காட்சிப்பிழை 8
“லாஸ்ட் செவன் இயர்ஸா நான் டுவன்ட்டி த்ரீ தான்!” என்று ரியான் கூறியதைக் கேட்டு, அங்கிருந்த அனைவருமே திகைத்து அவனைப் பார்த்திருந்தனர்.
“என்ன ஏழு வருஷமா இருபத்தி மூணு வயசா?” என்று வாய்விட்டு கூறிய டோவினா, “ஒருவேளை வேம்பையர் இல்லனா ஏலியனா இருப்பானோ?” என்பதை முணுமுணுக்க அது அவளின் அருகே நின்றிருந்த நந்துவுக்கும் கேட்டது.
அவனோ பயம் பாதி ஆராய்ச்சி மீதியென ரியானை கவனித்துக் கொண்டிருந்தான். அவன் மட்டுமல்ல, அங்கிருந்தவர்கள் அனைவருமே அதைத் தான் செய்து கொண்டிருந்தனர். ரியானோ அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் எங்கோ வெறித்திருந்தான். அவன் முகமோ கசங்கி வேதனையை வெளிப்படுத்திக் கொண்டிருந்ததை ரிஷபைத் தவிர யாராலும் புரிந்துகொள்ள முடியவில்லை.
அங்கிருப்பவர்களின் சந்தேகத்தை போக்கும் வண்ணம் ரியானே விளக்கினான்.
“ஹ்ம்ம், நான் ஏழு வருஷமா இருபத்தி மூணு வயசுலயே இருக்க காரணம் ‘ஆன்ட்டி - ஏஜிங் ட்ரக்’ என்று கூற மீண்டும் அந்த இடமே நிஷப்தத்தில் மூழ்கியது.
முதுமை என்பது மனித வாழ்வின் ஒரு பகுதியாகும். உலகில் பிறக்கும் ஒவ்வொரு மனிதனுக்கும், அவன் இவ்வுலகில் கழிக்கும் ஆண்டுகள் கூட கூட, அவனின் வயதும் கூடிக்கொண்டே செல்கிறது. மருத்துவ ரீதியாக பார்த்தால், மனிதன் முதுமையடையும் போது, அவனின் செல் வளர்ச்சிதை மாற்றம் (cell metabolism) குறைந்து கொண்டே வருகிறது. ஒரு கட்டத்தில், செல் பெருக்கல் (cell multiplication) முற்றிலுமாக நின்று விட, அதனால் உடல்நிலையில் ஏற்படும் மாற்றத்தால் அவன் இறந்துவிடுகிறான்.
இதை தடுப்பதற்காக கொண்டு வரப்பட்டது தான் ‘ஆன்ட்டி - ஏஜிங் ட்ரக்’. இது மனிதனின் வயதை இயல்பான விகிதத்தில் உயரவிடாமல் தடுக்கிறது. இதன்மூலம் வேகமாக முதுமையடைவதை தடுத்து, மனிதனின் சராசரி ஆயுட்காலத்தை அதிகரிக்கலாம்.
இந்த கண்டுபிடிப்பை வெளியிட்ட சில நாட்களிலேயே மக்கள் இந்த ‘ஆன்ட்டி - ஏஜிங் ட்ரக்’கை நோக்கி படையெடுக்க துவங்க, உலகம் முழுவதுமே இதற்கு நல்ல வரவேற்பு கிட்டியது. ஆயுளை உயர்த்தும் அமுதத்தின் மேல் மக்களுக்கு உண்டான ஆசையின் காரணமாக, ஒரே வாரத்தில் இதற்கு தட்டுப்பாடு ஏற்பட்டது.
முன்பே, பணமிருந்தால் மட்டுமே கிடைக்க கூடிய இந்த மருந்து, இடையில் ஏற்பட்ட தட்டுப்பாடின் காரணமாக செல்வந்தர்களுக்கு மட்டுமே உரிமையானதாக மாறியது. அதுவும் அதற்காக முன்பதிவு செய்து காத்திருக்கும் அளவிற்கு அதன் மதிப்பு உயர்ந்திருந்தது.
அந்த அமுதத்திற்காக அவர்கள் கொடுப்பது பணம் மட்டுமல்ல என்பதை அதை பயன்படுத்தும், பயன்படுத்த காத்திருக்கும் மக்கள் உணரவேயில்லை என்பது தான் கசப்பான உண்மை.
கடந்த பத்து வருடங்களில் மருத்துவ உலகின் அரியபெரிய சாதனையாக மனிதர்களால் கொண்டாடப்படும் இந்த ‘ஆன்ட்டி - ஏஜிங் ட்ரக்’கைப் பற்றி அறியாதவர்கள் யாரும் இருந்து விட முடியுமா!
