு தெளிவா சொல்லுங்க .” என்று அபிஜித் கேட்க , “ சார் , என் பேரு உலகநாதன் . எனக்கு வேலை துபாய்ல . அதனால என் மனைவி வசந்தியையும் , என் மகன் தேவாவையும் , என் அண்ணன் பூமிநாதன் வீட்டுல தங்க வச்சுட்டு துபாய் போயிட்டேன் . மாலப்பட்டில தான் வீடு .   என் அண்ணன் , அண்ணி , அம்மா , வசந்தி , தேவான்னு அஞ்சு பேரும் அந்த வீட்டுல தான் இருந்தாங்க . ஆனா ... இப்போ அவங்க யாரையுமே அங்க காணோம் . எனக்கு பயமா இருக்கு ச...

தனிமையில் ஓர் இரவு - சிறுகதை

ஹாய் பிரெண்ட்ஸ்...😍😍😍 சண்டே ஸ்பெஷல் ஒரு புது சிறுகதையோட வந்துட்டேன்...😁😁😁 முக்கியமான விஷயம் இந்த கதைல லாஜிக்கெல்லாம் பார்க்க கூடாது... தேடுனாலும் அது கிடைக்காது...😂😂😂 படிச்சுட்டு உங்க கருத்துக்களை சொல்லுங்க...🙏🙏🙏 தனிமையில் ஓர் இரவு “ஆதி… ஆதி…” என்று சமையலறையிலிருந்து கத்திக் கொண்டிருந்தார் கௌசல்யா.  அவரின் சத்தம் கேட்டு அங்கு எட்டிப் பார்த்தார் அந்த வீட்டின் தலைவர் பார்த்தசாரதி. “கௌசி, இப்போ எதுக்கு கத்திட்டு இருக்க..?” என்றார். “என்னது கத்துறேனா..! ஏன் சொல்ல மாட்டீங்க..? உங்களுக்கும் உங்க பிள்ளைக்கும் எல்லா வேலையும் செய்றேன்ல… என்ன சொல்லணும்… உங்க பிள்ள காலேஜ் முடிச்சு ஆறு மாசமாச்சு. இன்னும் வேலைக்கு போக வழிய காணோம்… வேலைக்கு தான் போகல, கல்யாணமாச்சும் பண்ணலாம்னா, அதுக்கும் சம்மதிக்கிற வழிய காணோம்… இதோ மணி ஒன்பதாச்சு… இன்னும் இழுத்து பொத்திட்டு தூங்குது… இதெல்லாம் எங்க உருப்படப் போகுது…” என்று வீட்டின் தலைவரை பேசவே விடாமல் புலம்பிக் கொண்டிருந்தார், அவரின் தலைவி. “இருங்க போய் எழுப்பிட்டு வரேன்… ஏய் ஆதி…” என்று பிள்ளையின் அறை நோக்கி சென்றார் அந்த அன்னை. சாரதியோ, “ஜஸ்ட் மி...

My stories

சிறுகதைகள்: தடம் மாறிய தடயம்  (Kindle) குற்றங்கடிதல்  (Kindle) வெள்ளையாடை தேவதை கருவறை தா(ண்டி)ங்கிய சுமை தனிமையில் ஓர் இரவு (மனித)மிருக வேட்டை நாவல்கள் : உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே  (Kindle) மிரட்டும் அமானுஷ்யம்  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Kindle) என்னில் இணைய, உன்னை அடைய  (Site) என் வாழ்வின் வானவில் நீதானே  (Ongoing) துஷ்யந்தனின் காதலி  (Ongoing) உன்மேல் காதல் தானா என்னுயிரே  (Ongoing) குறுநாவல்கள்: புதிராய் நீயெனக்கு  (Kindle) புதிராய் நீயெனக்கு  (Ongoing) நீயாக நான், நானாக நீ  (Kindle) நீயாக நான், நானாக நீ  (Site) வழி மாறிய பயணம்  (Kindle) வழி மாறிய பயணம்  (Site)