இப்போது அங்கிருப்பவர்களின் மனதில் தோன்றும் சந்தேகமெல்லாம், ரியானிற்கு அந்த மருந்து எப்படி கிடைத்திருக்கும் என்பது தான். அவனைப் பார்க்கும்போது செல்வந்தனாகவும் தெரியவில்லை. ஒருவேளை, சர்வதேச அளவில் இதை திருடுவதற்காக செயல்பட்டுவரும் மாஃபியா குழுக்களை சேர்ந்தவனோ என்ற கோணத்திலும் அவர்களின் சிந்தனை பயணம் செய்தது.
அவரவர்களின் யோசனையில் மூழ்கியிருந்த காரணத்தினால், அந்த இடம் அமைதியைத் தழுவியிருக்க, எதையும் மனதிற்குள் வைக்க தெரியாத டோவினா, இதனையும் ரியானிடமே கேட்டு விட்டாள்.
“உங்களுக்கு எப்படி அந்த ட்ரக் கிடைச்சது? நீங்க அந்த மாஃபியா கேங்கை சேர்ந்தவரா?” என்று வினவ, ரியானிடம் ஒரு விரக்தி புன்னகையே வெளிப்பட்டது.
“என்னோட பேஷன் ஃபோட்டோகிராஃபின்னாலும், ப்ரொஃபேஷனலி நான் ஒரு இன்ஜினியர். அந்த ட்ரக் வந்த புதுசுல, எங்க கம்பெனில எக்ஸ்ட்ராடினரியா வேலை செய்றவங்களை தேர்ந்தெடுத்து அந்த ட்ரகை பயன்படுத்த கட்டாயப்படுத்துனாங்க. அந்த கம்பல்ஷன்ல சிக்குனவன் தான் நான்.” என்று பெருமூச்சு விட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்.
அவனின் குரலும் பெருமூச்சுமே அதில் அவனிற்கு விருப்பமில்லை என்பதை தெளிவாகக் கூறியது.
இப்போது சற்று இயல்பிற்கு திரும்பிய நந்து, “அந்த மருந்தை போட்டதுக்காக இவ்ளோ ஃபீல் பண்றாருன்னா, அப்படி என்ன இருக்கு அதுல?” என்று புரியாமல் வினவினான்.
“ஆயுள் கூடுதுன்னு ஆசைப்பட்டு நம்ம மக்கள் அந்த ட்ரகை பயன்படுத்துறாங்களே தவிர, அந்த மருந்தோட கன்டென்ட்ஸை யாரும் கேள்வி கேக்குறதே இல்ல. அப்படியே கேள்வி கேட்டாலும் எப்படியோ அதை மூடி மறைச்சுடுவாங்க. ஹ்ம்ம், அதனால எத்தனையோ பேரு பாதிக்கப்பட்டிருக்காங்க தெரியுமா? நானே நிறைய பேரை பார்த்துருக்கேன்.” என்றான் நோலன்.
இத்தனை வருடங்களாக அந்த மருந்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்தாலும் காப்பாற்ற முடியாமல் போன வருத்தம் அவன் வார்த்தைகளில் வெளிப்பட்டது.
“ஏதாவது சைட் எஃபெக்ட்ஸ் இருக்கா?” என்று அத்தனை நேரம் மௌனமாக இருந்த நவி வினவினாள்.
“ஒண்ணா ரெண்டா! நம்மளோட அடுத்த தலைமுறையையே இழக்குற நிலையில இருக்கோம். இன்னும் இது தான் இதற்கான பின்விளைவுன்னு உறுதியா சொல்ல முடியாத அளவுக்கு ஒவ்வொருத்தருக்கும் வேற வேற பின்விளைவுகளை கண்டுபிடிச்சுருக்காங்க. ஒரு பொருள் புதுசா வந்ததும் அதை வாங்கிடனும்னு நினைக்குற மக்கள் இருக்க வரைக்கும் இப்படி தான் ஏமாத்தி அவங்க வாழ்க்கையையே கேள்விக்குறியாக்கிடுவாங்க!” என்று கோபமாகவே பேசினான் நோலன்.
அவன் கூறியதைக் கேட்டவர்களுக்கும் மனது உறுத்தியது. இத்தனை பின்விளைவுகள் இருந்தும் இன்னமும் அந்த மருந்து தடை செய்யப்படவில்லையே என்று அவர்கள் விவாதித்துக் கொண்டிருக்க, நவியோ எதேச்சையாக ரிஷபைக் கண்டாள்.
அவனின் முகமும் தெளிவில்லாமல் இருப்பதைக் கண்டவள், நோலன் போல ரிஷபும் மருத்துவன் தானே. அதனால் ஏற்பட்ட சஞ்சலமாக இருக்கும் என்று நினைத்து அவனருகே சென்றவள், அவனின் கைகளை அழுத்தி ஆறுதலளித்தாள்.
*****
அவர்களின் நேரம் ‘ஆன்ட்டி-ஏஜிங் ட்ரக்’கைப் பற்றிய பேச்சிலும் விவாதங்களிலுமே கழிந்தது. ரியான் தன் பழைய வாழ்வினை கிளறியதால் உண்டான காயங்களுக்கான மருந்தாக தனிமையை நாடினான். மற்றவர்களும் அவனை தொந்தரவு செய்யவில்லை.
இரவு நேரம் நெருங்கியதற்கான அறிகுறியாக ஜன்னல். வழியே கசிந்து கொண்டிருந்த வெளிச்சம் குறைந்து கொண்டிருந்தது.
அவர்களின் இலக்கினை தாக்குவதற்கான நேரம் வந்துவிட்டதை உணர்ந்த ரிஷப் சற்று தயங்கினான். ஏனெனில், அந்த ட்ரோன்களை கையாள்வதில் அவனை விட சிறந்தவன் ரியான். அதை இதற்கு முன்னர் நிகழ்ந்த தாக்குதல்களிலேயே உணர்ந்திருந்தான் ரிஷப். அதனை உறுதிபடுத்துவது போல் அமைந்ததே ரியானின் வாக்குமூலம்.
ஆனால், இப்போதுள்ள சூழலில் அவனை அழைக்க ரிஷபின் மனம் ஒப்பவில்லை. என்ன செய்வதென்று அவன் குழம்பி நிற்கும் வேளையில், அவனிற்கு ஆதரவு அளிப்பவன் போல, ரியானே வந்து நின்றான்.
“நாம கிளம்ப வேண்டிய நேரம் வந்தாச்சுல.” என்றவாறே வந்த ரியானின் முகத்தை ஆராய்ந்தான் ரிஷப்.
ரியானின் முகத்தில் சற்று முன்னர் வரை இருந்த சோர்வோ, பரிதவிப்போ காணவில்லை. மாறாக எடுத்த செயலை வெற்றிகரமாக முடிக்கும் உத்வேகமே இருந்தது. அதைக் கண்ட ரிஷபின் அலைபாய்ந்த மனதும் அமைதியடைந்தது.
“ஆமா ரியான் அந்த டிராகனை அழிக்குறதுக்கான நேரம் வந்துடுச்சு.” என்றான் பழைய ரிஷபாக.
“இப்போ நம்ம பிளான் என்ன?” என்று அவர்கள் இருவரின் உரையாடலில் தானும் சேர்ந்து கொண்டாள் நவி. நவியை முறைத்தவாறே அங்கு வந்து நின்று கொண்டாள் டோவினா.
“நாம எல்லாரும் ஒண்ணா இந்த இடத்தை விட்டு அந்த டிராகனை நோக்கி போறது, எனக்கென்னவோ சரியா தோணல. முதல்ல நானும் ரியானும், அந்த டிராகனை கட்டுப்படுத்துறோம். இடையில எங்களுக்கு ஏதாவது உதவி தேவைன்னா உங்களை கூப்பிடுறோம்.” என்றான் ரிஷப். அவனின் கூற்றை ரியானும் ஆதரித்தான்.
ஆனால் நவியோ, “இல்ல ரிஷப். உங்க ரெண்டு பேரையும் அங்க அனுப்பிட்டு இங்க நாங்களும் நிம்மதியா இருக்க மாட்டோம். அங்க உங்களுக்கு என்ன ஆச்சுன்னு தான் நினைச்சுட்டு இருப்போம். அதுவுமில்லாம இந்த இடத்துலயிருந்து அந்த டிராகனை நாம பார்த்த இடம் கொஞ்சம் தூரம் கூட. உங்களுக்கு ஹெல்ப் வேணும்னா கூட, அங்கயிருந்து எங்களை கான்டேக்ட் பண்றது கஷ்டம். சோ, நாங்களும் வரோம். எதுவா இருந்தாலும் சேர்ந்து ஃபேஸ் பண்ணுவோம்!” என்றாள்.
ரிஷப் யோசிக்க, “எனக்கும் நவி சொல்றது தான் சரின்னு தோணுது.” என்று நோலனும் கூறினான்.
“நோலன், ஜானோட கண்டிஷன் எப்படி இருக்கு?” என்று ரிஷப் விசாரிக்க, “இப்போ கொஞ்சம் ஓகேவா தான் இருக்கு ரிஷப். ஜானால நடக்க முடியும். ஆனா ரொம்ப நேரம் ஸ்ட்ரேயின் பண்ண முடியாது.” என்றான் நோலன்.
சிறிது யோசித்த ரிஷப் மற்றவர்களை பார்த்து, “ஓகே நீங்களும் எங்க கூட வாங்க. ஆனா, அந்த டிராகனை பார்த்த வெற்று நிலம் வரைக்கும் வர வேண்டாம். பிகாஸ் ஜானோட நிலையையும் நாம யோசிச்சு பார்க்கணும். சோ நீங்க அந்த மரங்கள் இருந்த பகுதியிலேயே இருங்க. ஏதாவது ஆபத்து வந்தா நாங்களும் அங்க வந்துடுறோம்.” என்று கூற அனைவரும் அதை ஆமோதித்தனர்.
அவரவர்களின் உடைமைகளை எடுத்துக் கொண்டு அந்த ராட்சத டிராகனை அழிக்க கிளம்பினர்.
சென்ற முறை அந்த வேலியை கீழே இழுத்துவிட்டிருந்ததால், இம்முறை மின்சாரத்தை துண்டிக்கப்பட வேண்டும் என்ற அவசியம் ஏற்படவில்லை. அந்த வேலியைத் தாண்டி வெளியே வந்துவிட்டனர்.
அடுத்து அவர்களின் பயணம், அந்த டிராகனை சந்தித்த வெற்று நிலத்தை நோக்கி இருந்தது. வழியில் மற்றவர்களை ஒரு பெரிய மரத்தின் கீழே இருக்குமாறு கூறினான் ரிஷப்.
இத்தனை நேரம் நடந்து வந்ததினால், ஜானின் கால்களிலிருந்த காயத்திலிருந்து இரத்தம் கசிந்தது. நோலன் அவனிற்கு சிகிக்சை அளித்துக் கொண்டிருந்தான்.
ரிஷபோ, தங்களுடன் நோலனையும் கூட்டிக்கொண்டு செல்ல திட்டமிட்டிருக்க, ஜானின் நிலையைக் கண்டு நோலன் அவனிற்கு மருத்துவம் பார்ப்பதற்கு இங்கிருக்க வேண்டும் என்பதை புரிந்து கொண்டான்.
அவன் செல்லாமல் தயங்கி நின்றதிலும், நோலனைப் பார்த்துக் கொண்டிருந்ததிலும், அவனின் எண்ணப்போக்கு நவிக்கு புரிந்து தான் இருந்தது. ஆனாலும், வாயைத் திறந்து அவளாக எதுவும் கேட்கவில்லை.
“க்கும், நாங்க அந்த டிராகனை நம்ம கிட்ட இருக்க ட்ரோன்ஸ் வச்சு தாக்குறப்போ எங்களுக்கு கவர் கொடுக்க யாராவது வேணும். நோலன் இப்போ இங்க இருந்தாகனும். சோ…” என்று இழுத்தவாறே நவியின் பக்கம் திரும்பினான்.
‘ஹ்ம்ம், நானா வரேன்னு சொன்னா முறைப்பான்! இப்போ இவன் பார்த்தா மட்டும் நான் அவன்கூட போகனுமா? நீயே கூப்பிடு அப்பறம் பார்க்கலாம்.’ என்று நினைத்துவிட்டு அமைதியாக இருந்தாள் நவி.
இவர்கள் இருவரும் மௌனமாக இருக்க, டோவினா, “நான் வரேன்.” என்று கூற, அதில் மற்றவர்களை விட பயந்தது ரிஷப் தான்.
இடவலமாக தலையசைத்தவன், “இல்ல டோவினா, நவி இதுக்கு முன்னாடி எங்க கூட அந்த டிராகனை எதிர்த்துருக்கா. அண்ட் அந்த முயற்சியில வெற்றியும் அடைஞ்சுருக்கா. சோ அவ வந்தா கொஞ்சம் ஈசியா ஹேண்டில் பண்ண முடியும்.” என்றான் ரிஷப்.
அவன் கூறியதைக் கேட்டு டோவினாவின் முகம் கறுக்க, நவியோ நமுட்டுச் சிரிப்பு சிரித்தாள்.
பிறகு பல எச்சரிக்கைகளை கூறிவிட்டே தங்களின் பயணத்தை தொடர்ந்தனர் மூவரும்.
செல்லும் வழியில் நவி, “தேங்க்ஸ்!” என்று ரிஷபிடம் கூற, அவனோ புருவம் சுருக்கி, “எதுக்கு?” என்று வினவினான்.
“என்னையும் ரெககனைஸ் பண்ணீங்களே, அதுக்காக தான்.” என்று கிண்டலாகவே கூற, அவனோ எதுவும் கூறாமல் முன்னே சென்றுவிட, மற்ற இருவரும் ஒருவரையொருவர் பார்த்து சிரித்துக் கொண்டனர்.
மூவரும், சென்ற முறை அவர்கள் அந்த டிராகனை எதிர்த்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர்.
“நவி, நாங்க ட்ரோன்னை இயக்கி அந்த டிராகனை எதிர்க்கும்போது, நீ லேசரை பயன்படுத்தி அதை திசை திருப்ப முயற்சி பண்ணு.” என்று ரிஷப் கூற அதை கவனமாக கேட்டுக் கொண்டாள் நவி.
“ரியான், நாம ஒருமுறை இந்த ட்ரோன் சரியா வேலை செய்யுதான்னு பரிசோதிச்சு பார்க்கலாமா?” என்று தன் அடுத்த கேள்வியை ரியானிடம் வினவ, அவனும் சம்மதித்து அந்த ட்ரோன்னுக்கான கட்டுப்படுத்தியின் மூலம் அதை இயக்கத் துவங்கினான்.
தானியங்கி முறையிலிருந்து மனித இயக்க முறைக்கு மாற்றி அமைக்கப்பட்ட அந்த ட்ரோன்னும் மெல்லிய சத்தத்தை வெளியிட்டு உயிர் பெற்றது.
அந்த ட்ரோன்னை அப்படியே மேலே உயரச் செய்து மேலும் சிறிது தூரம் அதை பறக்கச் செய்தான். அவன் அதை இலகுவாக கையாள்வதிலேயே, அவனிற்கு அதில் எவ்வளவு அனுபவம் இருக்கிறது என்பதை உணர முடிந்தது மற்ற இருவருக்கும்.
மேலும், தங்களிடம் இருந்த பெறுவியில் (ரிசீவர்) அந்த ட்ரோனால் படம்பிடிக்கப்படுவதை அவர்களால் காண முடிந்தது.
அப்போது ரிஷப் அவர்களிடமிருந்த இன்னொரு ட்ரோன்னை சுட்டிக்காட்டி அதையும் செலுத்தலாம் என்று கூற, ரியானும் அவன் கூறியதை போலவே செய்தான்.
அதைக் கண்ட நவி, “இது எதுக்கு?” என்று வினவ, “அந்த ட்ரோன்னுக்குள்ள சின்ன சைஸ் கேமராக்கள் இருக்கு. அதை அந்த டிராகன் வர பாதையில பொறுத்த போறோம். போன முறை, நமக்கு அந்த டிராகனோட உருவம் நாம இருக்க தூரத்திலிருந்து சரியா தெரியல. சோ இந்த முறையும் அதே டிஸ்அட்வாண்டேஜ்ஜா இருக்ககூடாதுன்னு இதை பிளான் பண்ணோம்.” என்று ரிஷப் கூற, இருவரின் திட்டமிடலை வெகுவாக பாராட்டினாள் நவி.
“வாவ்! நல்ல பிளான். இந்த முறை அந்த கேமராக்கள் மூலமா அந்த டிராகனோட உருவத்தை பார்த்து சரியா டார்கெட் பண்ணலாம்.” என்றாள் நவி.
“ஹ்ம்ம், நாங்க ஒரு சந்தேகத்துல தான் இதை பிளான் பண்ணோம். ஒருவேளை, நாம வரதுக்கு முன்னாடியே அந்த டிராகன் வந்துருந்தா, இந்த பிளான்னை மாத்த வேண்டியதாயிருந்துருக்கும்.” என்றான் ரிஷப்.
அந்த சிறிய வகை புகைப்பட கருவிகள் அனைத்தும் சரியான இடங்களில் பொறுத்தப்படுகிறதா என்று பார்த்து, அவற்றிலிருந்து கிடைக்கும் காணொளிகளை ஆராய்ந்து கொண்டிருந்தவர்களுக்கு மிக மெல்லிதாக அந்த சத்தம் கேட்டது. சற்று நேரத்திலேயே, சென்ற முறை போல இம்முறையும் நிலம் அதிர ஆரம்பித்தது.
அதிலேயே வருவது தங்களின் இலக்கு தான் என்பதை கண்டுகொண்டனர் அம்மூவரும்.
நவி கிளர்கதிர் ஒளிமியுடன் தயாராக இருக்க, ரிஷபும் ஆயுதங்களை கைகளில் எடுத்துக் கொண்டான். ரியான் அந்த ட்ரோன்னை தன்னிடம் திரும்பச் செய்தவன், சரியான நேரத்திற்காக காத்திருந்தான்.
“ரெண்டவதா அனுப்புன ட்ரோன்னை மட்டும் ஏன் திரும்ப செய்யல?” என்று நவி மற்ற இருவரிடமும் வினவ, “அந்த டிராகனை இந்த இடத்துக்கு கூட்டிட்டு வர வேண்டாமா.” என்று இருவருமே கூறினர்.
அதன்படி, அந்த இரண்டாவது ட்ரோன்னை அந்த டிராகனின் கவனத்தில் விழுமாறு நகர்த்திக் கொண்டிருந்தான் ரியான். அவர்களின் திட்டபடியே அது டிராகனின் கவனத்தை ஈர்க்க, சில நொடிகளில் அந்த இரும்பு டிராகனின் வரிவடிவத்தை மூவராலும் காணமுடிந்தது.
தூரத்தில் வரும் டிராகனை கண்டவர்கள், மீண்டுமொருமுறை தங்களை தயார் படுத்திக் கொண்டனர்.
“நவி, திரும்பவும் சொல்றேன். எதுவா இருந்தாலும் யோசிச்சு எங்க கிட்ட ஆலோசிச்சுட்டு பண்ணனும். அதே மாதிரி நான் சொல்றதை எல்லாம் ஏன்னு கேள்வி கேக்காம செய்யணும்.” என்ற ரிஷபின் குரலுக்கு செவிமடுத்தாளா என்பது அவளிற்கு மட்டுமே தெரியும்!
அந்த டிராகனின் கவனத்தை ஈர்க்க இவர்கள் அனுப்பிய அதே ட்ரோன்னை சுட்டு வீழ்த்தி, இவர்களின் கவனத்தை ஈர்த்தது அந்த டிராகன்.
“உன்மேல ரொம்ப கோபமா இருக்குமோ.” என்று அவர்களுள் எழுந்த பயத்தை போக்க இயல்பாக நவியை கேலி செய்தான் ரியான்.
“இருக்குமோ?” என்று வாய்விட்டு கூறியவள், “இன்னைக்கும் சான்ஸ் கிடைச்சா அதே மாதிரி வெடிக்க வைக்கலாம்.” என்று கூறி இல்லாத காலரை மானசீகமா தூக்கிவிட்டு கொண்டாள் நவி.
இவர்கள் இருவரும் பேசுவதை ஒரு பொருட்டாக கூட மதிக்காமல், அந்த புகைப்பட கருவிகளின் மூலம் அந்த டிராகனை ஆராய்ந்து கொண்டிருந்தான் ரிஷப்.
அவை மட்டுமில்லாமல், சற்று முன்னர் அந்த டிராகனின் தாக்குதலால் சிதறிய ட்ரோன் அனுப்பியிருந்த புகைப்படங்களையும் பார்த்தான்.
அவனும் செயலைக் கண்ட நவி, ‘உஃப்’ என்று பெருமூச்சு விட்டாள். அவனருகே சென்று, “என்ன பார்த்துட்டு இருக்கீங்க?” என்று வினவ, “அந்த ட்ரோன்னை எங்க தாக்குனா அதை அழிக்க முடியும்னு பார்த்துட்டு இருக்கேன்.” என்று நவியைப் பார்க்காமலேயே கூறினான் ரிஷப்
“ரியான், என்னோட யூகம் அந்த ட்ரோன்னோட தலையில தான் அதோட மொத்த கண்ட்ரோலும் இருக்கு. சோ நம்ம ட்ரோன்னை அதோட தலையில் அட்டாச் பண்ணி வெடிக்க வைக்கணும்.” என்றான்.
“ம்ம்ம், நானும் அப்படி தான் நினைச்சேன் ரிஷப். ஆனா, ட்ரோனுக்குள்ள இருக்க எக்ஸ்ப்ளோசிவ்ஸ் ரொம்ப டேஞ்சரஸ். சோ, அது அட்டாச் ஆனா மறு நொடியே நாம இங்கயிருந்து எவ்ளோ தூரம் போக முடியுமோ அவ்ளோ தூரம் தள்ளி போயிடனும்.” என்றான் ரியான்.
“நீங்க ரெண்டு பேரும் இப்படி பேசிட்டே இருந்தா அந்த டிராகன் இங்க வந்துடும். சீக்கிரம் ஆக்ஷன்ல இறங்கலாம்.” என்றாள் நவி.
நவி அந்த லேசரை உயிர்பிக்கும் முன், “நீ லேசர் ஆன் பண்ணிட்டா, அந்த கேமரால இந்த வெளிச்சம் காரணமா அந்த டிராகன் சரியா தெரியாது. சோ, நீ லேசரை முதல் முறை ஷூட் பண்ணும்போதே சரியா அதோட கண்களுக்கு குறி வை.” என்றான்.
நவியும் அதை ஆமோதித்து அதன்படியே கதிர்களை அதன் கண்களுக்கு குறிவைத்து செலுத்தினாள். இவளின் ஆயுதத்திலிருந்து கதிர்கள் உருவாகும் போதே அந்த டிராகனிற்கு அதன் எதிரிகள் இங்கிருப்பது தெரிந்திருக்க வேண்டும். அதுவும் அதன் வாயிலிருந்து தோட்டாக்களை உறும, இரண்டு திசைகளிலிருந்தும் தாக்குதல் ஆரம்பமானது.
டிராகனின் தாக்குதல் இம்முறை கடுமையாக இருந்ததால், அதனிடமிருந்து தப்பிக்க சிறிது தடுமாறித் தான் போனது நமது மூவர் குழு.
இவர்களின் நல்ல காலம், அதன் முதல் தாக்குதலை தவிர மற்ற அனைத்து தாக்குதல்களும் அவற்றின் இலக்கை அடையாமல் சென்றது. இல்லையெனில், இரண்டாவது தாக்குதலிலேயே இவர்கள் காயமடைந்திருப்பர்.
ஒருவழியாக நவியும் ரிஷபும் அதை சமாளித்தனர். இப்போது ரியானிற்கு இருக்கும் மிகப்பெரிய சவாலே, டிராகனின் தாக்குதல்களையும் மீறி அந்த ட்ரோன்னை அதனருகே சேர்க்க வேண்டும்.
அவனும் அனைத்தையும் தயாராக வைத்து ரிஷபின் சமிக்ஞைக்காக காத்திருந்தான். அப்போது ரிஷபின் துப்பாக்கியிலிருந்து வெளிவந்த தோட்டா அந்த டிராகனின் முக்கிய கட்டுப்பாட்டை தாக்கியிருக்க, அதன்காரணமாக தற்காலிகமாக அதன் தாக்குதலை நிறுத்தியிருந்தது.
“ரியான் நவ்.” என்று குரல்கொடுத்த ரிஷப், இடைவேளையே விடாமல் தொடர்ந்து தோட்டாக்களை செலுத்தினான். ரியானும் ட்ரோன்னை அந்த டிராகன் அருகே இலாவகமாக செலுத்தினான்.
டிராகனிற்கும் ட்ரோன்னிற்கும் சிறிய இடைவெளியே இருந்த நிலையில், தொடர் தாக்குதலின் காரணமாக அந்த டிராகன் தன் இரும்பு உடலை சிலுப்ப, அதன் நீண்ட சிறகு ட்ரோன் வரும் பாதையில் விரிய, இதை எதிர்பார்க்காத ரியான், “ஷிட்!” என்று கூறிக்கொண்டே அதன் பாதையை மாற்ற முயன்றான்.
அவன் எவ்வளவு தான் முயற்சித்தாலும், அந்த டிராகனின் சிறகிலிருந்த கூர்மையான பகுதி ட்ரோன்னின் பக்கவாட்டை கீறியிருந்தது. அதன் காரணமாக, அந்த ட்ரோன் கட்டுப்பாட்டை இழக்க ஆரம்பித்திருந்தது.
ரியானோ கட்டுப்படுத்தியின் மூலம் என்னைவெல்லாமோ செய்து ட்ரோன் அதன் இயக்கத்தை நிறுத்த விடாமல் பார்த்துக் கொண்டான்.
ரியான் ஒருபுறம் போராடிக் கொண்டிருக்க, ரிஷபின் தோட்டாக்களும் காலியாகும் நிலையில் இருந்தது. இனி என்ன செய்வது என்று ரிஷபும் நவியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டனர்.
மற்றைய புறத்தில் அந்த டிராகனும் சீக்கிரமாகவே அதன் இயக்கத்தை முடித்துக் கொள்ளும் நிலையில் தான் இருந்தது. தொடர்ந்து வந்த லேசர் கதிர்களால் அதன் உணர்திறன் வெகுவாக பாதிப்படைந்திருந்தது. மேலும், ரிஷபின் தோட்டாக்கள் அதன் பல பகுதிகளை சேதப்படுத்தியிருந்தன.
எந்த தரப்பினர் தங்களின் தாக்குதலை முதலில் நிறுத்தப் போகின்றனர் என்பதை பொறுத்தே மற்ற தரப்பின் வெற்றி உறுதி செய்யப்படும் நிலையில் இருந்தது.
அதிர்ஷ்டம் மூவர் குழுவின் பக்கம் இருந்தது போலும்! கட்டுப்பாட்டை இழக்க துவங்கிய ட்ரோன் மெல்ல ரியானின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது. சிறிதும் தாமதிக்காமல், ரியான் அதை அந்த டிராகனின் தலையில் இணைத்தான்.
“ரிஷப் ட்ரோன்னை டிராகனோட அட்டாச் பண்ணியாச்சு. இனி நாம இங்கிருந்து கிளம்புனவொடனே பிளாஸ்ட் பண்ணிடலாம்.” என்றான் ரியான்.
அதற்கு ரிஷப், “ரியான் நீயும் நவியும் இங்கிருந்து கிளம்புங்க. நானும் உங்களோட வந்தேன்னா அந்த டிராகனை கட்டுப்படுத்த முடியாது.” என்றான்.
“நோ வே ரிஷப். உன்னை இங்க விட்டுட்டு எங்களால போக முடியாது.” என்று நவி கூற, ரியானும் அதை அமோதிப்பது போல அமைதியாக நின்றான்.
“நவி ப்ளீஸ், விவாதம் பண்ண இப்போ நேரம் இல்ல. ஜஸ்ட் டு வாட் ஐ சே. இந்த பிளாஸ்ட்னால எனக்கு ஒன்னும் ஆகாது. நாம இருக்க இடத்துக்கும் அது இருக்க இடத்துக்கும் இருக்க டிஸ்டன்ஸ் பாரு. நான் உங்களை போக சொல்றது கூட ஜஸ்ட் அ சேஃப்டி மெசர். புரிஞ்சுக்கோ!” என்றான்.
அவள் எதுவும் கூறாமல் தன் வேலையை தொடர, அவளிடம் பேசுவது சரிவராது என்று எண்ணியவனாக,“ரியான் நீயாவது புரிஞ்சுக்கோ. இவ்ளோ தூரம் வந்த நம்மளோட எஃபர்ட் வீணாக கூடாது.” என்று கூறினான் ரிஷப்.
ரியானும் ரிஷபின் கூற்றை புரிந்து கொண்டவனாக, “ரிஷப் சொல்றது சரி தான் நவி. வா நாம போலாம். ரிஷப் கிட்டயிருக்க தோட்டாக்களும் காலியாக போகுது. இப்படி நாம டைம் வேஸ்ட் பண்ணா, நம்மள நம்பியிருக்க மத்தவங்களும் பாதிக்கப்படுவாங்க.” என்று ரியான் வரிசையாக காரணங்களை அடுக்கியதும் தான் நவி தன் நிலைப்பாட்டிலிருந்து வெளிவந்தாள்.
அவளின் முகத்தை வைத்தே அவளின் சிந்தனையை புரிந்து கொண்ட ரிஷப் அவளிடமிருந்து லேசரை பறித்துக் கொண்டு ரியானிற்கு கண்களை காட்ட, அவனும் அவளை இழுத்துக் கொண்டு ஓடினான்.
ஒரு கையில் துப்பாக்கி, மறு கையில் லேசர் இயந்திரம் என்று ரிஷப் தனியாளாக டிராகனை சமாளித்துக் கொண்டிருந்தான். அந்த டிராகன் சற்று சிதைந்திருந்ததால், அவனிற்கு அது இலகுவாகவே இருந்தது.
ஆனால், அவனின் தோட்டாவோ முடியும் தருவாயில் இருந்தது. இன்னும் இரண்டே தோட்டாக்கள் இருந்த நிலையில், “இன்னும் என்ன பண்றாங்க?” என்று முணுமுணுத்துவிட்டு, “ரியான் நவ்!” என்று தன்னால் இயன்ற அளவு கத்தினான்.
அதற்காகவே காத்திருந்ததைப் போல ரியான் அந்த ட்ரோன்னிற்கான கட்டளையை பிறப்பிக்க அதை சரியாக நிறைவேற்றும் பொருட்டு பலமான சத்தத்துடன் வெடித்தது அந்த ட்ரோன். அதனுடன் அந்த பிரம்மாண்ட இயந்திரமும் வெடித்து சிதறியது.
வெடித்து சில நொடிகளான பின்பும் கூட அந்த சத்தம் கேட்டுக் கொண்டேயிருப்பதைப் போல தோன்றியது ரியானிற்கும் நவிக்கும். பாரிய வெடிப்பு நிகழ்ந்ததை உணர்த்துவது போல நாலாபுறமும் கரும்புகை மண்டலமே காட்சியளிக்க, அதனால் அருகில் இருப்பதைக் கூட பார்ப்பதற்கு சிரமமாக இருந்தது இருவருக்கும்.
நவியின் மனமோ ரிஷபின் பாதுகாப்பை பற்றியே எண்ணிக் கொண்டிருந்தது. இந்த புகை எப்போது மறையும், அவனை எப்போது காணலாம் என்று ஒவ்வொரு நொடியையும் எண்ணிக் கொண்டிருந்தாள். அவளுடன் இருந்த ரியானிற்கும் அதே நினைவு தான்.
அடுத்த பத்து நிமிடங்களில், அந்த புகை ஓரளவு குறைந்திருக்க, இருவரும் ரிஷப் நின்ற இடத்திற்கு ஓடினர்.அவர்கள் கால் வைக்கும் இடத்திலெல்லாம் வெடித்து சிதறிய பகுதிகளே இருந்தன. இதற்கு நடுவே ரிஷப் பாதுகாப்பாக இருப்பானா என்ற கேள்வியே இருவரின் மனதிலும் தோன்ற அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல் தங்களின் தேடுதலை தொடர்ந்தனர்.
அப்போது சற்று தொலைவில் சிதறிய பகுதிகளுக்கு இடையே ஒரு கரம் தென்பட, நவி அதை ரியானிற்கு காட்டினாள்.
சில சமயங்களில் மூளை கூறுவது உண்மையென்று தெரிந்தாலும், அதனை நம்ப மறுக்கும் மனம். இப்போது நவியும் அத்தகைய நிலையிலேயே இருந்தாள்.
Comments
Post a Comment
Please share your thoughts...